தயாரிப்பு பாலா இயக்கம் மிஷ்கின் ஸ்டார்ட் கலகம்!
‘பிசாசு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். படத்தை தயாரிப்பவர் இயக்குனர் பாலா. தணலுக்கும் தண்ணீருக்கும் கூட ஒத்துப்போகும்…. ஆனால் வித்தை திமிர் உள்ள இருவருக்கும் ஒத்துப்போகுமா? ‘முடியவே முடியாது’ என்கிறது அண்மைக்கால அண் லிமிடெட் குடைச்சல்கள்!
அது என்ன என்று தெரிந்து கொள்வதற்குள் ‘பிசாசு’ வந்த கதையை தெரிந்து கொள்வது நல்லது. கோடம்பாக்கத்தில் நல்ல அண்ணாச்சி என்று பெயரெடுத்துவிட்டால் போதும். ‘நமக்கும் ஒரு மளிகை கடை வச்சு தாங்கண்ணே’ என்று பொருளாதார பின்புலத்தோடு வந்து நெருக்கடி கொடுக்க ஆயிரம் செல்வந்தர்கள் ரெடி. அப்படி வந்தவர்தான் போக்கிரி என்ற படத்தை தயாரித்த ரமேஷின் இரண்டாவது மகன். மூத்த மகன் ‘ஆதலால் காதல் செய்வீர் ’ என்ற படத்தின் மூலம் ஆல்ரெடி டைரக்டர் சுசீந்திரனால் கடை ஓப்பன் பண்ணிக் கொண்டவர்.
இந்த இரண்டாவது மகன் பாலாவை அணுகி, ‘அண்ணே உங்க படத்தில் நான் நடிக்கணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’ என்றாராம். எடுத்த எடுப்பிலேயே அடுப்புல கைவிட்டா குழந்தை பஸ்பமாகிவிடும் என்பதை உணர்ந்த பாலா, ‘முதலில் நான் சொல்ற டைரக்டர் படத்தில் நடி. அந்த படத்தை நானே தயாரிக்கிறேன். என் பேனர்ல படம் வர்றதால உனக்கும் பெருமை’ என்று கூறி, அந்த ‘நான் சொல்ற டைரக்டர்’ யார் என்பதையும் சொன்னார்.
அவர்…? மிஷ்கின்.
‘ராஜு… எங்கயிருக்கீங்க? கொஞ்சம் ஆபிஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா?’ என்றார் பாலா. (மிஷ்கினின் இயற்பெயர் ஷண்முகராஜ்) மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்தார் மிஷ்கின். அதற்கப்புறம் ஆரம்பம் ஆனது டீலிங். ‘தம்பிய வச்சு ஒரு படம் பண்ணுங்க. ஃபர்ஸ்ட் காப்பி இரண்டரை கோடி’ என்று பாலா கூற, மிஷ்கினுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் முகமூடி படத்திற்கு மிஷ்கின் வாங்கிய சம்பளமே இரண்டரை கோடி. அப்படியிருக்க படத்தை இயக்கிக்கொடுத்தால் தனக்கு சம்பளம்? வாயை திறந்து பாலாவிடம் கேட்டேவிட்டார் அவர். ‘அதுவா? படம் வியாபாரம் ஆகி லாபம் வரும்ல. அதுல ஆளுக்கு ஃபிப்டி ஃபிப்டி’ என்றார் பாலா. (நிஜத்தில் பாலா அந்த பையனிடம் வாங்கியது நாலரை கோடி. இரண்டு கோடி ஒரே அமுக்)
மிஷ்கின் கணக்கும் வேறு மாதிரியிருந்தது. படத்தை ஒன்றரை கோடிக்கு முடித்தால் ஒரு கோடி ‘லபக்’ ஆகிவிடுமே என்பதுதான் அது. படப்பிடிப்பு ஆரம்பம் ஆனது. ஸ்டோரி டிஸ்கஷனுக்கு பத்து லட்சம் வேண்டும் என்றாராம் மிஷ்கின். தாராளமாக கொடுக்கப்பட்டது. கிளம்பி நியூயார்க் போய்விட்டார்கள் அவரும் உதவி இயக்குனர் ஒருவரும். (அங்கு போனால்தான் கதை வருமாம்…?) இப்படியே படப்பிடிப்பு செலவு அது இது என்று பில் போட்டு தீட்டிக் கொண்டேயிருந்தாராம் மிஷ்கின். கடுப்பான பாலா, ஜுலை மாதம் படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார். ஒரு மாதத்திற்கு மேல் படம் நகரவேயில்லை.
அதற்கப்புறம் கையை அடக்கிக்கொண்ட மிஷ்கின் மீண்டும் பாலாவிடம் பேசி படத்தை ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார். இங்குதான் ட்விஸ்ட்டே! உங்க கள்ளக்கணக்குக்கு வேற ஆளப்பாருங்க என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்ட பாலா, தினமும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுகிறாராம். அங்கேயே ஒரு சேரை போட்டுக்கொண்டு அமர்ந்துவிடும் அவர், என்னதான் செலவு பண்ணுறாரு… பார்ப்போமே? என்று நோட்டம் விட, ஒரு இயக்குனர் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது இன்னொரு இயக்குனர் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது அநாகரீகம் என்பது கூட பாலாவுக்கு தெரியலையே என்று முணுமுணுத்தபடி வேலையை தொடர்கிறாராம் மிஷ்கின்.
இப்படியாக டப்பாசு வெடித்துக் கொண்டிருக்கிறது பிசாசு! பொருத்தமாகதான் வச்சுருக்காங்க பேரு….!