PK விமர்சனம்

அமீர்கான் ஒரே ஒரு டேப் ரெக்கார்டை மட்டும் முன்ஆடையாக மறைத்துக்கொண்டு பரபரப்பைக்கிளப்பி பப்ளிசிட்டியை அள்ளிய படம். பீகே என்பது ஆங்கில எழுத்துக்களோ, ஆங்கில வார்த்தையின் சுருக்கமோ அல்ல… பீக்கே என்பது பக்கா இந்தி வார்த்தை. குடித்து விட்டு வந்திருப்பவன் என்று பொருள்படுத்திக்கொள்ளலாம்.

வேற்று கிரகவாசி ஒருவன் தன் விண்கலத்தில் பூமியில் வந்திறங்குகிறான். இறங்கும் இடம், ராஜஸ்தான், இந்தியா. தன் விண்கலத்தை இயக்கும் ரிமோட்டை பூமியில் அவன் பார்க்கிற முதல் மனிதன் பறித்துக்கொண்டு ஓடி விடுகிறான்.

ரிமோட் இருந்தால் தான் தன் கிரகத்திற்கு திரும்பிப்போகமுடியும் என்கிற நிலையில், அவன் ரிமோட்டைத் தேடி அலைகிறான். கடவுளால் மட்டுமே உனக்கு உன் ரிமோட்டை திருப்பித்தரமுடியும் என அனைவரும் சொல்ல, தன் ரிமோட்டை திரும்பப்பெற வேண்டி எல்லா கடவுளர்களிடம் செல்கிறான். எந்தக்கடவுளும் அவன் ரிமோட்டை திருப்பித்தராத கடுப்பில்… அந்த பீக்கே செய்கிற அடாலடி தடாலடி அலப்பறைகள்… படமாக விரிகிறது. பாடமாக முடிகிறது.

கடவுளைக் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டி துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கிறான்.

ஒரு சாமி சிலை வாங்கப் போகிறான்… 20 ருபாய், 100 ருபாய், 500 ருபாய் என விலை அட்டை அறிவிக்கிறது. காசுக்குத் தக்கபடி சாமி வேலை செய்வாரா என கேட்கிறான்..

இன்னொரு இடத்தில் நாடே கூடிக்கும்பிடுகிற ஒரு சாமியார் முன் தான் பின்பற்றும் மதத்தில் ஒவ்வொருவராக நிறுத்துகிறான்… அவர்கள் என்னென்ன மதத்தினர் என்று கேட்கிறான்… அவர் ஒவ்வொருவராக பார்த்து அவர்கள் மதத்தைச் சொல்கிறார். இறுதியில் பார்த்தால்…. இந்து முஸ்லிமாகவும், முஸ்லிம் கிறிஸ்டியனாகவும், கிறிஸ்டியன் இந்துவாகவும் ஆடை உடுத்தி வருகின்றனர். ஆக… உங்கள் மதம் என்பது அணியும் உடையில் தான் இருக்கிறதே தவிர, உடலில் இவர், இந்த மதத்தினர் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை என்கிறான்.

ஏதோ ஒரு துண்டுத்தாளைக்கொடுத்தால் அதற்கு பதிலாக கடைக்காரர்கள் பொருள்கள் கொடுக்கிறார். அந்த துண்டுக்காகிதத்தில் ஒருவர் படம் இருக்கிறது. மகாத்மா காந்தி. அவருக்கு அவ்வளவு மரியாதை என்று நினைக்கிற அவன், மகாத்மா இருக்கிற பாடப்புத்தக அட்டை, நோட்டு, ஸ்டாம்ப், போஸ்டர்கள் எல்லாம் அள்ளிக்கொண்டு வருகிறான்… ஆனால் கடைக்காரர் அவற்றை விநோதமாக பார்க்கிறார். எதுவும் தரமுடியாது என்கிறார். கடைசியாக அவன் வைத்திருக்கும் ஒரே ஒரு ருபாய் நோட்டை கொடுக்கிறான்…. அதை வாங்கிக்கொண்டு பொருள்களை தருகிறார். காந்திப்படம் இருக்கிற வேறு காகிதங்கள் எல்லாம் மண்ணில் கேட்பாரின்றி கிடக்கிறது.

