வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல, கடவுள் / கவிதைத் தொகுப்பு / ஆசிரியர்:  சந்திரா தங்கராஜ் வெளியீடு: பட்டாம்பூச்சி பதிப்பகம்

நினைவின் அறைகளிலும் அனுபவங்களின் வீதிகளிலும் இருளின் கருப்பு வண்ணத்திற்குள்ளும் சிதறிக் கிடக்கிற வார்த்தைகளை பொறுக்கி எடுத்து, கோர்த்து, மடியில் பரப்பி விளையாடுகிற சந்திராவின் விரல்களுக்குள் தீராத பேரன்பும், நிராகரிப்புகளைக் கூட நீலமலர்களின் மாலையாக்கி சூடிக்கொள்கிற காதலின் கம்பீரமும் இடைவிடாது வழிந்து கொண்டே இருக்கிறது.

என் மன ஆழங்களுக்குள்
நீ வீசியெறிந்த ப்ரியத்தை உடைக்க
சிரமப்படாதே.

எந்த ஆயுதத்தையும் எடுத்துக்கொள்
ஆதுரமாய் தீரமாய் இருக்கும் என் இதயத்தை
நீ இன்னும் இன்னும்
உடைத்தெறிவதற்கும்
நொறுக்கிப்போடுவதற்கும் ஏதுவாய்
பிடிவாதமாக வைத்திருக்கிறேன் களிப்போடு

காதலைக்கொண்டாடிக் களிக்கிற சந்திராவின் இதயம், காதலனின் குற்றங்களைப் பற்றிய எந்தக் குறிப்பையும் பிறரின் பார்வைக்கு விட்டுவைக்காமல் தேடித்தேடி அளிக்கும் பேரார்வத்தை, பேராசையை எப்போதும் தனக்குள்ளே தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

இலக்கற்ற இலக்குகளை நோக்கி பயணிப்பதாய் தோன்றுகிற சந்திராவின் கவிதைகள் சென்று சேர்கிற இலக்குகள்… எதிர்பாராதவைகளாகி நம் விழிகளை கவிதைகளின் முதல் வார்த்தை நோக்கி துரத்துகிறது. கவிதைகளின் முதல் வார்த்தைக்கும் கடைசி வார்த்தைக்குமான நம் கண்களின் பயணத்தில் கவனச்சிதறல்கள் கூடாது என்று கட்டாய கட்டளையிடுகிறது சந்திராவின் கவிதைகள்….

விலகிச் செல்லும் நிழலினைப் போன்ற நீ
காரிருள் சூழ்ந்துகொள்ளும் நாளினை பரிசளிப்பாய்

என, ஒளிக்குத் தருகிற அதே மரியாதையை, இருளுக்கும் தந்து புன்னகைக்கிறத

முள்வேலியிட்டு பத்திரப்படுத்துகிறான்
மிச்சமிருக்கும் வன்மத்தை…

என்று ஈழத்துக்குழந்தைகளின் இரத்தக்கறை படிந்த புத்தனைப்பற்றி எழுதும் சந்திரா…. இளவரசனைப் பற்றி இப்படி எழுதுகிறார்…

குற்றத்தின் கைகளை துடைத்தபடி
கொடூரர்கள் வெளியேற,
சாட்சியாக மருண்டு ஓடும் ரயில்பாதைகளைப் போலிருக்கிறது
ரயில் பாதைகள்…
மானின் விழிகளை காலில் மிதித்தபடி
நாம் கடந்து போகிறோம்.

என சகமனிதனின் வலியைக் கண்டுகொள்ளாமை மீது கோபக்கல் வீசுகிறார்.

சந்திராவின் சொற்சேர்க்கைகள் ஒரு மாயவெளியில் நம்மைக் கூட்டிச்சென்று விடுகிறது… நம் அறியாமையை புரியாமையை குழப்பத்தை வேடிக்கை பார்த்தபடி மறுவாசிப்புகளின் திசையை நமக்கு காட்டுகிறது.

