ஓம் சாந்தி ஓம் விமர்சனம்

குறித்த நேரத்தில் இந்தப்படம் வந்திருந்தால், சில மாதங்களுக்கு முன்னால் வந்த மாஸ், ‘பொடிமாஸ்’ ஆகியிருக்கும்! ஏன்? சிலேட்டு ரெண்டு, ஆனா சித்திரம் ஒண்ணுதானே? ஆமாங்க ஆமாம்… மாஸ் கதையும், இந்த படத்தின் கதையும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களோடு தயாரிக்கப்பட்டுள்ளது. பெருத்த வித்தியாசம் என்னவென்றால், மாஸ்-ல் மாஸ் ஹீரோ சூர்யா. இதில்? மார்க்கெட்டில் ஈரப்பட்டாசு ஆகிவிட்ட ஸ்ரீகாந்த்!

இது தேவையில்லாத ஒப்புமையாக இருந்தாலும், ஒரே கதையோடு இரு படங்களும் வந்திருப்பதால் ஒப்பிட்டுதானே ஆக வேண்டும்?

பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகிறது. தப்பித்து உயிர் பிழைக்கிறார் ஸ்ரீகாந்த். சில தினங்களுக்கு பிறகு அவரை பின் தொடர்கிறார்கள் சிலர். ஒவ்வொருவராக தங்கள் பிரச்சனையை சொல்ல, அவர்களுக்காக விட்டேனா பார் என்று கோதாவில் குதிக்கிறார் ஸ்ரீகாந்த். நடுநடுவே இவருக்கும் நீலம் உபாத்தியாவுக்கும் லவ். அதுவரைக்கும் நாம் செய்கிற உதவியெல்லாம் இறந்து போன ஆத்மாக்களுக்காக என்பதே தெரியாமலிருக்கும் ஸ்ரீகாந்த், தன்னிடம் உதவி பெற்ற வினோதினி, போட்டோவில் பூமாலையோடு இருப்பதை கண்டு ஷாக் ஆக, இன்டர்வெல் விடுகிறார் இயக்குனர் சூர்ய பிரபாகர்!

செகன்ட் பார்ட்டில் இவரை மன நோயாளி என்று கருதும் காதலிக்கு, தான் அப்படில்லை என்று நிரூபித்து, மிச்சமிருக்கும் ஆத்மாக்களுக்காக சண்டை போட்டு, லவ்வரை கை பிடிப்பதோடு சுபம்.

ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு திரையில் ஸ்ரீகாந்த். அதே சார்மிங், அதே சாக்லெட் பாய் தோற்றம். நடிப்பிலும் பல படிங்கள் முன்னேறியிருக்கிறார். குறிப்பாக அந்த ஆக்சிடென்ட் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார். இவருக்குள் ஒரு பத்து வயசு பையன் ஆவி புகுந்து கொள்கிறது. அப்போது அதே வயசு பையன் போலவும், ஒரு பெரியவரின் ஆவி தனக்குள் புகுந்து கொள்ளும்போது அந்த பெரியவர் போல நடிக்க முயற்சித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். சற்றே விபரீத முயற்சிதான்! படத்தில் இவருக்கு தோஸ்த் ஆக ஒரு மலையாள நடிகரை கோர்த்து விட்டிருக்கிறார்கள். நமது பரிதாபம் ஸ்ரீகாந்த் மேல்தான் வருகிறது. சூரி மாதிரியோ, மயில்சாமி மாதிரியோ ஒரு நடிகர் அமைந்திருந்தால், பூவோடு சேர்ந்து ஸ்ரீகாந்தும் சிரிக்க வைத்திருப்பாரோ?

ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நீலம் உபாத்தியாயா. சில காட்சிகளில் பொம்மையாகவும், சில காட்சிகளில் வெறுமையாகவும் இருக்கிறார். அடிக்கடி தனியாக பேசிக் கொண்டிருக்கும் காதலனை மீட்க நினைத்து, செமத்தியாக ஒரு அறையும் வாங்குகிறார். நம்ம ஊர்லேயே எவ்வளவோ கனகாம்பரங்கள் இருக்க, இந்த பிளாஸ்டிக் பூவை எங்குதான் பிடித்தார்களோ?

நான் கடவுள் ராஜேந்திரன் வருகிற அந்த போர்ஷன் மட்டும் சிரிப்போ சிரிப்பு. அதுவும் தன் அப்பாதான் ஸ்ரீகாந்தாக மறுபிறவி எடுத்து வந்ததாக நம்பி, தன் அம்மாவை தேடிக் கண்டு பிடித்து இவரோடு கோர்த்துவிடுகிற போது தியேட்டரே ‘கொல்’லாகிறது. அதுவும் டாடி மம்மி பப்பி ஷேம் என்றொரு பாட்டு வேறு. ராஜேந்திரனுக்கென்றே பொருந்தி விடுகிற ஐட்டங்களாக தேடிப் பிடிக்கிற இயக்குனர்களில் இப்பட இயக்குனருக்கும் பாஸ் மார்க்!

போலி மருந்துக்கடை, குழந்தை சாவு என்று சுற்றி வளைத்து நாட்டை திருத்த முயல்கிறார் டைரக்டர். அப்போதெல்லாம் தியேட்டரில் ஒலிக்கும் ரீரெக்கார்டிங்கை மீறி கொட்டாவி சப்தம் ஒலிக்கிறது. காலம் மாறிப்போச்சு. ஓவர் சென்ட்டிமென்ட்டை ஒரு ரசிகனும் ஒப்புக் கொள்வதேயில்லையே டைரக்டர்? ஆனாலும் நூல் பிடித்த மாதிரியான ஒரு திரைக்கதை அமைத்திருக்கிறார்… அதற்காக மட்டுமே ஒரு ஆஹா!

விஜய் எபிநேசரின் இசையில் மழைத்துளி அழகா, ஆத்தோரம் வீடு கட்டி பாடல்கள் இனிமை. மற்றதெல்லாம் ஒரே பேயிரைச்சல்! பின்னணி இசை? இன்னும் சுத்தம்! கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவில் அந்த பஸ் விபத்துக் காட்சி திகீர்.

படத்தில் ஆவிகளை சாந்தியாக்கி அனுப்புகிறார்கள். தியேட்டரில் ஆடியன்ஸ் சாந்தமாக கலைகிறார்களா என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actress Sanjana Sing Latest Stills

Close