பிச்சைக்காரன் / விமர்சனம்
மண்டை பெருத்த பலர், ‘கதை திரைக்கதை வசனம் லொட்டு லொஸ்கு’ என்று பெருமை கொப்பளிக்க அடுக்குவார்கள். அவை அனைத்தையும் ஒரு சொல்லில் அடக்கி விடலாம். ‘உப்புமா!’ ஆனால் இந்த பாவி மனுஷன் சசி, எப்போதாவதுதான் ஒரு படம் தருவார். பல வருஷங்களுக்கு மனசிலேயே கிடந்து பாடாய் படுத்தும்! ‘பிச்சைக்காரன்’ அப்படிப்பட்ட படங்களில் ஒன்று!! ரஜினிகாந்துக்கே பொருந்தக்கூடிய ஸ்கிரிப்ட்டில், நம்ம விஜய் ஆன்ட்டனியை பிக்ஸ் பண்ணியிருக்கிறார் சசி. இதுவும் கூட தங்கக் கிண்ணத்தில் தேனை நிரப்பிய மாதிரி அவ்வளவு பொருத்தம்!
திருபாய் அம்பானியே தெருவுக்கு வந்து திருவோடு ஏந்தினால் எப்படியிருக்கும்? அதுதான் இந்த படத்தின் ஒன்லைன். அதையும் தன் அம்மாவுக்காக செய்கிறார் என்றால்? காதலும் அம்மா சென்ட்டிமென்டுமாக கன ஜோராக மூவ் ஆகிறது படம். முடியும்போது, ‘இது ஒரு உண்மை சம்பவம்’ என்று சசியே தன் வாயால் உண்மை கூறும்போது, அந்த நிஜ ஹீரோவை தேடிக் கண்டு பிடிக்க ஆசைப்படுகிறது மனசு.
கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா படுத்த படுக்கையில். உழைப்பால் தன்னையும், ஸ்பின்னிங் மில்லையும் ஒருசேர வளர்த்த அந்த அம்மாவை பிழைக்க வைக்க தவியாய் தவிக்கிறார் விஜய் ஆன்ட்டனி. “ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் நீ பிச்சையெடுக்க வேண்டும். அந்த நேரத்தில் நீ யாரென்று யாருக்கும் சொல்லக் கூடாது. அன்றாடம் எடுக்கும் பிச்சை பணத்தில் செலவு போக மீதியை கோவில் உண்டியலில் போட்டுவிட வேண்டும். மறுநாள் உன் வாழ்க்கையை வெறும் கையோடு துவங்க வேண்டும். அப்படி செய்தால் அம்மா பிழைப்பார்” என்று ஒரு சாமியார் சொல்ல, சென்னைக்கு கிளம்பி வந்து எல்லாவற்றையும் துறக்கிறார் விஜய் ஆன்ட்டனி. அங்கு ஒரு காதல் வேறு. தனது காதலன் ஒரு பிச்சைக்காரன் என்று அறிந்து கொள்ளும் அவள் என்ன செய்தாள்? அம்மா பிழைத்தாரா? நடுவில் சம்பந்தமில்லாமல் கிராஸ் ஆகும் வில்லன் கும்பல் விஜய் ஆன்ட்டனியை உயிரோடு விட்டதா? க்ளைமாக்ஸ்.
முகத்தில் கவலை தேங்கிய மனுஷனுக்கு மிக மிக பொருத்தமாக இருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. சமீபத்திய அவரது கதை தேர்வுகள் வியக்க வைக்கிறதல்லவா, அதை நடிப்பிலும் கொண்டு வந்து வியக்க வைக்கிறார். குறிப்பாக அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தும் அந்த காட்சியில் விலுக்கென்று உடைந்து கொள்ளாத கண்கள் ஒன்று கூட இல்லை தியேட்டரில். ஆக்ஷன் அடிதடி காட்சிகளில் ரவுண்டு கட்டி அடிக்கும் இவர், சென்ட்டிமென்ட் காட்சிகளில் அப்படியே வால்யூம் குறைந்து மெல்லிசை ஆகிவிடுவதெல்லாம் மேஜிக். மேஜிக்!
இவருக்கு ஜோடியாக சத்னா டைடன். தோரணம் செண்டை மேளம் முழங்க கோடம்பாக்கம் எல்லையில் நின்று வரவேற்கலாம்! அந்த உருண்டை கண்கள் நிறைய பேசுகிறது. தன் காதலன் ஒரு பிச்சைக்காரன் என்று தெரிந்த பின்பும் அவனை ஏற்றுக் கொள்ள துணிவதை, ஏதோ தெலுங்கு பட மசாலா ரேஞ்சுக்கு திணிக்காமல், மெல்ல மனசுக்குள் நிரம்ப வைக்கிற சசியின் வித்தை ஒருபுறம் இருக்கட்டும்… அதை அப்படியே உணர்ந்து மிரள வைக்கிறது சத்னாவின் நடிப்பு. அதுவும் கொடுக்க வந்த பணத்தை மறுக்கும் விஜய் ஆன்ட்டனியிடம் “பிச்சையா கொடுத்தா வாங்கிப்பியா?” என்று கேட்டு, அவர் “ம்…” என்றதும், பணம்தான் போடப் போகிறார் என்று எதிர்பார்க்கிறது தியேட்டர். ஆனால் அந்த உள்ளங்கைகளுக்குள் அவரே முகம் புதைக்கும் அந்த காட்சி… உணர்ச்சி ததும்பும் கவிதை.
