பூஜை விமர்சனம்

‘ஹரிக்கு ஹரியே சரி’ என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பிளட் பிரஷர் படம்! ஆளே வேணாம். அருவா இருந்தா போதும் என்கிற அளவுக்கு ஹரி ஹர சுதனாக நின்று கலவரப்படுத்துவார் ஒவ்வொரு முறையும். இந்த முறை அந்த ஆக்ஷனில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா! புவியீர்ப்பு விசையையே வெட்கிப் போகிற அளவுக்கு சண்டைக்காட்சிகள் இருந்தாலும், ஒரு மாதிரி ட்யூன் ஆகி உட்கார்ந்து விடுகிறோமில்லையா? நம்மையறியாமல் கைதட்ட வைக்கின்றன சில குத்து வெட்டுகள்! அங்கதான் கெலிக்கிறாரு ஹரியும்! அதென்னவோ தெரியவில்லை, காதல்… ஆக்ஷன்… சென்ட்டிமென்ட்… இம்மூன்றையும் ஒரு தேர்ந்த சமையல்காரரின் யுக்தியோடு கலக்க ஹரியால்தான் முடிகிறது. கூச்சலும் குருதியுமாக வாழ்வாங்கு வாழுங்க சாரே…!

விஷால் எப்படி? தோட்டாவுக்கு சீற கத்துக் கொடுக்கணுமா என்ன! அவினாசி மார்க்கெட்டில் வட்டிக்கு விடுகிற வேலை அவருக்கு. பக்கத்து ஊரில் வட்டிக்கு விடுகிற அன்னதாண்டவம், ‘அதார்றா என் ஏரியவுல?’ என்று ஆட்களை அனுப்ப, வாழைக்குலையை சீவுகிற மாதிரி ‘வவுந்து’ அனுப்புகிறார் விஷால். பகையை பத்த வச்சுட்டாரா? அதற்கப்புறம் அந்த ஊர் போலீஸ் அதிகாரி சத்யராஜை போட்டுத்தள்ள கூலிப்படையை ஏவுகிறான் அன்னதாண்டவம். அங்கேயும் ஸ்ருதியின் மெசேஜ் மூலம் வந்து சேரும் விஷால், சத்யராஜை மயக்கநிலையில் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, தன்னை காப்பாற்றியவன் யார் என தேடுகிறார் சத்யராஜ். தனக்கு இடைஞ்சல் பண்ணியவன் எவன் என்று தேடுகிறான் வில்லன். அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் தன் சொந்த சித்தப்பாவையே அறைகிற வில்லனை அவன் வீட்டுக்கே போய் வேட்டியை உருவுகிறார் விஷால். ‘மார்க்கெட்ல வச்சு உன் கைய முறிக்கல…? நான் ஆம்பள இல்லடா’ என்று கூக்குரல் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வருவதற்குள், நாம் தேடும் அந்த பலே பக்கிரி விஷால்தான் என்பதை உணர்கிறான் வில்லன் அன்னதாண்டவம்.

அதற்கப்புறம் பழிவாங்கும் படலத்தில் மேலும் நெருப்பு பற்றிக் கொள்கிறது. சைலன்ட்டாக தனது கூலிப்படையை வைத்து விஷாலின் அம்மா ராதிகாவை போட்டுத்தள்ளிவிட்டு சொந்த ஊர் பாட்னாவுக்கு பிளைட் ஏறுகிறான் அன்னதாண்டவம். துரத்துகிற விஷால் பாட்னா வரைக்கும் போய் எலும்பை எண்ணி, எமனுக்கு அனுப்பிவிட்டு சொந்த ஊர் திரும்புகிறார். நடுநடுவே ஸ்ருதியுடன் லவ், ஆன்ட்ரியாவுடன் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் என்று ஜிகினாவை கொட்டி, சீனியிலும் இனிப்பேற்றுகிறார் ஹரி.

ஓங்குதாங்கு விஷாலுக்கு மாங்கு மாங்கு என்று அடித்து புரட்டுகிற வேலை. அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார் அதில். செய்யாத தப்புக்கு அம்மாவிடம் அடிவாங்கி வீட்டை விட்டு வெளியேறுவதெல்லாம் பிளாஷ்பேக் காட்சி. இருந்தாலும் அவ்வளவு பெரிய கோவை மில்ஸ் அதிபரின் வாரிசு, சாக்குமூட்டைகள் புழங்கும் மார்க்கெட்டில் பிழைக்கிறார் என்பதெல்லாம் வெவ்வேவ்வே… உன்னை லவ் பண்றேன். உன்னைவிட பெட்டரா ஒருத்தன் கிடைச்சா உன்னை விட்டுட்டு அவனோட போயிருவேன் என்கிற ஸ்ருதியின் சித்தாந்தம் விஷாலையே புரட்டிப்போட்டு தாக்கும்போது, அடப்பாவமே ஆகிறார் மனுஷன். புலியென சீறவும் பூனை போல பம்மவும் ஏற்ற உடல்வாகுடன் பின்னி எடுக்கிறார் விஷால். ஹரியின் வேகமான வில்லுக்கு மிக பொருத்தமான அம்பு விஷால்தான். தொடரட்டும் கூட்டணி.

