பொயட்டுக்கும் ஹைட்டுக்கும் ஃபைட்டு? ஸ்டார் ஓட்டலில் மோதிக் கொண்ட ஹீரோக்கள்!

நண்டு கொடுக்குலேயே பிளேடு இருந்தாலும், அது நாண்டுகிட்டு சாவறது ஏதோ ஒரு எண்ணெய் சட்டியிலதான்! வாலிப கொடுக்குக்கெல்லாம் ‘வைட்டமின் லவ்’ பொங்கி வர்ற காலம் பொற்காலமா இருக்கலாம். ஆனால் எங்காவது சறுக்கி எக்குத்தப்பா விழும்போதுதான், நாம விழுந்தது காதல்ல இல்ல… வெவகாரமான எண்ணெய் சட்டியில என்கிற ஞானமே வரும்! அந்த மாதிரி நேரத்திலெல்லாம் ஆகாயம் புட்டுக்கிட்டு ஆல்கஹாலா கொட்டும்! ஒயினோ, பிராந்தியோ, விஸ்கியோ, பீரோ… வழியுற வானத்தை கோப்பையில பிடிச்சு, ‘ராவா’ அடிச்சபடியே புலம்ப வைக்கும்.

அந்த ஹீரோவுக்கும் அப்படியொரு லவ் பெயிலியர். ஒரு மாலை நேரத்தில் அந்த ஸ்டார் ஓட்டல் பாரில் ஒதுங்கிவிட்டார்! தொட்டுக்கறதுக்கு தட்டு நிறைய மின்னல்கள் இருந்தாலும், ‘ராவா’ அடிச்சுட்டு பட்டினியா படுக்கிற சுகம் காதல்ல மட்டும்தாண்டான்னு கத்தணும் போல இருந்திச்சு அவருக்கு. டைட்டில்ல ‘பொயட்டு’ன்னு போட்டுக்குற அளவுக்கு அவருக்கு கவிதை தெரியும். ‘துண்டு பீடி, தொடப்ப கட்டை’ன்னு இங்கு எதை எழுதினாலும் பாட்டா படிச்சுருவானுங்க. இசையா வடிச்சுருவானுங்க என்பதும் புரியும். அதனால்தான் தான் நடிக்கிற படத்திலெல்லாம் ஒரு பாட்டாவது சொந்தமா எழுதி பரவசம் அடையுது அவர் மனசு! (அதை பாடல்னு ஒப்புக்குறவனும், கவிதைன்னு கற்பிக்கிறவனும் சரஸ்வதி கோவில்ல பெருச்சாளியா திரிவதுதான் அடுத்த ஜென்மத்து தண்டனையாக இருக்கும்)

அந்த ஹீரோ குடிக்க ஆரம்பிச்சா, சரக்கு சர்வ் பண்ணுற வெயிட்டர்கள் கூட, ‘வொய் திஸ் கொலவெறி சார்?’னு இதயம் துடிப்பார்கள். அவரே இருபது பெரிய பீர் பாட்டிலையும் நாலு சின்ன பீர் பாட்டிலையும் ஒண்ணு மேல ஒண்ணு அடுக்கி வச்ச மாதிரிதான் இருப்பார். ஓவரா குடிச்சு உடம்பை புட்டுக்க போறாரோங்கிற அச்சம்தான் அந்த வெயிட்டர்களுக்கு! அறிமுகமாகும் போது அவர் மார்க்கெட் ஒரு பென்சில் மாதிரிதான். இன்று அவரது மார்க்கெட்… அதே பென்சில் அசோக் பில்லராக வளர்ந்தால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது! கமல், ரஜினியெல்லாம் ஆசைப்பட்ட மொழியில் கூட நடித்து அங்கும் கொடி நாட்டிவிட்டார்.

அவ்வளவு பெரிய உச்சத்துக்கு போனவர், அப்படி கிடைச்ச இடத்தை காப்பாத்திக்கணும்னு நினைக்கறதுதானே முறை? ஆனால் அவரது ஹாபியே வேற…. போக வர்ற இடத்துல கிடைச்ச எதையும் விட்டு வைக்க மாட்டார். அது கோங்குரா சட்டினியாக இருந்தாலும் சரி. கோரைப்புல் சூப்பாக இருந்தாலும் சரி. குலோப்ஜாமூனாக இருந்தாலும் சரி. வேட்டை முடிஞ்சதும் வேறொன்றைத் தேடிப் போற அளவுக்கு மனசு மரத்துப் போயிருந்தாலும், இதோ இப்ப புலம்புறாரே… அதுக்கு காரணம் ப்யூர் லவ்! மூடி மூடி பாதுகாத்த லவ். அதுவும் ஏதோ பறந்து போற இடத்துல பச்சக்குன்னு புடிச்சிட்டு வந்த வண்ணத்துப்பூச்சி இல்ல அது. மெல்ல மெல்ல மேனி சிலிர்க்க வைத்த கோயில் புறா. இவரது காதலி ஒரு பெரிய நடிகரின் மகளும் கூட!

