பேட்ட / விமர்சனம்

கயிறை தொலைத்த பம்பரம் போல கவலைக்குரிய நிலையிலிருந்த ரஜினியின் மார்க்கெட்டை உயிரை கொடுத்து மீட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். கும்மிடிப்பூண்டி ரசிகனுக்கு மட்டுமல்ல, கோலாலம்பூர் ரசிகனுக்கும் பிடித்த ரஜினியை மெனக்கெட்டு இறக்குமதி செய்திருக்கும் கா.சு வுக்கு அகில உலக ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி ஆலங்கட்டி மழையே தூவலாம்! நின்றால் மாஸ்… நடந்தால் மாஸ்… திரும்பினால் மாஸ்… அட, திக்கிப் பேசுனாலும் மாஸ் என்று பிரமாதப்படுத்தியிருக்கிறார் ரஜினி. இப்படியொரு ‘விண் கல்’லை அதன் அருமை தெரியாமல் துணி துவைக்க பயன்படுத்திய முந்தைய இயக்குனர்களை மன்னிப்பாய் பரம பிதாவே!

69 வயசு மனுஷனை 29 வயசு இளைஞனாய் சுழல விடுவது சுலபமில்லை. அதை ஒரு யூனிட்டே சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறது. ரஜினியும் சுண்டு விரலால் தோசை சுடாமல், தன் அத்தனை செல்களாலும் உழைத்திருக்கிறார். ஹேப்பியோ ஹேப்பி!

பலத்த ரெகமன்டஷனில் ஹாஸ்டல் வார்டனாக ஒரு கல்லூரிக்கு வந்து சேர்கிறார் ரஜினி. சரக்கடித்த குரங்குகள் போல வாலாட்டும் அத்தனை பேரையும் முதல்நாளே தன் கைக்குள் அடக்கி, ‘மூடிட்டு இருங்கடா’ என்கிறார். எல்லாரும் கப்சிப். அதற்கப்புறம் ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ஏன் அங்கு வந்தார் ரஜினி என்கிற உண்மை புலப்பட, கதை வேறொரு களத்தை நோக்கி படு ஸ்பீடாக!

ஃபைட் சீக்வென்ஸ்கள் எவ்வித இன்ட்ரஸ்டும் இல்லாமல் நகர்வதுதான் நாம் பார்த்த தமிழ் படங்களின் தலையெழுத்து. ஆனால் அந்த ஃபைட்டுக்கு முன்னும் பின்னும் கூட ரசிகனை சீட் நுனிக்கு நகர்த்தி படபடக்க விடுகிறார் கார்த்திக் சுப்புராஜ். ஃபைட் துவங்குவதற்கு முன் ரஜினி பேசுகிற பன்ஞ் டயலாக்குகளால் தெறிக்கிறது தியேட்டர்.

இடைவேளை வரைக்கும் ரஜினி ரஜினி என்கிற ஒரு சக்தியை வைத்தே நேரத்தை மின்னலாக நகர்த்துகிறார் டைரக்டர். சில நிமிஷ தென்றலாக வந்து போகிறார் சிம்ரன். அதற்கப்புறம் சசிகுமார், த்ரிஷா, நவ்சுதீன் சித்திக், விஜய் சேதுபதி என்று மேலும் சில முகங்கள் உள்ளே வர, சற்றே தொய்வுடன் நகர்கிறது படம்.

இதில் த்ரிஷாவையும் சசிகுமாரையும் வேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். பெருங்கூட்டத்தில் இரைந்த பேல் பூரி போலாகியிருக்கிறார்கள் இருவரும். கிடைத்ததை விடக்கூடாது என்ற முனைப்பு தெரிகிறது விஜய் சேதுபதியிடம். ‘ஆன்ட்டி இண்டியன்’ என்று சொல்லிக்கொண்டே ஒருவனை சுட்டுத்தள்ளுகிறார். இந்துத்வா வெறி கொண்ட இளைஞன் கேரக்டர். அதுபோதாதா… தன் நக்கலையும் குழைத்து அடிக்கிறார் வி.சே. இருந்தாலும், அவ்வளவு சூடும் ஆறிப்போகும்படி ஆகிறது விஜய்சேதுபதியின் கடைசி காட்சி!

ஆஸ்துமா பேஷன்ட், அப்நார்மல் பிபி என்று நவ்சுதீன் சித்திக் சீக்கு வந்த கோழியாகி கிடக்கிறார். ஆனால் மிஷின் கன் சகிதம் அவருடன் போர் நடத்தக் கிளம்புகிறார் ரஜினி. அதுபோன்ற முரண்களை கவனிக்காம விட்டுட்டீங்களே, கார்த்திக் சுப்பு? இருந்தாலும் இந்துத்வாவின் கோர முகத்தை துணிச்சலாக விமர்சித்ததற்காகவே சபாஷ்.

ரஜினி படத்திற்கு லாஜிக் எதற்கு என்று நினைத்திருக்கலாம். மாமூல் கேட்பதற்காக கூட ஒரு போலீஸ் தலையை காணவில்லை படத்தில். அவ்வளவு கொதிப்பான மதுரையில், நார்த்திலிருந்து வந்து குண்டு வீசிவிட்டு தப்பிவிடுவார்களாம்… தூங்கிட்டீங்களா கா.சு?

நிகழ்கால காளி, பிளாஷ்பேக் ‘பேட்ட’யாக வருகிற காட்சிகள் அத்தனையும் பிரமிப்பு. அந்த கால ரஜினியை குளோனிங் எடுத்ததைபோல அவ்வளவு பளிச்சென இருக்கிறார். சமயங்களில் சூர்யாவை பார்த்தது போலவே தோற்றம். யார் யாரெல்லாம் மெனக்கெட்டீங்களோ, பலத்த நமஸ்காரம்.

அனிருத்தின் இசைக்கு நடுவே ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் இளையராஜா, எம்.எஸ்.வி பாடல்கள் ஒரு ஏக்கத்தை தருகிறது. இந்த கவலையெல்லாம் நமக்கெதுக்கு என்று சவுண்டு எழுப்புகிறார் அனி. சில பாடல்கள் யூத்துகளுக்கேற்ற இன்ப ஊற்று!

திருவின் ஒளிப்பதிவு கண் கொள்ளாத் திருவிழா! பழைய ரஜினி மீட்பு இயக்கத்தின் முதல் மெம்பரே இவர்தான். கொடுத்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்.

பரமனுக்கு விபூதி, முருகனுக்கு பஞ்சாமிர்தம், விநாயகனுக்கு கொழுக்கட்டை, முனீஸ்வரனுக்கு முட்டை குருமா என்று வயிறு அறிந்து பரிமாறுவதுதான் பக்தனுக்கு அழகு. அப்படியொரு அழகான இடத்தை பிடித்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். மறுபடியும் ரஜினிக்காக ஒரு ‘படையல்’ போடுங்க பக்தா!

-ஆர்.எஸ்.அந்தணன்

பின் குறிப்பு- படத்தில் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? என்று யாரிடமோ கேட்கிறார் ரஜினி. அது யாராயிருக்கும்? ஆரம்பிங்கடா விவாதத்தை!

Read previous post:
கத்திக்குத்து, கலவரம், உயிர்பலி! அஜீத் அஞ்சியது இதற்காகதான்!

Close