கடவுளர்களுக்கும் சந்திராவுக்குமான நெருக்கத்தைப் யோசிப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை எனினும், கர்த்தருக்கும் சந்திராவுக்குமான உறவை நிறையவே பார்க்க முடிகிறது. சிலுவைகள்… சந்திராவுக்குள் நீலமலர்களைப்போலவே குவிந்து கிடக்கின்றன.

என்னால் காதலை பாந்தமாக அணுகமுடியாது என்று திமிறி நிற்கிற சந்திராவின் கவிதையில் வருகிற அந்தக் காதலியால் காதலிக்கப்படுகிற அந்தக்காதலன்…. ரொம்பக் கொடுத்து வைத்தவன்… ஏன்? வாசியுங்கள்…

அவன் காதலை
பலநாள் பட்டினிகிடக்கும்
கூண்டுக்குள் வளர்க்கப்படும் புலியாய் இருப்பவளால்
புறாவின் கால்களில் இருக்கும் உணவினைப்போல்
அத்தனை பாந்தமாக உண்ணமுடியாது.

நகரத்து ஆட்டோக்காரருடான அம்மாவின் உரையாடலில் சொந்த ஊரின் சித்திரம் வரையப்படுவதையும்… வண்ணதாசன் கவிதைகள் வாழும் விழிகளையும்… கனவை விழுங்கிய பகல்களைத் தொடர்ந்து குட்டிநாய்களாக வரும் இரவுகளையும்… இயல்பாக எளிதாக காட்சிப்படுத்திவிட்டு புன்னகைக்கிறாள்.

உதிரத்தின் முதல் வாசத்தை காற்றில் பரப்பியவள், அதைப் பரிசுத்தமாக்கியவள்… என்று முதல் பெண் பற்றிப் பேசும் சந்திராவின் வார்த்தைகள்…. கடைசிப் பெண்ணுக்கும் சொந்தமானது. தாய்மையின் பேரன்பை….. தாய்மையின் வலி நிறைந்த வலிமையை… தாயின் முகத்தை அக்கணமே கண்முன் வரைந்து செல்கிறது அந்த முதல் பெண்ணைப் பற்றிய பகிர்வுகள்…

ஆதியிலே பெண் இருந்தாள்
எல்லாவற்றையும் முதலில் அறிந்தவளும் அவளே
உதிரத்தின் முதல் வாசத்தை காற்றில் பரப்பியவள்
அதனைச்சுத்தப்படுத்தி பரிசுத்தத்தைக் கற்றுக்கொடுத்தவள்
முதல் பசியாற்றியவளும் அவளே,
வேட்டையாடியவள்,
உணவை அறிமுகப்படுத்தியவள்
உயிர் கொடுத்தவள்
உங்களுக்கு வலிமையை கற்றுக்கொடுத்தவள்
இன்னும் இன்னும்

ஆதலால் வழிபாட்டுத் தெய்வமாக ஆக்கினீர்கள்.
உங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டாள்
சகிப்பின் பெருவழி அவளிடமிருந்தே தொடங்கியது.

முதல் பெண்ணிடம் இருந்து தொடங்கியதாக சந்திரா குறிப்பிடும்,  “சகிப்பின் பெருவழி……”, பெண் வடிவில் நம் வாழ்வில் உள்ள அனைத்து உறவுகளின் முன்னால் நம்மை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச்சொல்கிறது.

மினுங்கிய அன்பால் தருவிக்கப்பட்ட
ஒரு முத்தம் நெடுஞ்சாண்கிடையாக்கியது…

என… சந்திரா காதலைக்கொண்டாடுகிற ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் பேராசையும் பொறாமையும் கைகோர்த்துக்கொள்கிறது.

இனிமேல் மீட்டெடுக்கவே முடியாத ஒப்பனைகளால் உருவாக்கி விட முடியாத கடைசிக் கிராமங்களின் கடைசி உறவுகளை விட்டுப் பிரிந்து… மாய வேகத்தோடு கண்களைக் கட்டிக்கொண்டு ஓடுகிற “ஐடி” அன்பர்களும் “மால்” ஜோடிகளும் நிறைந்த முதல் தலைமுறைக்குள்… அடியெடுத்து வைத்த கூட்டத்தின் ஒரு அடையாளமாக சந்திராவைப் பார்க்க முடிகிறது.