தட்டையான கதை. அந்த தட்டு நிறைய இனிப்பு என்று படம் நெடுகிலும் தூவப்பட்ட நகைச்சுவை மற்றும் யதார்த்தம் இருக்கிறதே… பிச்சைக்காரர்களின் இன்னொரு உலகத்தை அசால்ட்டாக மொழி பெயர்க்கிறது. கருப்பசாமி குத்தகைதாரர் பட இயக்குனர் மூர்த்தி, இதில் ஒரு பிச்சைக்காரர். “பிச்சைக்காரன்னா நாள் முழுக்க பிச்சையெடுப்பான்னு நினைச்சுகிட்டு இருக்கியா? சாயங்காலம் ஆறு மணிக்கு மேல அவனுக்கும் ஒரு வாழ்க்கை இருக்குய்யா” என்று ஆரம்பித்து வைக்கிறார் அதை. “ஒரு சுமாரான ஹீரோ அறிமுகம் ஆகும்போது நமக்கு பிடிக்காது. ஆனால் அப்புறம் பிடிக்குதுல்ல? நடுவுல அவன் அழகாயிட்டான்னு அர்த்தமா? நமக்கு பழகிருச்சுன்னு அர்த்தம்” என்று அவர் கொடுக்கும் லெக்சர், பயங்கர நக்கல்! இந்திய பொருளாதாரத்தை ஈசியாக டீல் பண்ணுகிற அவரது பொருளாதார அறிவெல்லாம் பார்லிமென்ட் வரைக்கும் போக வேண்டிய பினான்சியல் ‘பின் அப்!’
விஜய் ஆன்ட்டனியின் அம்மாவாக நடித்திருக்கிறார் தீபா என்பவர். அவரவர் அம்மாக்களை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டீர்கள் அம்மா! போதும்… வேறு ஏதாவது படங்களில் நடித்தால் கூட, இந்த அம்மா இமேஜை காலி பண்ணுகிற கேரக்டரில் நடித்துவிடாதீர்கள் அம்மா.
விஜய் ஆன்ட்டனியே இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு அவ்வளவு பொருத்தம். ஏக்நாத் எழுதியிருக்கும் அந்த ‘அம்மா’ பாடல், இன்னும் பல்லாண்டுகளுக்கு காற்றில் கலந்திருக்கும். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு ஸ்பெஷல்! எந்த காட்சியையும் “போதும்ப்பா…” என்று ரசிகர்கள் அலுத்துக் கொள்வதற்குள் நறுக்கி நயம் சேர்த்திருக்கிறார் எடிட்டர் வீர செந்தில்ராஜ்.
படம் முழுக்க சசியின் சின்ன சின்ன ‘டச்’ அதை இன்னும் இன்னும் என்று அழகாக்கிக் கொண்டே போயிருக்கிறது. அட்மாஸ்பியரில் நடந்து போகிற காட்சிகளை கூட அவ்வளவு துல்லியமாக கவனித்திருக்கிறது அவரது கண்கள்.
தமிழ் மகா ஜனங்களுக்கு ‘பூ’ தந்தவர், இந்த திருவோட்டில் பொன்னையே தந்திருக்கிறார்! நீங்க அடிக்கடி வரணும் சசி….
-ஆர்.எஸ்.அந்தணன்
Production – Vijay Antony Film Corporation,
Producer – Fatima Vijay Antony,
Hero – Vijay Antony,
Heroine – Satna Titus,
Director – N.Sasidharan,
Cinematographer- Prasanna Kumar,
Music Director – Vijay Antony,
Editor – Veera Senthil Raj,
Production Controller- R.Janarthanan,
Executive Producer- D.Naveenkumar,
Stunt Master- R.Sakthi Saravanan,
Art Director – Anand Mani,
Lyricist- Eknath,Annamalai,Priyan&Logan,
Production Manager- C.Balamurugan,
PRO – Suresh Chandra,
Designs – Pavan Sindhu Grafix,
Stills – Sudhagar,
Costume – Sarangapani,
SFX – K.Rajasekar,
DI – G.Rajarajan,
DTS Mixing – A.L.Dukaram & K.Danasekar,
VFX – Lorven Studio,R-Art Works,