ஓடும் ரயில்… சாப்பாட்டு சப்ளையர் தனுஷ்?
கதை கையளவு என்றால், அந்த கதையை சுமக்கிற பேக்ரவுண்ட் தோள் அளவு என்ற விகிதாச்சாரத்தில் படமெடுப்பவர் பிரபுசாலமன். மைனாவுக்கு முந்தைய பிரபுசாலமனை இப்போது கூட யாரும் சிலாகிப்பதில்லை. ஆனால் மைனாவிலிருந்து அவரது வேகம் ரயில் வேகம்… புயல் வேகம்…. கதைக்களம் என்கிற ஸ்டைலையும் பின்பற்ற ஆரம்பித்ததும் அவர் மைனாவிலிருந்துதான். அந்த அழகான குரங்கணி லொக்கேஷனும் அவரோடு சேர்ந்து கதை சொன்னதை யாரும் மறந்துவிட முடியாது.
அதற்கப்புறம் கயல்! ரெண்டே ரெண்டு ஷாட்டுக்காகவெல்லாம் நார்த் இந்தியாவை சுற்றி வந்தார் பிரபு. லொக்கேஷனுக்கு ஆசைப்பட்டு காபிக்கு மூலமாக இருக்கிற டிகாஷனை விட்டுட்டீங்களே பிரதர் என்கிற அளவுக்கு கதை சுமார். லொக்கேஷன் பளீர் என்றாகியிருந்தது கயல்.
விமர்சகர்களின் லொட லொட வாய்க்கு வேலை கொடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பிரபுசாலமன் இப்போது சகல திருத்தங்களோடு எடுத்துவரும் படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது. பின்னி மில்லில் பெரிய ரயில்வே ஸ்டேஷன் செட் போட்டிருக்கிறார்கள். சரி… கதை என்ன?
டெல்லியிலிருந்து கன்னியாக்குமரி வரும் ரயிலில் நடக்கும் காதல்தான் கதை. ரயிலிலேயே இயங்கும் கேன்ட்டீனில் வேலை பார்க்கும் ஊழியர்தான் தனுஷ். இவருக்கும் அதே ரயிலில் பயணம் செய்யும் ஹீரோயினுக்கும் நடுவே காதல் வருகிறது. ரயில் கடைசி ஸ்டேஷனில் வந்து நிற்பதற்குள் காதலர்கள் எடுக்கும் முடிவு என்ன? க்ளைமாக்ஸ்!
பிரபுசாலமனுக்கும் சரி, தனுஷிற்கும் சரி… மிக மிக பொருத்தமான கதை. எவரை எவர் வெல்லுவாரோ?