அசினுக்கு ஒரு நீதி பூஜாவுக்கு ஒரு நீதியா?
ஏதோ பாட்டு பாடி நாலு துட்டு பார்க்கலாம் என்று கிளம்பி போகிற ஒன்றிரண்டு அப்பாவி பாடகர்கள் யாராவது கொழும்பு போய் இறங்கிவிட்டார்கள் என்று தெரிந்தால் போதும். இங்கிருக்கும் அவர்களது குடும்பத்திற்கு போன் அடித்து மிரட்டல் விடுக்கும் சிலர், ‘அவர அடுத்த பிளைட் பிடிச்சு ஓடியார சொல்லு, இல்லேன்னா கடல்ல குதிச்சு நீந்தியாவது ரிட்டன் ஆக சொல்லு’ என்று மிரட்டுவதெல்லாம் அண்மைகாலமாக நடந்து வரும் நிகழ்வுகள்தான். இந்த இக்கட்டான நேரத்திலும், இலங்கை மேப்புக்கு, சோப்பு போட கிளம்பியிருக்கிறது ஒரு கும்பல். அதுவும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டே இந்த வேலை நடப்பதால், நிஜமான தமிழ் ஆர்வலர்கள் குய்யோ முறையோவாகிக் கிடக்கிறார்கள்.
சிலர் இலங்கை காசில் படம் எடுக்க கிளம்பியிருக்கிறார்கள் என்பது லேட்டஸ்ட் தகவல். அவ்வளவு முழங்கிய சீமானே கூட கத்தி விஷயத்தில் கப்சிப்!
இலங்கைக்கு போய் ஷுட்டிங் எடுக்கக் கூடாது, இலங்கையில் நடக்கும் எந்த கலை நிகழ்ச்சிக்கும் இங்கிருந்து யாரும் போகக் கூடாது என்று குரல் எழுப்பும் இவர்களை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் பேசிவிட்டு போன பூஜாவை கூட யாரும் கண்டு கொள்ளவே இல்லை. காரணம்? அதுதான் ஒருவருக்கும் புரியவும் இல்லை. கடவுள் பாதி மிருகம் பாதி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை பூஜா, படத்தின் ஹீரோவை பார்த்து ‘ஷுட்டிங் எடுக்கணும்னா நீ இலங்கைக்கு வா. நான் ஹெல்ப் பண்றேன்’ என்று பேசிவிட்டு அமர்ந்தார். இது அப்படியே எல்லா தொலைக்காட்சி, இணையதளங்களிலும் ஒளிபரப்பானது. ஆனால் ஒருவர் கூட, இந்த செயலை கண்டிக்கவேயில்லை.
சரி… போனால் போகட்டும் என்று கண்டு கொள்ளாமலிருந்தவர்களை உசுப்புகிற மாதிரி, அவருக்கு நெருக்கமான சில இயக்குனர்களுக்கு இப்போது போன் போட்டு கேன்வாஸ் செய்கிறாராம். என்னவென்று? ‘இலங்கைக்கு வந்து படமெடுங்க. நான் ஹெல்ப் பண்றேன்’ என்று. அசினுக்கு ஒரு நீதி, பூஜாவுக்கு ஒரு நீதியா என்று கொந்தளிக்கும் சிலர், சொல்ல வேண்டியவர்களிடம் சொல்ல கிளம்பியிருக்கிறார்கள்.
கேட்க வேண்டியவர்கள் கேட்டுவிட்டுதான் என்ன செய்வார்களாம்?