‘நமக்குதான் உலகமே வியக்குற விதத்துல கல்யாணம் ஆகிருச்சே. இன்னொரு காதல் எதற்கு?’ என்றெல்லாம் நினைக்காமல் நடிகையிடம் விழுந்துவிட்டார் பொயட்டு. இந்தியில் நடித்தபோது மும்பையில் ஒரு பிளாட் வாங்கினார் அந்த வாரிசு நடிகை. உடனே பக்கத்து பிளாட்டை பொயட்டும் வாங்கினார். அதற்கப்புறம் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட் வெளிப்புறம் பூட்டியே கிடந்தது. இன்னொரு பிளாட் உட்புறம் பூட்டியே கிடந்தது. “இவரு அவரை வச்சுருக்காரம்ல?” என்று மும்பையில் ஆரம்பித்த பேச்சு, சென்னை வரைக்கும் வந்து, இவர் வீட்டுக்குள்ளும் நுழைய… கலவரம் ஸ்டார்ட்! அவரது மனைவியும் காதல் மனைவிதான். மூத்தவர்கள் பேசிப் பார்த்தார்கள். முறையிட்டார்கள். அழுதார்கள். மிரட்டினார்கள். எதற்கும் மசியாத லவ் அது.

அப்புறம் எப்படிய்யா உடைஞ்சுது?

காரணம் இன்னொரு ஹீரோ. ‘காதல் வளர்த்தேன். காதல் வளர்த்தேன். உசிருக்குள்ள உன்னை வச்சு காதல் வளர்த்தேன்…’ என்று ஒவ்வொரு உயிர்ச்செல்லிலும் காதல் பயிரிடுகிற வேளாண் விஞ்ஞானி அவர். வாரிசு நடிகையும் பாடகி. வேளாண் விஞ்ஞானியும் பாடகர். ஒரு இசையமைப்பு கூடத்தில் பாடப் போன போது வந்த திடீர் காதல் அது. ஹீரோவின் ராசிப்படி அது நாளைக்கே கூட புட்டுக் கொள்ளக் கூடும். அந்த பொயட்டுக்கும், இந்த ஹீரோவுக்கும் ஜென்ம ஜென்ம பகை! கல்யாணத்துக்கு முன்பு வரை கூட இவரும் அவரும் உர் உர் எதிரிகள். அப்புறம் மனைவியை பழிவாங்குவதாக நினைத்து இவரிடம் தேடிப்போய் நட்பு வைத்துக் கொண்டார் பொயட்டு. நல்லாதான் போய் கொண்டிருந்தது நட்பு. அந்த வாரிசு நடிகையும் நம்ம வேளாண் விஞ்ஞானியும் பழகுகிற வரைக்கும்… அதற்கப்புறம்?

ந்தா… இங்க கொண்டு வந்து உட்கார வச்சுருச்சே? அந்த ஸ்டார் ஓட்டலின் ‘சரக்கு’ பிரிவு, அன்று சந்தித்த கலகத்தை அதற்கு முன்பு சந்தித்ததேயில்லை! பொரும்பாலும் ஸ்டார் ஓட்டல்களில், மேல் பல் கடிப்பது கீழ் பல்லுக்கு தெரியக்கூடாது என்று நினைப்பார்கள். விக்கல் வந்தால் கூட, கழுத்திலேயே அதை கைப்பற்றி சத்தமே போடாமல் மீண்டும் தொண்டக்குழிக்கு கீழே அனுப்பிவிடுகிற அளவுக்கு நாகரீகம் காப்பார்கள். அங்குதான் இவர் மாரியாத்தா கோவிலின் மைக்செட்டை கட்டினார்.

