எழுத்தாளர் சங்கத்தில் புகார்! இழுபறிக்கு ஆளான பிரபுதேவா?
இன்னும் ஷுட்டிங்கே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் “அது என்னோட கதைதான்” என்று ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, கடிச்சது ஒரு இடம், வீங்குனது வேறொரு இடமாகி அவஸ்தைப்படுகிறார் பிரபுதேவா! ‘ஒரு கடம் வித்வானை இப்படி கார்ப்பரேஷன் குழாய்ல தண்ணி பிடிக்க வச்சுட்டாங்களே?’ என்று பிரபுதேவா குறித்து வருந்துகிறது ஊர் உலகம்!
நடிகர் பிரபுதேவா, தமிழில் ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்கிறார் அல்லவா? அதில் ஒரு படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ பட இயக்குனர் லட்சுமண் இயக்குகிறார். தனது கேரியரில் மேலும் ஒரு முக்கிய வெற்றியை பெற்றுத்தந்தவர் என்பதால், அவருக்கே மீண்டும் கால்ஷீட் கொடுத்து தனது நன்றியை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயம் ரவி. ஐயோ பாவம், இவரது நல்ல மனசுக்கும், நம்பி படம் கொடுத்த பிரபுதேவாவுக்கும் இப்போது நாய் குடைச்சல், பேய் குடைச்சல்!
புகார் கொடுத்த இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர், அதிர்ஷ்டவசமாக அதை எழுத்தாளர் சங்கத்தில் பல மாதங்களுக்கு முன்பே பதிவு செய்துவிட்டாராம். இதனால் அவரது பாயின்ட் சங்கத்தில் வெகுவாக எடுபட, தத்தளித்து தவித்து ஒருக்களித்து ஓட வேண்டிய துர்பாக்கியத்துக்கு ஆளாகிவிட்டாராம் லட்சுமண். பேச்சு வார்த்தை தொடங்கி போர் பரணியாக ஒலித்த சிறிது நேரத்தில் அவர் ஒரு உடன்படிக்கைக்கு வந்ததாராம். “என் சம்பளத்துலேர்ந்து இவருக்கு பத்து லட்சம் தர்றேன். வாங்கிக் கொண்டு ஒதுங்க சொல்லுங்க” என்பதுதான் அது. ஆனால் பிழைக்கத் தெரியாத இவர், “ம்ஹூம்…. அவரு பிரபுதேவாகிட்ட வாங்குன அம்புட்டு சம்பளத்தையும் (கிட்டதட்ட 75 லட்சம்) எனக்கே தரச்சொல்லுங்க. விலகிக்கிறேன்” என்று கூற, இந்த காயலான் கடை பஞ்சாயத்து நமக்கு கிஞ்சிற்றும் மரியாதையை தேடித் தராது என்பதை உணர்ந்த சங்கம், “உங்க பிரச்சனையை வெளியே போய் தீர்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டது.
கடைசி தகவல் என்ன? “உனக்கு தர்றதா சொன்ன அந்த பத்து லட்சத்தையும் தரப்போவதில்லை. அந்த கதையை எடுத்தால்தானே பிரச்சனைக்கு வருவே? நாங்க வேற கதைக்கு போறோம்யா…” என்று கூறிவிட்டார்களாம். ரூம் போட்டு புதுக்கதைக்கான டிஸ்கஷன் ஓடிக் கொண்டிருக்கிறது.
பேராசை பெரு நஷ்டம்!
பின்குறிப்பு- இருவருமே ‘ப்ரீக்கி ஃபிரைடே’ என்ற ஹாலிவுட் படத்தைதான் ‘அடிச்சு’ வச்சுருந்தாங்களாம். அட மன்னாருங்களா?