பீப்புக்கு ஒரு ஸ்டாப் வை என் நாட்டு அதிகாரமே! -ஆர்.எஸ்.அந்தணன்

‘தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்கிற பழமொழியெல்லாம் சிம்பு அனிருத்துக்கு மட்டும் செல்லாது. செல்லவே செல்லாது! மருந்தை தேடி மற்றவர்கள் போனால், வலியைத் தேடி போகிற வழக்கம் இருக்கிறது இருவருக்கும். அந்த வழுக்கல்தான் கடந்த நான்கு நாட்களாக அவர்களும், அவர்களால் ஜனங்களும் அனுபவித்துக் கொண்டிருப்பது! அருவா வியாபாரி, ‘சொருவ’ இடம் தேடி சுத்துற மாதிரியாகிருச்சு ரெண்டு பேரோட இசைப்புலமையும்!

தமிழ்சினிமா இப்போதெல்லாம் ‘பொயட்டு’களின் ஆதிக்கத்திற்குள்தான் அடங்கிக் கிடக்கிறது. ‘டங்காமாரி ஊதாரி’ போல ஒரு பாட்டு இருந்தா, அவ்ளோ யூத்தும் தியேட்டருக்குள்ளதான் என்று தவியாய் தவிக்கிறார்கள் இயக்குனர்கள். அப்படிப்பட்ட பாடல்களை எழுதுகிற புலவர்களை எல்லாம் ‘பொயட்டு’ என்ற வகைக்குள் அடக்கிக் கொள்கிறது சினிமா. அனிருத்தின் வாழ்வை தொடங்கி வைத்தவர் ‘பொயட்டு’ தனுஷ்தான். இந்த பொயட்டும் அந்த மியூசிக் ரவுடியும் இணைந்து உலகத்திற்கு வழங்கிய ‘வொய் திஸ் கொலவெறி’யை கண்டிக்காத புலவர்களே இல்லை. “இந்த புலவனுங்களுக்கு இதே வேலதான். குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்கிருவானுங்க. நீ பாட்டுக்கு போயிட்டே இரு” என்று தனுஷ் அனிருத்துக்கு கொடுத்த அட்வைஸ்சை, உலகமே ஒப்புக் கொண்ட சம்பவம், பதினைந்து நாட்களுக்கு முன்புதான் அரங்கேறியது.

அன்றுதான் ‘வொய் திஸ் கொலவெறி’ பாடலை யூ ட்யூபில் பத்து கோடி பேர் கண்டு களித்திருந்தார்கள். இனம் கடந்து, மொழி கடந்து, நாடு கடந்து, கண்டம் கடந்து முணுமுணுக்கப்பட்ட பாடல்தான் அந்த வொய் திஸ் கொலவெறி. இந்த பத்து கோடி என்பது சாதாரண விஷயமேயில்லை. வரிகள் புரியாமல், வரிகளின் அர்த்தம் புரியாமல், குழந்தையிலிருந்து கிழவி வரை பாடக்கூடிய பாடலாக அந்த ட்யூன் அமைக்கப்பட்டிருந்ததால்தான் இப்படியொரு அசுர வேக ‘லைக்’ அந்த பாடலுக்கு.

அதை எழுதிய தனுஷ், அதே போல இன்னொரு பாடலை எழுதி, கொலவெறியையும் விஞ்சுகிற அளவுக்கு மெட்டு ஒன்றை போடச் சொல்லி உசுப்பேற்றிக் கொண்டிருந்த வேளையில்தான், கையிலிருந்த அனிருத் கீழே விழுந்து கண்ணாடியாய் சிதறினார். ஒழுங்காக வடிவமைக்காவிட்டாலும், பிக்காசோவின் ஓவியம் போல எக்குத்தப்பாக அனிருத்தை வளர்த்த தனுஷ், இப்போது கடும் ஷாக் ஆகியிருக்கிறார். அனிருத்தை போட்டு உடைத்த சிம்பு இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. கனடாவில் பதுங்கியிருக்கும் அனிருத், ‘அந்த கலாச்சாரக் குடிசையை கொளுத்துனவன் நான் இல்ல…’ என்று கூவிக் கொண்டிருக்கிறார். ஊர் நம்பினால்தானே…?

‘விளையும் கோரை, புல்லாயிருக்கும் போதே புஷ்டியாக இருக்கும்’ என்பதை தன் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்து வந்திருக்கிறார் சிம்பு. குழந்தைகள் ஓவராக பேசினால், ‘பிஞ்சிலே பழுத்தது’ என்போமல்லவா? இந்த பார்ன் வித் சில்வர் ஸ்பூன், (போர்ன் என்று படித்தால் நான் பொறுப்பல்ல) அந்த ஸ்பூன் நிறைய கெட்ட வார்த்தைகளோடு திரிந்தவர்தான்! அவர் குழந்தையாயிருக்கும்போதே அப்படிதான் பேசுவார் என்கிறார்கள் அவரை அந்த பருவத்திலிருந்தே பார்த்த சினிமா தொழிலாளர்கள்.

