தேர்தலில் நிற்கும் பி.சி.ஸ்ரீராம்! தோற்கடிக்க துடிக்கும் கோஷ்டி!! மரியாதையே உன் விலை என்ன?

தமிழ்சினிமா ஒளிப்பதிவாளர்களில் மிக மிக முக்கியமானவர் பி.சி.ஸ்ரீராம். இந்தியா முழுக்க தமிழனின் பெருமையை நிலை நாட்டியவர். அதுமட்டுமல்ல, இன்று இந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் எராளமான ஒளிப்பதிவாளர்களும் பி.சி.ஸ்ரீராமின் சிஷ்யர்கள்தான். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிற அவரையே ஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் நிற்க வைத்துவிட்டது சூழ்நிலை.

2003 க்கு பிறகு ஒளிப்பதிவாளர் சங்கத்தில் தேர்தலே நடைபெறவில்லையாம். அங்கும் ஏராளமான பிரச்சனைகள். அடிதடி! போலீஸ் உள்ளே புகுந்து சங்கத்திற்கே சீல் வைத்துவிட்டது. எல்லா பிரச்சனைகளும் தீர்ந்த பின் இதோ- மறுபடியும் அடுத்த பிரச்சனையை கையில் எடுத்துவிட்டார்கள்.

சங்கத்தில் என்னதான் நடக்கிறது? விசாரித்தால், நடிகர் சங்க பஞ்சாயத்தை விடவும் நாலு மடங்கு ஜாஸ்தியாக இருக்கும் போலிருக்கிறது இங்கிருக்கும் பிரச்சனை. பெப்ஸி அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த சிவா, ஒரு ஒளிப்பதிவாளரும் கூட. அவர் இந்த முறை இந்த தேர்தலில் பி.சி.ஸ்ரீராமை எதிர்த்து நிற்கிறார். ஏற்கனவே இவர் தலைவராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாகவும் தட்டிக் கேட்க போனவர்களை தாக்கியதாகவும், அதையடுத்து எழுந்த அடிதடியில்தான் சங்கமே சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அன்று சிவாவுக்கு எதிராக செயல்பட்ட பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன்தான் இந்த முறையும் அவருக்கு எதிராக துருப்பு சீட்டுகளை நகர்த்தி வருகிறாராம்.

இது ஒருபுறமிருக்க, நடிகர் சங்க தேர்தலில் எப்படி நாடக நடிகர்களின் ஓட்டுதான் தலைமையை தீர்மானிக்குமோ, அதே நிலைமையை இங்கும் ஏற்படுத்திவிட்டாராம் சிவா. சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்களையும் இந்த சங்கத்தில் உறுப்பினராக்கிவிட்டார். படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் கேமிராமேன்களை விட, இந்த சின்னத்திரை ஒளிப்பதிவாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு இருக்கிறது. இவர்கள் அத்தனை பேரும் தற்போது சிவாவுக்குதான் ஆதரவாக இருக்கிறார்களாம்.

இந்தியா முழுக்க நடைபெறும் படப்பிடிப்புகளை இந்த சங்கம் நினைத்தால் நிறுத்திவிடலாம் என்கிற அளவுக்கு செல்வாக்கு படைத்த சங்கமாக இருக்கும் இதற்கு, வழக்கத்தை விடவும் இந்த முறை பரபரப்பை கூடியிருக்கிறது. காரணம் பி.சி.ஸ்ரீராம் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதுதான்.

பி.சி. போன்ற சீனியர்களை போற்றி புகழ வேண்டியவர்கள் அவரையே எதிர்த்து போட்டியிடுவது நல்லதல்ல. மரியாதைக்குரிய அவரை தாமாகவே முன் வந்து பொறுப்பில் அமர வைப்பதுதான் நியாயமான விஷயம். இவர்கள் பி.சி யை எதிர்த்து போட்டியிடுவது எப்படியிருக்கிறது என்றால், ரஜினி நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், அவரை எதிர்த்து ஆனந்தராஜூம் மன்சூரலிகானும் போட்டியிடுவதை போல இருக்கிறது.

என்ன செய்ய? கலி முத்தி போச்சே!

1 Comment
  1. J.Jai samyak says

    ஒப்புமை சரியில்லை மற்றபடி எல்லாம்சரி

Reply To J.Jai samyak
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
வேதாளம் – பேய் படமா, இல்லையா?

கோடம்பாக்கத்தில் இது பேய் சீசன்! நல்லவேளை, ரஜினி கமல் அஜீத் விஜய் தவிர மற்ற எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. சூர்யா வரைக்கும் கூட பேய்...

Close