ரீலுக்கு ரீல் விமர்சனம் செய்யும் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் விமர்சகர்களுக்கு சாட்டையடி!

இப்படியொரு தலைப்பை படித்ததும் ஆன் த ஸ்பாட்டிலேயே ரத்த வாந்தி எடுக்கிற அளவுக்கு கோபப்படும் வலைதள வல்லூறுகளுக்கு… விஷயம் ரொம்ப சீரியஸ் ஆகிக் கொண்டிருக்கிறது. அதை உணர்த்தும் செய்திதான் இது. ஓவியர் ஸ்ரீதர், ‘மய்யம் ’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் சாதாரண படமல்ல. இந்திய சினிமாவில் முதல் முயற்சி. கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களின் திரைப்படம் உருவாக்குகிற ஆசைக்கு தீனி போட்டிருக்கிறார் ஸ்ரீதர். இயக்குனர், இசையமைப்பாளர் தொடங்கி படத்தின் முக்கிய வேலைகளை பார்க்கும் அத்தனை பேரும் ஸ்டூடன்ஸ். ரோபோ சங்கர் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இதில்தான் ஒரு காட்சி. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கே தனது படை பரிவாரங்களுடன் வருகிறார் ரோபோ சங்கர். அங்கு இயக்கிக் கொண்டிருக்கும் இளம் வயதுக் காரர் ஒருவரிடம், ‘இந்த படத்தை எந்த இங்கிலீஷ் படத்துலேர்ந்து சுட்ட?’ என்று கேள்வி கேட்கிறார். ‘இங்க எவனும் சொந்த கதையை வச்சு படமாக்க மாட்டீங்களே…’ என்று அங்கலாய்க்கிறார். அதற்குள் ‘ஈசிஆரில் சொந்தமா கதை எழுதி ஒருத்தர் படமாக்குறார்ணே…’ என்று இன்னொருவர் காதை கடிக்க, ‘அதெப்படிடா சொந்தமா கதை எழுதுவானுங்க. அதையும் பார்த்துருவோம்’ என்று கிளம்புவார்.

அதுவரை பயந்து போயிருக்கும் டைரக்டர், ‘முன்னெல்லாம் படம் பார்த்துகிட்டு இருக்கும் போதே பேஸ்புக், ட்விட்டர்ல விமர்சனம் பண்ணுனாங்க. இப்ப ஷுட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து ஷுட்டிங் நடக்கும் போதே விமர்சனம் பண்றாங்களே… என்று அதிர்வதாக முடிகிறது அந்த காட்சி.

‘பின்ன என்ன சார்? அவங்களோட அட்ராசிடி நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே போவுது. அதான் ’ என்றார் ஸ்ரீதர். ‘பேங்க் கொள்ளை பற்றிய படம் இது. ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியா முழுக்க ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்காங்க. இந்த படம் அது குறித்துதான் பேசப் போவுது’ என்றார் அருகிலிருந்த இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன்.

‘சார்… இந்த படத்துல வேலை பார்க்குற யாருமே இதுவரைக்கும் ஷுட்டிங்கை வேடிக்கை கூட பார்த்ததில்ல. நாங்களே ஒரு படம் எடுக்குறோம். எப்படியிருக்குன்னு பார்க்கதானே போறீங்க’ என்றார்.

அந்த வலைதள வல்லுனர்களை நினைச்சாதான்…. ?

Read previous post:
ஜி.வி.பிரகாஷ் ஒரு ஐட்டம்! கூட்டத்தை சிரிக்க வைத்த பார்த்திபன்

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாராதான் எனக்கு ஜோடி’ என்று சாய்ஸ் வைத்து செலக்ட் பண்ணுகிற நிலைமையில் இல்லை ஜி.வி.பிரகாஷ். ஆனால் அப்படியொரு நிலைமை வந்துருமோ என்று தோன்ற வைத்தது...

Close