முதல் படத்துலேயே பிள்ளையார் ஆசி விக்ரம் பிரபு நெகிழ்ச்சி
‘அந்த பையனை நினைச்சா எனக்கு ஆச்சர்யமா இருக்கு. எவ்வளவு அற்புதமா நடிக்கிறார்,… எழுதி வச்சுக்குங்க, இன்னும் சில வருடங்களில் விக்ரம் பிரபு எங்க இருக்கப் போறாரு பாருங்க. அவருக்காக ஒரு பெரிய இடம் இந்த இன்டஸ்ரியில காத்திருக்கு’ என்று இயக்குனர் பாலசந்தர் சொன்னபோது, ‘அரிமா நம்பி’ படத்தின் ஆடியோ விழாவே கைதட்டல்களால் நிரம்பியது. சிவாஜிகணேசன், பிரபு, விக்ரம் பிரபு ஆகிய முக்குலத்தின் ரசிகர்கள் மொத்தமாக திரண்ட விழா போலவே தோன்றியது அந்த கைத்தட்டல்களை கேட்ட போது.
‘விக்ரமை நான்தான் அறிமுகப் படுத்துவேன்னு தாணு சார் அடிக்கடி அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தார். ஆனால் என் முதல் படமா கும்கி வந்திருச்சு. யானையோடு சேர்ந்து நடிச்ச அந்த படம் எனக்கு பிள்ளையாரே வந்து ஆசி வழங்கிய மாதிரி உணர வச்சுது. தாணு சார் மாதிரி ஒரு புரட்யூசர் கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சுருக்கணும். ‘அரிமா நம்பி’ படத்தில் நான் நடிக்கறது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்’ என்றார் விக்ரம் பிரபு.
இந்த படத்திற்கு இசையமைத்தவர் ட்ரம்ஸ் சிவமணி. உலகப் பெற்ற ட்ரம்மராக இருந்தாலும், ஒரு படத்திற்கு மியூசிக் டைரக்டர் ஆவதற்கு இத்தனை காலம் ஆகிவிட்டது அவருக்கு. தனது உரையில் தனக்கு இசை குருவாக இருந்த எல்லாருக்கும் நன்றி சொன்னார் சிவமணி. அப்படியே அவர் சொன்ன இன்னொரு விஷயம், இசையமைப்பாளர்கள் மத்தியில் ஈகோவுக்கு இடமில்லை என்பதை உணர்த்தியது. ‘இந்த படத்தின் பாடல்களை நான் கம்போஸ் செய்ததும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் போட்டு காட்டினேன். அவர்தான் அங்கங்க கரெக்ஷன் பண்ணிக் கொடுத்தார். இந்த படத்தின் பாடல்கள் ரொம்ப சிறப்பா வர்றதுக்கு அவரும் ஒரு காரணம்’ என்றார் .
அரிமாவை நம்பி தியேட்டர்கார்கள் காத்துகிட்டு இருக்கோம் என்று தியேட்டர்கள் அதிபர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் சொன்னதுதான் டைமிங் அண் ரைமிங்!