பொறியாளன்- விமர்சனம்
பென்னி குவிக் மாதிரி பெயரெடுக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கட்டிட பொறியாளனை ‘தண்ணி தவிக்க’ வைக்கிறது விதி. இரண்டு கோடி பணத்தை ஏமாந்து அதை இரண்டே நாளில் மீட்டெடுக்க வேண்டிய அவசரத்திலிருக்கும் அவன், என்னவெல்லாம் பாடு பட்டு, எதிராளிக்கு எப்படியெல்லாம் ‘வூடு’ கட்டுகிறான் என்பதுதான் படம். ஏமாற்றுகிறவனின் பாடி லாங்குவேஜ் எப்படியிருக்கும்? ஏமாந்தவனின் பாடி எப்படியெல்லாம் துடிக்கும் என்பதை சீட் நுனிக்கு தள்ளி ஹார்ட் பீட்டில் கை வைத்து விவரிக்கிறார் இயக்குனர் தாணுகுமார். ‘எவன் கெட்டால் எனக்கென்ன?’ என்கிற அதிகாரப்போக்குடன் நடந்து கொள்ளும் ரிஜிஸ்தர் ஆபிஸ்களையும் அதன் சட்ட திட்டங்களையும் பார்த்து ‘இடி விழ….’ என்று சபிக்காமல் எவரும் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாது.
எதிலும் ஒழுங்கு வேண்டும் என்று நினைக்கிற கட்டிட பொறியாளனான ஹரிஷுக்கு வேலை செய்கிற இடத்தில் மதிப்பில்லை. ஏன் நாமே சொந்தமாக சென்னையில் இடம் வாங்கி அபார்ட்மென்ட் கட்டி விற்க கூடாது என்கிற சிந்தனை எழ, அதற்கான வேலைகளில் இறங்குகிறான். அந்த நேரத்தில்தான் வட்டிக்காரன் ஒருவனிடம் வசூல் வேலை பார்க்கும் நண்பன், தான் வசூலித்த பணத்தை ரொட்டேஷன் விட்டு அபார்ட்மென்ட் கட்டுவோம். இரண்டே மாதத்தில் திருப்பி கொடுத்தால் போதும் என்று பார்ட்டனராக சேர்கிறான். இடம் வாங்குகிறார்கள். கட்ட துவங்கும்போதுதான் தெரிகிறது. இதே நிலம் இன்னொருவருக்கும் சொந்தமானது என்று. பிரச்சனை கோர்ட்டில் இருக்க, அந்த இடத்தில் கட்டிடம் என்ன? ஒரு செங்கல்லை கூட ஊன்ற முடியாது என்பது புரிகிறது. இரண்டு கோடியை வாங்கிக் கொண்டு நிலத்தை கொடுத்தவன் எஸ்கேப். அவனை தேடிப்பிடித்து பணத்தை மீட்பதற்குள், வட்டிக்காரனின் கெடுபிடி…. அவனுக்காக அடிதடி என்று இறங்குகிறார் ஹீரோ. முடிவு? சுபமா, இல்லையா?
கறிவேப்பிலை இல்லாமல் பொங்கலா? காதலும் இருக்கிறது படத்தில். ஆனால் கறிவேப்பிலை சைசுக்கு! அந்த புண்ணியத்தில் சில டூயட்டுகளும் இருக்கிறது. ஹீரோ ஹரிஷுக்கும், ஹீரோயின் ஹாசிகாவுக்கும் பெரிதாக தேவைப்படவில்லை கெமிஸ்ட்ரி. ஏனென்றால் எந்நேரமும் பணத்தை மீட்பதற்காகவே அலைய வேண்டியிருக்கிறது ஹீரோவுக்கு. நல்லவேளை… நடுநடுவே எட்டிப்பார்க்கும் காதல் காட்சிகளில் ஹாசிகாவின் கண் பேசி கண் பேசி… யாருப்பா இது? கருப்பா ஒரு கரும்புசாறு?