இப்படி படம் முழுவதும் பீகே.வின் கேலிகள், நம்மைக் கேள்விகளுக்கு முன்னால் மண்டியிட வைக்கிறது.

கடவுளர்களையும் மதங்களையும் பிரார்த்தனைகளையும் சம்பிரதாயங்களையும் சாமியார்களையும்… எந்த பாபரபட்சமுமின்றி விமர்சிக்கிற பீகே/அமீர்கான் அபாரம். அமீர்கானை பேச வைத்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி…. அட்டகாசம்.

அத்தனைத் தீவிரமான கடவுள் பிரச்சாரக் கதையில் அனுஷ்கா சர்மா, அர்ச்சனைப் பூவாக நடமாடுகிறார். ஜக்குவாக பாகிஸ்தான் முஸ்லிம் பையன் ஸர்ப்பராஷ்-ஐ(சுஷாந்த் சிங்கை) பெல்ஜியத்தில் சந்திக்கிற காதல்… அழகான குறுங்கவிதையாக படத்தின் ஆரம்பத்தில் வந்து போகிறது. அதே காதல் மீண்டும் க்ளைமாக்ஸில் பீகேவால் குறிஞ்சிப்பூவாய் பூத்து நெகிழவைப்பது… சற்றும் எதிர்பார்க்காத ஆனந்தக்கண்ணீர் ஆச்சர்யம்.

சஞ்சய்தத், பொம்மன் இரானி, சௌரவ் சுக்லா… என சீனியர் சிங்கங்கள் பீகே.வின் சின்சியர் சிங்கங்களாய் கர்ஜிக்கிறார்கள்.

உங்களைப் படைத்தவர் ஒரு கடவுள், நீங்கள் உங்களுக்காக ஆளாளுக்கு படைத்துக்கொண்டவர் இன்னொரு கடவுள்…. என எல்லாக்கடவுளையும் மதங்களையும் கூட்டாக விமர்சிக்கிற பீகே. என்கிற அமீர்கானை தனிப்பட்ட ஒரு மதத்தின் பின்னால் நிற்பதாக அடையாளம் காணமுடியவில்லை. அதுபோலவே அமீர்கான் மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் துணிச்சலையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

வேற்றுக்கிரகம் என்பதற்காக விநோத உருவங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லை. அது தேவைப்படவும் இல்லை. முஸ்லிம்கள் மீதான மாறுபட்ட பார்வை, இந்தியாவோடு பாசமும் பழைய உறவும் உள்ள பாகிஸ்தான்… இப்படி பீகே.வின் செயல்கள் ஒவ்வொன்றும் எதையோ எதையோ நம்மிடம் கேட்கிறது…

குடித்துவிட்டு உளறுபவன்… என்ற அர்த்தத்தில் பீகே என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் போல…. ஆனால்… பீகே.வின் உளறல்களின் அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனில் பீகே.வை பார்ப்பது ஒன்றே வழி.

85 கோடியில் எடுக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வெளியான பீகே திரைப்படம் இன்றைய நிலவரப்படி 400 கோடி வசூலித்திருக்கிறது.

-முருகன் மந்திரம்

Read previous post:
ஷூட்டிங் வராத அஜீத்! அதிர்ச்சியில் கவுதம்மேனன்! என்னை அறிந்தால் திக் திக்…

எப்படியாவது படத்தை பொங்கலுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது ‘என்னை அறிந்தால்’ படத்தின் தயாரிப்பு வட்டாரம். இயக்குனர் கவுதம் மேனனும், ஹீரோ...

Close