“ஏண்டி…நீ அவன் கூட பழகுறியாம்ல? நல்லாயிருப்பியா? அவன் நல்லவன் இல்ல. கெட்டவன் கெட்டவன்” என்றெல்லாம் நாலாபுறமும் எக்கோ அடிக்க எச்சரித்துக் கொண்டிருந்தார் பொயட்டு. தொடர்ந்து ஒருவாரமாக நீதி கேட்டு நெடும்பயணம் போய்விட்டுதான் இந்த பாரில் வந்து நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார். அது தெரியாமல் அதே ஏரியாவுக்கு பொயட்டின் முன்னாள் காதலியான அந்த ஹைட்டு புறாவுடன் வந்து விட்டார் காதல் விஞ்ஞானி.

ஐயோ பாவம். அந்த அரைகுறை வெளிச்சத்தில் அங்கு ஓரமாய் நின்று கிடார் வாசித்துக் கொண்டிருந்த வெள்ளைக்கார தம்பியும், அந்த அழகான குடி மடத்தில் ‘என் கோப்பை, என் உரிமை’ என்று வானத்தில் பறந்து கொண்டிருந்த காஸ்ட்லி குடிகாரர்களும் இன்னும் சற்று நேரத்தில் ஒரு இட்லி பானை வெத்தல பொட்டியாக நசுங்கப் போவது தெரியாமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லாரும் வருவதற்கு முன்பே, அதே குடி ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்து அந்த தேவ பாயாசத்தை சொட்டு சொட்டாக உள்ளே இறக்கிக் கொண்டிருந்தார் மற்றொரு ஹீரோவான வெற்றி ரவி. அவர் இருப்பது இந்த மூவருக்குமே தெரியாது.

இவர்கள் இருவரையும் ஜோடியாக கண்ட பொயட்டு பெரும் கூச்சலிட ஆரம்பித்திருந்தார். ‘‘டேய்… துரத்தி துரத்தி பழிவாங்குனியே…. தூரமா போயி காதலிப்பேன்னு பார்த்தா, நான் குடிக்கிற இடத்துக்கே வந்து கோமாளியாக்குறியா என்னை?” என்று ஆவேசத்தோடு எழுந்துவிட்டார் . எவ்வளவு வேகத்தோடு எழுந்தாரோ… அதே வேகத்தில் மண்டை பெண்டுலம் மாதிரி ஆடவும், கால்கள் கரண்ட்டை உறிஞ்சிய மாதிரி துடிக்கவும் செய்ய பெரும் அச்சத்தோடு படக்கொன்று சேரில் உட்கார்ந்தார். “யேய்… என்னை கொல்ல பார்க்குறான். கொல்ல பார்க்குறான்…” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே மீண்டும் எழ, ஓடிவந்த வெயிட்டர்கள் எக்ஸ்யூஸ் மீ சார்… என்றபடி சூழ்ந்தார்கள். “டேய்…. லவ்வுடா. லவ்வு. அந்தா அவன் பக்கத்துல நிக்கறா பாரு. ஏமாத்திட்டா“ என்று தேம்பியழுதவர், மடேர் மடேர் என்றபடியே மார் மேல் அடித்துக் கொள்ள, கிடார் தம்பியின் விரல்களெல்லாம் இப்போது நடுநடுங்க ஆரம்பித்துவிட்டது.

‘மார்லேயே மத்தளம் வாசிக்கிறான். விநோதமா இருக்கே’ என்ற விழிப்புடனும், அவன் அடிக்கிற அடியில நம்ம கிடார் கம்பி அறுந்துரும் போலிருக்கே என்ற திகைப்புடனும் எந்த நேரத்திலும் கிளம்புகிற பாய்ச்சல் பொசிஷனில் நிற்க, பாய்ந்து சென்று அந்த கிடாரை இழுத்தார் பொயட்டு. அப்படியே இந்த காதல் ஜோடி பக்கம் திரும்பி, “டேய்… நீ மட்டும்தான் ஸாங் போடுவியா? அவ பாடுவா? அவ கூட நீயும் பாடுவ… அப்படியே ரெண்டு பேரும்…. ஹேய் ஹேய்…” என்று பெருங்குரலில் சிரித்தபடியே அந்த கிடாரை பறித்து தலைக்கு மேல் சுற்ற, எந்த நேரமும் அது நம்ம தலையை பதம் பார்க்கும் என்ற அச்சத்தோடு பெருந்திகிலில் ஆழ்ந்தது அந்த இடம்! குடிகாரர்களின் மடம்!!

