ஒரு தோழன் ஒரு தோழி – விமர்சனம்

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு மத்தியில் கதர் புடவை மாதிரி எளிமையாக, அதே நேரத்தில் கம்பீர அழகுடன் ஒரு படம்! படத்தின் மேக்கிங்கில் ‘தான்’ என்ற அகந்தையில்லை. ஆனால் கதையில், அதை சொல்லும் விதத்தில், ‘நான்’ என்ற நம்பிக்கையோடு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் மோகன். ‘உங்கள் நம்பிக்கைக்கு முதல் பாராட்டு. உங்கள் படத்திற்கு பெருகட்டும் சீராட்டு!’

எப்பவோ ஒரு காலத்தில் மண் குவித்து உட்கார்ந்து ‘ஒருதலை ராகம்’ பார்த்த நிறைவை தருகிறது படத்தின் எளிமையும், கதாபாத்திரங்களின் தேர்வும். படத்தின் நாயகி அஸ்தராவின் கேரக்டரும் கிட்டதட்ட ஒருதலை ராகம் பட நாயகி ரூபாவை போலவே இருப்பதால் படம் தொடங்கிய சிறிது நேரத்தில், மேக்கிங்கில் இருக்கும் குறைகள் எதுவுமே தெரியாமல் படத்தோடு ஒன்றிப் போகிறோம். அதற்கப்புறம் நம்மை இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் மனோதீபனும், கிருஷ்ணாவும், அஸ்தராவும்.

ராஜபாளையம் அருகிலிருக்கும் குக்கிராமம். அதிகம் படித்திராத இரண்டு நண்பர்கள். சைக்கிளில் வேலைக்கு போகிற போது தங்களுக்குள் சைக்கிள் போட்டி வைத்துக் கொள்கிறார்கள். வெல்கிறவருக்கு தோற்கிறவர் பரோட்டாவும், சினிமா டிக்கெட்டும் ஸ்பான்சர் செய்ய வேண்டும். அடிக்கடி தோற்றுப்போவது மனோதீபன்தான். சைக்கிள் விளையாட்டில் தோற்றுப் போகிற நண்பன், காதலில் ஜெயிக்க வேண்டும் என்று அக்கறைப்படுகிறான் நண்பன் கிருஷ்ணா. அஸ்தராவை ஒருதலையாக காதலிக்கும் மனோதீபன், அடிக்கடி அவளை தொந்தரவு செய்ய, ஒரு கட்டத்தில் தன் குடும்ப வறுமையை சொல்லி அழுகிறாள் அவள். ‘எங்க குடும்பத்துல படிக்கிறவ நான் மட்டும்தான். நிறைய கடன் இருக்கு. வேலைக்கு போய் அடைக்கணும்’. இது அவள் லட்சியம். எப்படியோ காதல் கிளிக் ஆகிற நேரத்தில், கதையில் பெரும் திருப்பம்.

அஸ்தரா தற்கொலை செய்து கொள்கிறார். அதை தொடர்ந்து நடக்கும் கொலைகளும். இந்த கொலையை நான்தான் செய்தேன் என்று சரண்டர் ஆவதற்கு நண்பர்கள் இருவரும் போட்டி போடுவதும் எண்ட்!

யாருக்கும் மேக்கப் இல்லை. அப்படி அப்படியே நிற்பவர்களை அப்படி அப்படியே நடிக்க வைத்த உணர்வு. ஆனால் தேர்ந்த நடிகர்களே பிச்சை வாங்குகிற அளவுக்கு நடித்திருக்கிறார்கள் மனோதீபனும், கிருஷ்ணாவும். அதிலும் சதா சர்வகாலமும் குடித்துக் கொண்டேயிருக்கும் கிருஷ்ணாவின் கேரக்டர் அழுக்கில் புரட்டிய லைப்பாய் சோப்பு. கதாநாயகி அஸ்தரா துளியும் அழகில்லை. அவ்வளவு ஏன்? கூட்டத்தில் நிற்க வைப்பார்களே… க்ரவுட் ஆர்ட்டிஸ்ட்? அந்த லெவலுக்கு கூட இல்லை. ஆனால் ஆரம்பத்தில் ‘பிகர் மொக்கையாருக்கே…’ என்று அதிர்ச்சி தரும் அவர், தற்கொலை செய்து கொள்ளும் போது பதற விடுகிறார். அதுதான் அந்த கேரக்டரில் பொங்கி வழியும் அழகு!

கதாநாயகிக்கு அம்மா, வட்டிக்காரர் கேரக்டர், படத்தில் சில நிமிஷங்கள் தலைகாட்டும் லோக்கல் கரை வேட்டிகள் என்று எல்லாருமே கொடுத்த வேலையை சிரத்தையோடு முடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தில் வரும் சைக்கிள் போட்டி பல இடங்களில் வந்தாலும், அஸ்தராவுக்கும் கிருஷ்ணாவுக்குமே ஒரு முறை வருகிறது. அந்த சுச்சுவேஷன், அந்த போட்டி முடிவில் அஸ்தரா பேசுவதெல்லாம் ஒரு தேர்ந்த இயக்குனருக்குரிய அழகோடு வடிவம் தரப்பட்டுள்ளது. இறுதியில் கிளைமாக்சில் கூட முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிற போது சைக்கிள் போட்டி மீது ஒரு காதலே வந்துவிடுகிறது.

வானம் பார்த்த பூமி போல வெறிச்சோடி கிடக்கும் கதைக்களம், ஏதோ ஒரு விதத்தில் படத்தின் கதையை இன்னும் இன்னும் பிரமாதப்படுத்துகிறது. ஒளிப்பதிவாளருக்கு லைட்டிங் விஷயத்தில் கடும் வஞ்சகம் செய்திருக்கிறார்கள். (பண நெருக்கடி?) அதையும் சமாளித்து ஓட்டை பானையில் கொழுக்கட்டை சுட்டிருக்கிறார் அவர். பிரமாதம்.

மெரீனா பீச்சில் சுனாமி நேரத்தில் சோழி விளையாட போனதை போல, இப்படியொரு நல்ல படத்தை பாபநாசம் போன்ற பெரும் படங்கள் வருகிற நேரத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அதுதான் கவலை.

நல்ல பட விரும்பிகள், தேடிச்சென்றாவது ஆதரவு கொடுத்தால் மீண்டும் சில ஒருதலை ராகம்கள் வெளிவரலாம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
பிரபுதேவா அழைப்பு விஜய் சேதுபதி யெஸ்!

வடக்கே வெற்றி இயக்குனராக திரிந்து கொண்டிருந்தாலும், பிரபுதேவாவின் கண்கள் தமிழ்நாட்டிலும் நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு உதாரணம்தான் பின்வரும் மேட்டர். பாலிவுட்டில் கோடி கோடியாக கொட்டிக்...

Close