மணிரத்னம், கமல் ஆசைப்பட்டது இப்போது 2டி யில்!

மணிரத்னம் முயன்று, கமல் ஆசைப்பட்டு, தனியார் தொலைக்காட்சிகளான சிலவற்றின் நாக்கில் எச்சில் ஊற வைத்து… இப்படி ஒருவருக்கும் சிக்காமல் ஓட்டம் காட்டிய கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதை, இப்போது படமாகப் போகிறது. ஆனால் நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து ஒரு திரைப்படமாக எடுக்கப் பட வேண்டும் என்றால், விரிந்த தோள்களும் புடைத்த மார்புமாக வந்திய தேவன்கள் கூட கிடைத்து விடுவார்கள். முழுமையாக குறையே இல்லாமல் எடுக்கப்பட வேண்டும் என்றால் அது 500 கோடி ரூபாய் விழுங்கி ஏப்பம் விடக்கூடிய படமாக அமைந்தாலும் ஆச்சர்யமில்லை.

அதனால்தான் இதை 2டி திரைப்படமாக எடுப்பதற்கு முன் வந்திருக்கிறார்கள். இந்த அனிமேஷன் படம் இரண்டரை மணி நேரம் ஓடக் கூடியதாக இருக்குமாம். ‘வளமான தமிழகம்’ என்கிற ஒரு தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் ‘பைவ் எலிமெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் தயாரிப்பாளர் பொ. சரவணராஜா. அப்படியும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 15 கோடி என்கிறார் சரவண ராஜா.

அவ்வளவு பெரிய கதையை இரண்டரை மணி நேரத்திற்குள் அடக்கிவிட முடியுமா? ஒரு குழப்பமும் இல்லாமல் பதில் சொல்கிறார் தயாரிப்பாளர். நிச்சயமா முடியும் சார். ஏன்னா ஒரு ஏரிக்கரையை கடக்கிற காட்சியை மட்டும் பத்து பக்கங்களுக்கு மேல் சொல்லியிருப்பார் கல்கி. ஆனால் ஒரு டாப் ஆங்கிள் ஷாட்டில் அதை காட்டினால் போதுமானது. நிமிஷத்தில் முடிந்துவிடும். இப்படி எழுதப்படுகிற எல்லாத்தையுமே காட்சியாக காட்டும்போது அவ்வளவு நேரம் தேவைப்படாது அல்லவா என்றார்.

கல்கி தன் கதையில் முதலில் வந்திய தேவனைதான் அறிமுகப்படுத்துவார். ஆனால் ஹீரோவை ஒரு பில்டப்போடு காட்ட வேண்டும், அதுவும் முதலில் அவரைதான் காட்ட வேண்டும் என்கிற சினிமா ஃபார்முலா படி, நாங்கள் கொஞ்சம் அட்வான்ஸ் எடுத்துக் கொண்டு முதலில் பொன்னியின் செல்வனைதான் திரையில் காட்டப் போகிறோம் என்றார் சரவணராஜா. லிப் மூவ்மெண்ட்டெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை. பொம்மை படங்களுக்கு பாடி லாங்குவேஜ்தான் முக்கியம் என்றவர், மிக மிக திறமைசாலிகளை கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்களாம். முதலில் தமிழில் வெளியிடுவது. பின்பு உலகத்திலிருக்கிற பெரும்பாலான மொழிகளில் வெளியிடுவது என்கிற எண்ணமும் இருக்கிறது அவர்களுக்கு. இந்த படம் தொடர்பான பிரஸ்மீட்டில், அந்த கேள்வி எழுப்பப்பட்டது.

ரஜினியின் கோச்சடையான் அவ்வளவு சரியா ஓடல. அப்படியிருக்கும் போது நீங்க எடுக்கப் போற அனிமேஷன் படத்துக்கு எப்படி வரவேற்பு இருக்கும்னு நினைக்கிறீங்க? இதற்கு மிக அழகாக பொறுமையாக பதிலளித்தார் பொ.சரவணராஜா. ரஜினி சாரை பொம்மையா பார்க்க பலரும் விரும்பியிருக்க மாட்டாங்க. அதனால் கூட இருக்கலாம். பட் இருந்தாலும், அது வேற மாதிரியான பிரசன்ட்டேஷன். இது 2டி பிக்சர். கல்கியின் கற்பனைக்கு நாங்க இன்னும் அழகு சேர்த்திருக்கோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு முழுமையா இருக்கு என்றார்.

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்குள் குதியோடு படியேறி வரும் பொன்னியின் செல்வனுக்காகவும் வந்திய தேவனுக்காகவும் குந்தவைக்காகவும் கல்கியின் தீவிர ரசிகர்கள் வெயிட்டிங்..

பின்குறிப்பு- இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு புகழ்பெற்ற நடிகர் நடிகைகளையே குரல் கொடுக்க வைக்கும் திட்டம் இருக்கிறதாம். சந்தர்ப்பத்தை நழுவ விட்ராதீங்க அண்ணனுங்களா? அக்காக்களா? .

1 Comment
  1. Rangarajan says

    கோட்சடையான் படம் ஒரு சராசரி வெற்றி படம் தான். தவறான செய்தியை போடாதீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருச்சியில் லிங்கா ரிலீஸ் குழப்பம் ! தொலைபேசி வழியாக ரஜினியே தலையிட்டு பேச்சு வார்த்தை

உலகெங்கும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகவிருக்கிறது லிங்கா. ஆனால் திருச்சி தவிர.... இன்னும் எந்தெந்த திரையரங்குகளில் லிங்கா ரிலீஸ் ஆகும் என்கிற குழப்பம் நீடிப்பதால், ரசிகர்கள் கொந்தளிப்புடன்...

Close