பிரகாஷ்ராஜ் ஒரு கிறுக்கன்! டயலாக் ரைட்டர் பேச்சால் பரபரப்பு!
செக்கா இருந்தாலும் அதேதான். சிவலிங்கமா இருந்தாலும் அதேதான் போலிருக்கிறது. ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு நேரத்தை பின்பற்றுகிற விஷயத்தில் ‘யாராயிருந்தாலும் ஒண்ணுதான்’ பாலிசியை கடைபிடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சம்பந்தப்பட்ட யூனிட்டையும் டைரக்டரையும் கதறடிக்காமல் விட மாட்டார். அந்த இனிய வழக்கத்தை அவர் தூங்காவனம் படத்திலும் கடைபிடித்தார் என்பதை அப்படத்தின் டயலாக் ரைட்டர் வாயாலேயே கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. மேடையில் பிரகாஷ்ராஜையும் வைத்துக் கொண்டு டயலாக் ரைட்டர் சுகா பேசியதுதான் பேரதிர்ச்சி.
“நாங்களெல்லாம் பாலுமகேந்திராவின் பிள்ளைகள். எங்களின் மூத்த அண்ணாச்சி கமல்தான். நான் அவரை கமல்சார் என்று சொன்னாலும், கமல் அண்ணாச்சி என்கிற இடத்தில்தான் அவரை வைத்திருக்கிறேன்” என்று கமலை பாராட்ட ஆரம்பித்தவர், அதற்கப்புறம் பிரகாஷ்ராஜ் பற்றி பேச விழைந்தார். “நான் பிரகாஷ்ராஜை கிறுக்கன்னுதான் சொல்லுவேன். அவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்காரு எங்களை. பல நாட்கள் காலையில் வர வேண்டியவர், மாலையில்தான் வருவார். ஆனால் அவ்வளவு நேர டென்ஷனையும் நொடியில் போக்கிவிடும் அவர் நடிப்பு” என்று கூற, லேசாக சிரித்துக் கொண்டார் பிரகாஷ்ராஜ்.
‘கமல் சாரோட நடிக்கறது பெரிய வரம். எனக்கு இரண்டு முறை கிடைச்சுருக்கு’ என்று மெய்யுருகிய த்ரிஷாவுக்கு தூங்காவனம் ஐம்பதாவது படமாம். இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூகி சேது பேச்சில் அப்படியொரு சுவாரஸ்யம். விஜய் டி.வியில் என்னோட ஷோவுல கலந்துகிட்டா த்ரிஷா. சினிமாவுல நடிக்க வரவே மாட்டேன்னு சொல்லிட்டு போனா. ஆனால் ஐம்பதாவது நாளே அந்த சத்தியத்தை மீறிட்டா. நடிக்க வந்து இத்தனை வருஷமாச்சு. அப்ப பார்த்த மாதிரி அப்படியே இருக்கா… என்று உரிமையோடு பேச, த்ரிஷா முகத்தில் பவர்புல் லைட்ஸ் ஆன்!