எளிதில் வாசித்து பொருள் புரிய முடியாத கவிதைகளைப் பற்றிய அங்கலாய்ப்புகள் என்னிடமும் இருக்கிறது. சராசரி வாசிப்புகளைத் தாண்டிய கவிதைகளின் எண்ணிக்கையே அதிகம். ஒரே ஒருமுறை வாசித்துவிட்டு நீங்கள் எளிதில் உதறிச்சென்று விட முடியாத ஆளுமையும் கனமும் கொண்ட கவிதைகள்.

ஆனால்… சந்திராவின் அத்தனைக் கவிதைகளும் நிமிர்ந்தே நடக்கிறது. எதைப்பற்றி பேசினாலும் அச்சமின்றி தெளிவாகக் கம்பீரமாகப் பேசுகிறது. சந்திராவின் கவிதைகள். சந்திராவின் பிம்பங்களாகவே தெரிகிறது.

காட்டின் பேரரசியாக, தனிமையின் தேவதையாக, காதல் ராட்சசியாக, நீலமலர்களின் தலைவியாக. காட்டின் பாடல்களோடும் பறவைகளோடும் தனக்கே தனக்கே சொந்தமான, தான் பெரும்பக்தி கொண்டிருக்கும் தனது காதலனோடு தனியோரு உலகத்தில் மலைமுகடுகளின் மேல் ஆட்டுக்குட்டிகளை மேய்க்கிற சிறுமியைப்போல வசிப்பதையே பெரிதும் விரும்புகிறவராக இருக்கிறார் சந்திரா.

சந்திராவின் நீலமலர்கள் நிரம்பிய காடுகளை, தூரத்தில் ஒலிக்கிற அதன் பாடல்களை சன்னமான ஒலியில் வெளியில் இருந்து கேட்டபடி, வெளியில் இருந்து பார்த்தவனாகவே என்னை நான் உணர்கிறேன்.

நீங்கள் அந்தக்காடுகளின் உள்ளே உள்ளே சென்று…. செழிப்பான நாணல்களை தாங்கி நிற்கும் சந்திராவின் கரைகளோடு ஒரு நீண்ட நடை நடந்து, நீலமலர்களோடு நின்று பேசி…. சந்திராவின் காட்டுப்பூக்களின் வண்ணங்களை உங்களுக்குள் உள்ளும் புறமுமாக பூசிக்கொண்டு திரும்பி வாருங்கள்.

சிறுவயது முதலாகவே புத்தகங்களோடு புத்தகமாக வளர்ந்த கவிஞர் நா.முத்துக்குமார், தனது பட்டாம்பூச்சி பதிப்பகத்தின் மூலமாக இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது இன்னும் சிறப்பு.

எழுத்தாளராக, கவிஞராக அதனதன் பாத்திரங்களில் நிறைந்து நிரம்பி நிற்கிற சந்திரா , அடுத்து நிரம்பி நிறைந்து வழியப்போகிற பாத்திரம், திரைப்பட இயக்குநர்.

சந்திராவின் திரைப்படத்திற்காக தமிழ் சினிமாவோடு, தமிழ் சினிமாவில் ஒருவனாக நானும் ஆவலுற்றுக்கிடக்கிறேன்.

–    முருகன் மந்திரம்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி ஏன் திருப்பித் தரணும்? அக்ரிமென்ட் அப்படியா இருக்கு? அனல் பறக்குது கோடம்பாக்கம்.

லிங்கா படம் வெற்றியா? தோல்வியா? கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த சர்ச்சைக்கு நேற்று விடை கிடைத்துவிட்டது. ‘என்னை பொருத்தவரை லாபம்தான்’ என்று கூறிவிட்டார் சென்னைக்கு வந்து...

Close