இவ்வளவு கூச்சலையும் அலறலையும் திகிலோடு பார்த்துக் கொண்டிருந்த நடிகை, “யேய்… வாப்பா போயிரலாம்” என்று காதல் விஞ்ஞானியை அழைக்க, முறுக்கிக் கொண்டு எழுந்தார் அவர். “யேய்… விடுப்பா. நானும் போனா போவுதுன்னு பார்க்குறேன். ஒரு தட்டு தட்டுனா பொட்டுன்னு போயிருவான். அதுக்காக பார்க்குறேன். எங்கப்பால்லாம்… இவன…?” என்று சொல்லும் போதே இரண்டு கண்களிலும் தாரை தாரை அழ வந்துருச்சு இவருக்கு. ஆவேசமாக துடைத்துக் கொண்டவர், “டேய்… வாடா. அவ எங்கூட வந்தான்னா அது என் தெறமை? காப்பாத்திக்க துப்பு இல்ல. எங்கிட்ட மோதுறீயா?” என்றபடி பெரும் போருக்கு தயாரானார்.

இவ்வளவையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த வெற்றி ரவி, போட்டது போட்டபடி ஓடி வந்தார். “யேய்… ஏன்யா அசிங்கம் பண்றீங்க? ப்ரோ… ப்ளீஸ். கொய்ட் கொய்ட்” என்று இருவருக்கும் நடுவில் சீன பெருஞ்சுவராய் நின்று கொண்டார். அப்படியே பொயட்டை கொண்டு போய் ஒரு சேரில் உட்கார வைத்துவிட்டு, “டேய்… மாப்ள நான் சொல்றேன். நகரக் கூடாது” என்று எச்சரித்துவிட்டு, “நீங்க கௌம்புங்க… ” என்று இவர்கள் இருவரையும் அங்கிருந்து தள்ளிக் கொண்டுபோய் காரில் ஏற்றிவிட்டு திரும்பினார்.

உள்ளே வந்தால்… அட அங்கு இன்னொரு பேரதிர்ச்சி. யாரோ ஒரு டீசன்ட் குடிமகனின் தோளில் தொங்கிக் கொண்டிருந்தார் பொயட்டு. “டேய்…. ரவிழ்… ரவிழ்… நான் என்னழா தப்பு பண்ணுஷேன். ஏன் அவழ் அப்படி பண்ணினிஷா? சொல்லுறா ரவிழ்… சொல்லுறா ரவிழ்… என்று குழறி குழறி கதறிக் கொண்டிருக்க, “அடப்பாவி.. நான்னு நினைச்சு இன்னொருத்தன் தோள்ல தொங்குறியே? அவனும் ஏதோ ஹேங்கர்ல சட்டைய தொங்க விட்ட மாதிரி சிவனேன்னு நிக்குறானே” என்று ஷாக்கானார்.

அதற்கப்புறமும் அங்கிருக்க அவருக்கென்ன பைத்தியமா? டேய்… ஒன்ன மாதிழியே அங்க ஒரு ரவிழ் நிக்குறான்” என்று பொயட்டு தன்னை கண்டு பிடித்து கவரவ கொலை செய்வதற்குள் எடுத்தார் ஓட்டம்!

சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கும் மேலாச்சு. பொயட்டு இன்னும் அதே பாருக்குதான் போகிறார். புது ஜோடிகள்தான் இடத்தை மாத்திருச்சு!

(ஜனனம் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் மாலை நேரத்து மயக்கம் தொடரிலிருந்து)

2 Comments
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    உண்மையா இல்ல உற்பத்தியா டியர்?

  2. Dandanakka says

    என் மகனுக்கும் தனுசுக்கும் நடந்த சண்டைய சொல்றியா. எம் பையன் ஸ்ருதிய ஓட்டிட்டு போய்டண்ட, அதனால வந்த கடுப்பு. இன்னொரு விஷயம் தெரியுமா வெற்றி ரவிக்கும் ஒன்பது தாராவுக்கும் இதுவாமே.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாங்க பிரண்ட்ஸ்தான்… ஆனால் காலை வாரிக்குவோம்!

முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் தவறாமல் பேட்டிகளில் உச்சரிக்கும் ஒரு தத்துபித்துவம், “எங்களுக்குள்ள போட்டியிருக்கு. ஆனா பொறாமையில்ல...” என்பதுதான். விஷால், ஜீவா, ஆர்யா போன்ற இளம் தலைமுறை ஹீரோக்கள்...

Close