என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப் பார்க்க வேண்டாம்! ரிவர்ஸ் அடிக்கிறார் பா.ரஞ்சித்
தமிழ்நாட்டில் எவ்வளவோ சாதி இருக்கிறது. ஆனால் சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கிற சாதியும் இருக்கிறது. கோடம்பாக்கத்திலிருக்கும் பலர் இந்த சாதிதான். இந்த கண்கூடான உண்மை, மூன்று படங்கள் இயக்கிய பா.ரஞ்சித்துக்கு தெரியாமல் போனது எப்படி என்பதுதான் ஆச்சர்யம். சாதி அடையாளத்தோடு எவர் வந்தாலும், அது சின்னக் கவுண்டராக இருந்தாலும் சரி, தேவர் மகனாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கண்ணுக்கு தெரியாத ஊசியை ஏற்றி, கவலைக்கிடமாக்குவதில் ரசிகர்களுக்கு நிகர் இல்லை. இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உண்டு.
ரஜினி என்ற ஒரே ஒரு தங்கத் துடுப்பை மட்டும் வைத்துக் கொண்டு கபாலியில் கரை சேர்ந்த பா.ரஞ்சித்துக்கு கோடம்பாக்கத்தின் நிஜ முகம் இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்கிறது. படம் வெளிவந்த சில நாட்கள் வரைக்கும் கபாலியில் ஒலிக்கும் சாதிக்குரலுக்கு ஆதரவாக பேசி வந்தவர், திடீரென்று ரிவர்ஸ் அடித்துவிட்டார். இதற்கு காரணம், சூர்யாவின் படம் கைநழுவிப் போனது மட்டுமல்ல, இன்னும் பல பல.
இந்த நிலையில் அவர் அந்திமழை இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில் மிக தெளிவாக ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார். இதை படித்த பின்பாவது அவரை உசுப்பிவிட்டு குளிர் காய்ந்தவர்கள், அமைதியாக இருப்பார்களா? இதோ ரஞ்சித்தின் பதில்-
நான் சாதியற்றவன். என்னை ஒரு சாதிப்பெயர் போட்டு எழுதுவதை நான் விரும்புவதில்லை. என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப்பார்க்கவேண்டாம். நான் சாதியை ஒழிக்கவேண்டும் என்று வந்திருக்கிறேன். நான் செய்யும் வேலைக்கு நான் சாதியற்றவன் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆளாக நிறுத்துவதை நான் ஆதரிக்கமாட்டேன். சுயசாதி பெருமிதம் எதற்கு இங்கே? அந்தப் பெருமிதம்தான் நாளடைவில் உனக்குக் கீழே இன்னொரு சாதியை ஒடுக்க நினைப்பதில் போய் முடிகிறது. ஆகவே சாதிப்பெருமை வேண்டாம்.
சமூக வலைத்தளங்களில் கபாலியை ஒட்டி உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு இயக்குநர் பா.இரஞ்சித் அளித்த பதிலின் சிறு பகுதிதான் இது.