இவருக்கு துணை சாமிகளாக சூரி, பிளாக் பாண்டி, இமான் அண்ணாச்சி. அதிலும் ஓவராக வாயை விட்டு உதைவாங்குகிற சூரி, அடுத்த அஞ்சாம் நிமிஷம் எதுவுமே நடக்காதது போல, ‘அப்புறம். நல்லாயிருக்கீங்களா? எப்ப வந்தீங்க?’ ரேஞ்சுக்கு மாறும்போது குலுங்குகிறது தியேட்டர். அண்ணே… இந்த ஜிப்பாவுல நீங்க வைரமுத்து மாதிரியே இருக்கீங்க என்று பாண்டி சொல்ல, உன்னை பார்த்தா முத்துன வயிறு மாதிரியிருக்கு சூரி சொல்கையில் சிரிக்காத ஆளுங்க இருக்காங்களா? நவீன செந்திலாக்கிவிட்டார்கள் பிளாக் பாண்டியை. பொருத்தமாக இருக்கிறார் அவரும். ‘உன்னை முதலாளி கூப்புடல’ என்று சொல்லிவிட்டு போவதில் ஆரம்பித்து, வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்து உதை வாங்குகிற வரைக்கும் எல்லா சீனிலும் கலகலப்பூட்டுகிறார். இந்த சின்ன செந்திலுக்கு சிறப்பான எதிர்காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஸ்ருதிஹாசனின் குரலும், அவரது டிரஸ் சென்சும், நள்ளிரவு சேனல் ரேஞ்சுக்கு ஒரே ஒசத்தலா ஒசத்துது. ‘ஸ்டேட்டஸ் தெரியாம பழகிட்டேன்’ என்று விஷாலை எடுத்தெறிவதும், காதல் வருகிற நேரத்தில் அவர் தன்னை விட ஆயிரம் மடங்கு பெரிய வீட்டு பிள்ளை என்று தெரியவர, இப்ப போய் லவ்வை சொன்னா தப்பாயிருமே என்று கவலைப்படுவதுமாக நடிக்கவும் நல்ல ஹோப் கொடுத்திருக்கிறார் ஹரி. இருந்தாலும், ஸ்ருதிக்கு வாய்ந்தது ஓன்லி ஓப்பன்தான் என்கிற அளவுக்கு ‘கண்’காட்சி கச்சிதம். முகத்திற்கு வைக்கப்படும் குளோஸ் அப்புகள் மட்டும் கொடூரம் பாஸு.

ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார்கள் ஆன்ட்ரியாவை. என்ன இருக்கிறதென்று இவரை கொண்டாடுகிறார்களோ? உற்று உற்று பார்த்தாலும் ஒன்றுக்கும் உதவாத வெற்று சிலேட்டாகவே இருக்கிறது ஏரியா!

சத்யராஜ் என்கிற கிழட்டு சிங்கத்திற்கு அதிகம் வேலையில்லை. இருந்தாலும் இந்த வயசிலும் அவரை ஓடவிட்டு படம் எடுத்திருக்கிறார் ஹரி. ரிங் மாஸ்டர் அப்படி என்றால் ஓடித்தானே ஆக வேண்டும்?

வில்லும் அம்பும் விஷால் ஹரி என்றால், அதற்கு வேகம் தருபவராக இருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன். சண்டை பிரியர்களுக்கு இந்த படம் ஊற வச்ச கோங்குரா சட்டினி. பரபர சண்டைக்காட்சிகளை பதற பதற எடுத்து தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரியன். பல காட்சிகளில் அவர் வைத்திருக்கும் ஏரியல் ஷாட், அழகோ அழகு!

இசை யுவன். ‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ தசாவதாரம் ட்யூனை மனசாட்சியே இல்லாமல் ரிப்பீட் அடித்திருக்கிறார். போதாத குறைக்கு அதையே பின்னணி இசையாகவும் ஒலிக்க விடுகிறாரா? கஷ்டம்டா சாமிய். ஆனாலும் ஒன்றிரண்டு பாடல்கள் இனிமை.

ஹரியோட பூஜையில் பக்தி இருக்கோ, பழம் இருக்கோ… கண்டிப்பா சிதறு தேங்காய் உண்டு. அதை தானே வளர்த்துவிட்ட தடி தடி வில்லன்கள் மண்டையில் உடைத்து ஆயுதபூஜை கொண்டாடியிருக்கிறார் அவர்.

வினோதம்னு அல்லாடறதா? விசேஷம்னு கொண்டாடுறதா?

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. ananth says

    pls kathikku aditha jaalrava ithukkum adinka

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கத்தி விமர்சனம்

சொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள்...

Close