சரி… இந்த பாடல் எந்த சந்தர்ப்பத்தில் வந்தது? அதற்கு பின்னால் ஒரு அரசியல் இருப்பதாக கூட பேசுகிறார்களே சினிமாத்துறையினர்?

வேக வேகமாக வளர்ந்து வருகிறார் அனிருத். முன்னணி ஹீரோக்களின் படங்களை சர்வ சாதாரணமாக ‘கேட்ச்’ பண்ணுகிறது அவரது ட்யூன்கள். சுமார் இரண்டு கோடி வரை கூட அவருக்கு சம்பளம் தர க்யூவில் நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அனிருத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் போடாவிட்டால், இதற்கு முன் இதே அந்தஸ்த்தில் இருந்த ஒரு சிலருக்கு சிக்கல்தான். அதில் சிம்புவின் நெருங்கிய ஒரு இசை வாரிசும் அடக்கம். அவருக்காகதான் இவரை குழியில் தள்ளியிருக்கிறார் சிம்பு என்பதாக ட்யூன் போடுகிறது உலகம்.

அதற்கேற்றார் போல மூன்று படங்களிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அனிருத். காக்காய் உட்கார பானை உடைந்த கதையாக இது இருக்கலாம். இது நிஜமோ, பொய்யோ? அப்படியும் பேசுகிறது ஊர்.

“என் நாலெட்ஜுக்கு நான் சொல்றேன். அனிருத் அப்படிப்பட்ட பையன் இல்ல” என்கிறார் தனுஷ். “அவரோட ட்யூன் பேங்க்ல நான் ஒருமுறை கூட இந்த மாதிரி பாடல்களை கேட்டதில்ல” என்பது தனுஷின் பதிலாக இருக்கிறது. “அந்த பாடலுக்கு இசையமைத்தது அனிருத் அல்ல” என்கிறார்கள் அவரது பெற்றோர். கனடாவிலிருந்தபடியே துண்டு போட்டு தாண்டுகிறார் அனிருத். “குற்றவாளி யாருன்னு கண்டுபிடிச்சு, அந்த தவறை யார் செஞ்சாங்களோ, அவங்களை தூக்குல போடுங்க” என்கிறார் அனிருத்தின் நெருங்கிய உறவினாரான ஒய்ஜி.மகேந்திரன்.

ஆனால் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரின் புகார் மனு அனிருத்துக்கு பெரும் தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறது. காவல் துறை ஆணையரிடம் அவர் கொடுத்த புகாரில், “அந்த பாடலை என் மகன் சிம்பு பாட, அதற்கு இசையமைத்தவர் அனிருத்” என்று கூறியிருக்கிறார். யார் சொல்வது உண்மை? இவ்வளவு ஆக்ரோஷமும், அழுகையும் நியாயமா?, இல்லையா? அதையெல்லாம் வெளிப்படுத்தக் கூடிய ஒரே சக்தி போலீஸ்தான்.

ஆனால் சிம்பு அனிருத் மீதான புகாரை போலீஸ் வாங்கியிருக்கிறதே தவிர, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் எப்ஐஆர் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. எப்ஐஆர் பதிவு செய்யாமல் அவர்களை எப்படி கைது செய்வது? இப்போதைக்கு சம்மனும், சம்மனுக்கான பதிலும்தான் மாறி மாறி பரிமாறப்பட்டு வருகிறது.

காட்டு மரமாக இருந்தாலும் ஒரு விஷயத்தில் சிம்பு க்ளீன். “இந்த பாடலை பாடியது நான்தான்” என்று ஒப்புக் கொண்டுவிட்டார். (அப்படியே இசையமைச்சது யார்னும் சொல்லிட்டா, அனிருத் குழப்பம் முடிவுக்கு வந்துரும்ல?) “இதை நான் எந்த படத்திலும் பயன்படுத்தல. தனி பாடலாகவும் வெளியிடல. என் மொபைல் போனிலிருந்து யாரோ திருடி, யாரோ வெளியிட்டா அதுக்கு நானா பொறுப்பு?” என்பது அவரது பதில். கூடுதலாக, “நான் ஏன் ஓடி ஒளியணும். இதை சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

சிம்புவை வைத்து தற்போது ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ், “சார்… ஹீரோவின் இமேஜை நம்பிதான் நாங்கள்லாம் அந்த ஹீரோவை அப்படி இப்படின்னு அதிகப்படியா காண்பிக்கிறோம். ஆனால் அவங்க இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிகிட்டா எங்க படத்தின் நிலைமையை யோசிச்சு பாருங்க” என்கிறார் பரிதாபமாக. கிட்டதட்ட இதே மனநிலையில்தான் இருக்கிறாராம் கவுதம் மேனன். இவர் சிம்புவை ஹீரோவாக வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

