புலிப்பார்வை படத்திற்காக கொண்டுவரப்பட்ட பிரபாகரன் மகன்!

‘ரட்சகன்’ போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய பிரவீன் காந்த், இப்போது இயக்கியிருக்கும் படம் புலிப்பார்வை. தலைப்பிலேயே புரிந்திருக்கும், இது சாதாரண கமர்ஷியல் படமல்ல, உலக அரங்கை தன் பக்கம் திருப்புகிற படம் என்று! இலங்கை தமிழர் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான போரின் போது தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை ராணுவம் சிறைபிடித்து, அந்த பிஞ்சு பாலகனை சுட்டுக் கொன்ற காட்சியை வெளியிட்டது சேனல் 4 என்ற தொலைக்காட்சி. அந்த காட்சியையும் பாலசந்திரனின் புகைப்படத்தையும் கண்ட ஈர மனமுள்ள எவரும் துடிக்காமல் இருந்திருக்கவே முடியாது.

அந்த ஒரு புகைப்படம்தான் இந்த திரைப்படத்தை எடுக்க உந்து கோலாக இருந்தது என்று பேச ஆரம்பிக்கிறார் பிரவீன்காந்த். முதலில் பாலசந்திரன் போலவே உருவ தோற்றமுள்ள சிறுவனை தேடி அலைய ஆரம்பித்தேன். இரண்டு மாத தேடல். 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் என்று தேடிக் கொண்டிருந்தபோதுதான் ஒன்பதாம் படிக்கும் மாணவரான இவனை பார்த்தேன். அப்படியே இருந்தான். அழைத்து வந்து முறையான நடிப்பு பயிற்சி கொடுத்து பிரபாகரனின் மகனாகவே மாற்றிவிட்டேன். இந்த படத்தின் கதையும் கூட, பாலசந்திரன் என்ற சிறுவன் எப்படி பிரபாகரனால் வளர்க்கப்பட்டான்? அவன் ராணுவ வீரர்களால் பிடிபட்டபோது கண்களில் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தது எப்படி? அவன் சுடப்பட்டது எப்படி என்பது பற்றிதான்.

அதை தாண்டி எவ்வித அரசியலுக்கும் நான் போகவில்லை. முதலில் இப்படியொரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தவுடன், முழுமையான ஸ்கிரிப்டை சென்சார் அதிகாரியுடன் உட்கார்ந்து விவாதித்து, எதையெல்லாம் தொட்டால் அனுமதி கிடைக்காதோ, அதையெல்லாம் தவிர்த்து இந்த படத்தை எடுத்தேன். விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிரியல்ல என்பதை இந்த படத்தில் பல காட்சிகளில் விவரித்திருக்கிறேன். சப் டைட்டிலாக ‘வீ லவ் இண்டியா’ என்றே குறிப்பிட்டிருக்கிறேன். நல்லவேளையாக இந்த படத்திற்கு முறையான சென்சார் அனுமதியும் பெற்றுவிட்டேன் என்கிறார் சுதந்திரக்காற்றை சுவாசித்துக் கொண்டே.

வேந்தர் மூவிஸ் மதன் பிரபாகரனாக நடித்திருக்கிறார். படத்தை தயாரித்திருப்பதும் வேந்தர் மூவிஸ் பாரிவேந்தர்தான். எவ்வித வியாபார நோக்கமும் எங்களுக்கு இல்லை. வீர தமிழனின் வரலாற்றை ஒரு படமாக பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறோம். அவ்வளவுதான் என்றார்.

சுப்ரமணியசாமி போன்ற வெள்ளைக் கழுகுகளுக்கு வியர்க்காமல் இருக்க வேண்டும். அதுதான் இப்போதய கவலையே!

1 Comment
  1. seelan says

    சுப்ரமணியசாமி போன்ற வெள்ளைக் கழுகுகளுக்கு வியர்க்காமல் இருக்க வேண்டும். அதுதான் இப்போதய கவலையே!
    100 % உண்மை.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நயன்தாராவுக்கு ஆர்யா ஹன்சிகாவுக்கு குஷ்பு சிபாரிசுக்குள் சிக்கிய ஹீரோ!

குஷ்புவையும் பிரபுவையும் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஜோடியாக்கி பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் சில இயக்குனர்கள். அப்படியொரு இயக்குனரின் கதையே கேட்டுவிட்டு குஷ்பு...

Close