விஜய்யோட டான்ஸ் பிடிக்கும்! பாராட்டிய பிரபுதேவா

இப்போதிருக்கும் எல்லா நடன மாஸ்டர்களுக்கும் மாஸ்டர் நம்ம பிரபுதேவாதான். அவரது ஸ்டைலில்தான் இன்று ‘சுளுக்கெடுக்கிறார்கள்’ அத்தனை பேரும்! ஆனால் இந்த பெரிய தல… இப்போது வெறும் நடன மாஸ்டரல்ல. இந்தி படவுலகமே ‘நான் … நீ…’ என்று போட்டிப் போட்டுக் கொண்டு கால்ஷீட் கொடுக்க துடிக்கும் முன்னணி இயக்குனர். சுமார் ரெண்டு வருஷம் கழித்து சென்னையில் பிரஸ்சை மீட் பண்ணினார். ‘ச்சும்மா… பார்த்து ரொம்ப நாளாச்சுன்னுதான் இந்த மீட். மற்றபடி விசேஷமா ஒண்ணுமில்ல.. ’ என்று கூறிவிட்டு பேச ஆரம்பித்தார்.

விருந்துக்கு வந்தவரை விக்கலெடுக்க வைக்கறது முறையில்லேன்னு நினைச்சாங்களோ என்னவோ? பெரும்பாலான கேள்விகள் அடக்கியே வாசிக்கப்பட்டன. குறிப்பாக நயன்தாரா… மனைவி… விவகாரத்து… மறு கல்யாணம் போன்ற கேள்விகள் கூட மவுனம் ஆகியிருந்தன. இருந்தாலும் அந்த கேள்வி கேட்கப்பட்டது.

நக்மாவில ஆரம்பிச்சு, சோனாக்ஷி சின்ஹா வரைக்கும் எல்லா ஹீரோயின்களுக்கும் உங்க மேல அன்பு வருதே, அது எப்படி? சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் மாஸ்டர்.

‘அது வந்து… நான் நல்லா டான்ஸ் ஆடுறேன். அது அவங்களுக்கு பிடிச்சுருக்கு. அதனால் இருக்கும்’ . தமிழ் படம் பண்ணுற ஐடியா இல்லையா? என்ற இன்னொரு கேள்விக்கு, ‘ஏன் இல்லாம? எனக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனால் நான் இப்ப இந்தியில் ரொம்ப பிஸியா இருக்கேன். அஜய் தேவ்கான் நடிப்பில் ஆக்ஷன் ஜாக்சன்னு ஒரு படம் பண்ணிகிட்டு இருக்கேன். இதற்காக ஃபாரின் போறேன். திரும்ப வர்ற சில மாதங்கள் ஆகும். அதற்கப்புறமும் நிறைய இந்திபட கமிட்மென்ட்ஸ் இருக்கு. தமிழ்ல நான் நடிச்ச களவாடிய பொழுதுகள் கூட இன்னும் ரிலீஸ் ஆகல. பாவம்…அவங்க. ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அதுவும் வந்திரட்டும். தமிழ்ல படம் பண்ணலாம்’ என்றார்.

‘கே.வி.ஆனந்த், ரவிவர்மன் போன்ற ஒளிப்பதிவாளர்களுக்கு இந்தியில் பெரிய மரியாதை இருக்கு. இங்க ரிலீஸ் ஆகற படங்களை பற்றி நான் தெரிஞ்சு வச்சுக்கறதுக்கு முன்னாடியே அவங்க தெரிஞ்சு வச்சுக்குறாங்க. அந்தளவுக்கு தமிழ்சினிமா பெரிய உயரத்துல இருக்கு. இதை நினைச்சா சந்தோஷமா இருக்கு’ என்ற மாஸ்டரிடம், ‘நீங்க சொல்லுங்க… நடனத்துல அடுத்த பிரபுதேவான்னா யாரை சொல்லுவீங்க?’ என்றொரு கேள்வியை போட்டார்கள் நிருபர்கள்.

கொஞ்சம் கூட யோசிக்கவில்லை பிரபுதேவா. ‘எனக்கு விஜய்யோட டான்ஸ் ரொம்ப பிடிக்கும்’ என்றார்.

ஆக, உலகமே வியக்கக்கூடிய இரண்டாம் மைக்கேல் ஜாக்சனுக்கு பிடித்தவர் விஜய் விஜய் விஜய்…! இதைவிட விஜய் ரசிகர்களுக்கு வேறென்ன கிஃப்ட் வேணும்?

‘பின்’ குறிப்பு- விருது கிடைக்கிற மாதிரி படங்கள் இயக்க ஆசையில்லையா என்ற கேள்விக்கு பிரபுதேவா சொன்னதுதான் பகீர் பதில். ‘அந்தளவுக்கு நான் புத்திசாலி இல்லேங்க’. (அப்படின்னா… கமர்ஷியல் படம் எடுக்கிறவங்க எல்லாரும்?)

Read previous post:
மலேசியாவில் விக்ரம்

நட்சத்திர சரவெடி, இந்தியாவில் முன்னணி ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான "எபிக் ஈவண்ட்ஸ்" தற்போது "விசிட் மலேசியா 2014" மற்றும் “மை ஈவண்ட்ஸ் - மலேசியா” உடன் இணைந்து...

Close