“என் படம் வெளியாகி பல வருஷம் ஆச்சு. கையில் பணமில்ல. அப்பா அம்மாகிட்ட செலவுக்கு பணம் கேட்க கூச்சமா இருக்கு. காதலி ஒருத்தி ஆறுதலா இருந்தா. அவளும் என்னை விட்டுட்டு போயிட்டா. நான் என்ன பண்ணுவேன்?” என்று ஒரு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிம்பு பேசியதை கேட்ட யாரும், அவர் மீது ஒரு கணம் பரிதாபப்படாமல் இருந்திருக்க மாட்டார்கள். அதற்கப்புறம் வெளிவந்த ‘வாலு’ படு பிளாப்.

காதல் தோல்வியால் தத்தளித்து வரும் அவர், மிதமிஞ்சிய கோபத்தில்தான் அப்படியொரு வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. யாரோ திட்டமிட்டு அதில் அந்த வார்த்தையை சேர்த்துவிட்டதாக சிம்புவின் அப்பா தகப்பன் ஸ்தானத்தில் நின்று பேசினாலும் ஒரு கேள்வி உதைக்கிறது. திருடியவன் அந்த வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்த பின், நடுவில் ஏன் ஒரு பீப் ஒலியை நுழைக்க வேண்டும்? அப்படியே விட்டிருக்க மாட்டானா?

சிம்புவா வந்து அந்த பாடலை உங்களுக்கு ஷேர் பண்ணினார்? உங்கள் நண்பரோ, அல்லது உங்கள் உறவினரோதானே? அப்ப குற்றவாளி யார்? சிம்புவா, உங்களுக்கு வாட்ஸ் அப் பண்ணிய அவர்களா? என்று ஏகப்பட்ட கேள்விக்குறியை வளைத்து வளைத்து தாக்குகிறார்கள் சிம்புவின் ‘உருப்படாத’ ரசிகர்கள்.

சிம்பு இதற்கு முன் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியிட்ட சிம்பு- நயன்தாரா முத்தப் புகைப்படங்களும், ஒரு பிரபல ஹீரோவின் மகளுடனான உரையாடலும் இன்றளவும் யூ ட்யூபில் உலா வருகின்றன. இப்பவும் ‘நான் அவனில்லை’ என்றே சொல்லி வருகிறார் சிம்பு. அப்போதெல்லாம் நாம் தப்பித்தால் போதும். நம் இமேஜ் தப்பித்தால் போதும் என்று ஒதுங்கியவர்களால்தான் இன்று பீப் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் சிம்பு.

‘இது குழந்தை பாடும் தாலாட்டு’ என்று எழுதினார் அப்பா! உலகமே கேட்டு இன்புற்றது. இன்று அவர் குழந்தை பாடிய தாலாட்டுதான் அந்த அப்பாவின் தூக்கத்தையும் கலைத்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கின் தூக்கத்தையும் கலைத்திருக்கிறது!

மறியல், கைது, சிறை நிரப்பும் போராட்டம் என்று நிலைமை வீங்குதற்குள், மேற்படி பீப்புக்கு ஒரு ஸ்டாப் வை என் நாட்டு அதிகாரமே!

(தின செய்தி நாளிதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரை)

2 Comments
  1. விஜய் says

    கோவனை உடனே கைது செய்த அரசு, இவனை இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பது ஏனோ !!! தங்க தமிழ்ச்செல்வன்

    தப்பு செய்தவனுக்கு வக்காலத்து வாங்குற பாரு. முதலில் உன்னை தூக்கி உள்ள வைக்கணும். நீ ஒரு உண்மையான தகப்பானாக இருந்தால், உன் மகனை கண்டித்து மன்னிப்பு கேட்க வைத்து இருக்க வேண்டும். ம் ம் ம் … இதெல்லாம் உன்னிடம்
    எதிர்ப்பார்க்க முடியாது.

  2. Subash Bose says

    சொம்பு, பெண்களையும் தமிழ் மக்களையும் கேவலப் படுத்துகிறான்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பெண்களுக்கு ஆதரவாதானே பாடுனேன். அது தப்பா? சிம்பு உருக்கம்!

“அந்த டேஷ் பாடல் பெண்களுக்கு ஆதரவான பாடல்தான். அதையேன் புரிஞ்சுக்காம என் மேல் கோபப்படுறீங்க” என்று குறிப்பிட்டிருக்கிறார் சிம்பு. பல நாட்களாக விளக்கம் ஏதும் கூறாமலிருந்த சிம்பு,...

Close