பொறியாளன் ஹரிஷ் கல்யாணுக்கு இது முதல் படம் இல்லை. முகத்தில் சாந்தமும் அதே நேரத்தில் ரவுத்திரமும் ததும்புகிறது. ஆக்ஷன் கதைகளாக தேடி நடித்தால் எதிர்காலம் இனிக்கும். ஆனால் ஒன்று…. அடி விழுந்தால் அது ஒன்றரை டன்னுக்கு இறங்கி ஒரேயடியாக எதிரியை முடக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இந்த மல்லுக்கு நிக்கிற ஹீரோக்களை எந்த ஆணும் சரி… பெண்ணும் சரி… ரசிப்பதேயில்லை. நந்தா படத்தில் வரும் சூர்யாவின் படத்தை வைத்து நாலு நாளைக்கு வணங்குங்கள்… பாதை புலப்படும். ஒரு காட்சியில் காதலியின் அண்ணனாக நடிக்க வேண்டிய இக்கட்டான நேரத்தில் கூட அப்படியே அசால்ட்டாக நடித்து அப்ளாஸ்களை அள்ளிக் கொள்கிறார் மனுஷன்.
அந்த வில்லனின் கொடூரத்தை இப்போது நினைத்தாலும் பகீர் என்கிறது. விஷத்தை நீட்டி, நீயா குடிச்சுட்டு சாகு… என்று பரலோகம் அனுப்புகிறவர், தன் குல தொழிலை தன் செல்ல மகளுக்கும் சொல்லிக் கொடுத்து பணம் எண்ண விடுவதெல்லாம் ‘அடுத்த தலைமுறை எங்கே போவுதுடா?’ என்கிற அச்சத்தையே ஏற்படுத்துகிறது.
வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட், நெற்றியில் விபூதி என்று அச்சு அசலாக பொருந்திவிடுகிறார் அந்த திருட்டு புரோக்கர். இவனை அவனிடம் கோர்த்துவிடுவது, அவனை இவனிடம் கோர்த்துவிடுவதென்று அவரது ரீல் பிளே, நாட்டில் இப்போது தெருவுக்கு தெரு பெருகிவிட்ட ரியல் பிளே! படத்தில் மயில்சாமி கூட இருக்கிறார். பட்… சிரிப்புதான் நஹி.
இசை எம்.எஸ்.ஜோன்ஸ் என்ற புதியவர். பின்னணி இசையில் காட்டிய அக்கறையை எல்லா பாடல்களிலும் காட்டியிருக்கலாம். இருந்தாலும் ஒன்றிரண்டு பாடல்கள் முணுமுணுக்க வைக்கிறது. ஒரு ஷாட்டாக இருந்தாலும் கோவா, கும்பகோணம் என்று அலைந்து திரிந்திருக்கிறது வேல்ராஜின் கேமிரா.
ஏமாற்றுக்காரர்களின் நெட் வொர்க் எப்படியிருக்கும் என்பதை அலைந்து திரிந்து ஹோம் வொர்க் செய்து படத்தில் இணைத்திருக்கிறார் திரைக்கதை எழுத்தாளர் மணிமாறன். ‘என்னை ஒருத்தன் ஏமாத்திட்டாங்கறதுக்காக நான் இன்னொருத்தனை ஏமாத்த மாட்டேன்’ என்று ஹீரோ பேசுகிற வசனத்தில்தான் எத்தனையெத்தனை வலியும் ஒத்தடமும்?
‘இது படமல்ல… பாடம்’ என்பார்கள் சில படங்களை. இது பாடமுமல்ல… நிலம் வாங்க நினைக்கும் நடுத்தர குடும்பத்தையெல்லாம் எச்சரித்து கரை சேர்க்கும் ஓடம்!
-ஆர்.எஸ்.அந்தணன்