பிசாசு ஹிட்…! ஆனால் படம் பார்க்காமல் புறக்கணிக்கும் பாலா?
இரண்டு வித்தைக்காரர்கள் ஓரிடத்தில் இருந்தால், நத்தை முதுகில் நண்டு ஏறிய கதையாகதான் முடியும். பாலா தயாரிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறாரா…? அப்படின்னா தனியா அவங்களே ஒரு ஆக்ஷன் பைட்டிங் ஷோ ஒட்டுவாங்களே… என்று கோடம்பாக்கம் திருவிழா மூடுடன் காத்திருந்தது. அந்த நம்பிக்கையை வீணாக்கவில்லை இருவரும். அது தொடர்பான செய்திகளை அவ்வபோது தந்து கொண்டிருந்தோம் நாமும். லேட்டஸ்ட் தகவல் என்ன?
பிசாசு திரைக்கு வந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிட்டது. வெளியான முதல் நாள் சென்னை தவிர பிற இடங்களில் அவ்வளவு ரெஸ்பான்ஸ் இல்லை என்றார்கள். அதற்கப்புறம் மவுத் டாக் பரவி எல்லா ஊர்களிலும் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல விமர்சனம் கொடுத்த பத்திரிகைகளுக்கும் இணையதளங்களுக்கும் தன் நன்றியை தெரிவித்திருக்கிறார் மிஷ்கின். இருந்தாலும்…. ? இருந்தாலும்…?
படத்தை இன்னும் பாலா பார்க்கவில்லையாம். படம் வெளியாவதற்கு முன் ட்ரெய்லர் கட் பண்ணியதிலிருந்து போஸ்டர் டிசைன் விஷயம் வரைக்கும் பாலாவுக்கு எதுவுமே திருப்தியில்லை என்ற தகவல் கசிந்தது. அவரும் இது மிஷ்கின் படம். ஒரு கட்டத்திற்கு மேல் அவரது தொழிலில் குறுக்கிடுவது நல்லதல்ல என்று ஒதுங்கிக் கொண்டார். (குறுக்கிட்டாலும் மிஷ்கின் கேட்க மாட்டார் என்பது வேறு விஷயம்) இந்த நிலையில்தான் திரைக்கு வந்து ஊரே மெச்சுகிற படத்தை ஒரு சின்ன ‘முறுக்கல்’ மனசோடு பார்க்காமல் இருக்கிறாராம் அவர். ‘பாலா விமர்சனம் ரொம்ப ரொம்ப முக்கியம். அவரை பார்க்க சொல்லுங்க’ என்று அறிந்தவர் தெரிந்தவர் மூலமாக ஓலை அனுப்பிக் கொண்டிருக்கிறாராம் மிஷ்கின்.