‘கிளம்புடா காமப் பிசாசே ’ என்னடா இது தமிழ்சினிமாவுக்கு வந்த சோதனை?

‘காதலுக்கு கண்ணில்லை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெய் ஆகாஷ். இந்த தலைப்பை ஆணித்தரமாக நிருபிப்பது போலவே பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த வாரம் வெளியாகி ‘கத்தி’ படத்தின் வசூலை காவு வாங்கியிருக்க வேண்டிய ‘காதலுக்கு கண்ணில்லை’ எதிர்பாராத அதிபயங்கர விபரீத செயலின் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படம் வராத கவலையில் ஜெய் ஆகாஷின் ரசிகர்கள் பலரும் ஆங்காங்கே மண் சோறு சாப்பிட்டும், அங்க பிரதக்ஷணம் செய்தும் வழிபட்டு வருவதாக நாடெங்கிலும் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

ஏன் இந்த படம் நிறுத்தப்பட்டது? இது குறித்த தகவல்களை கேட்டால் அப்படியே ஆடிப் போய்விடுவீர்கள் ஆடி! இதோ- பக்கத்திலிருக்கும் இந்த அம்மையார்தான் படத்தின் தயாரிப்பாளர் இந்து. இதில் மிக முக்கியமான வேடத்திலும் நடித்திருக்கிறார் இவர். தனது நடிப்பை மட்டும் தமிழகம் ரசித்தால் போதாது என்று தனது மகளையும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறாராம் இந்து. இப்படி ஒரு குடும்பத்திற்கு இருவராக வந்து கலைசேவையாற்ற துடித்துக் கொண்டிருக்கும் போது, கேவலம் ஒரு மீடியேட்டர் மூலம் வந்ததே சோதனை. யெஸ்… படத்தின் ஹீரோயினாக நடித்திருக்கும் மகளை விட்டுவிட்டு பாவம்… இந்த அம்மாவுக்கு காதல் வலை வீசியிருக்கிறார் சிவா என்ற அந்த மீடியேட்டர்.

‘இதென்னடா கற்புக்கு வந்த சோதனை?’ என்று முதலில் மிரண்ட இந்து, அந்த மீடியேட்டரை அழைத்து நல்ல ஆப்டிகல் கடையாக பார்த்து அனுப்பி வைத்தாராம். அவரோ, கண்ணாடி வாங்குகிற காசுக்கும் இந்துவையே நாடியதால், ‘உன் ஆசைக்கு இணங்குகிற அபலைப்பெண் நானல்ல. கிளம்புடா காமப் பிசாசே’ என்று விரட்டியடித்தாராம். அப்படியும் புத்தி வராத அந்த காமுகன் தொடர்ந்து இந்துவை டார்ச்சர் செய்ய, காலில் இருக்கிற ஹை ஹீல்ஸ் உதவியுடன் அந்த மீடியேட்டரை எச்சரித்து அனுப்பிவிட்டார் இந்து.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அந்த காமுகனும் தமிழகம் முழுவதும் ‘காதலுக்கு கண்ணில்லை’ வெளியாகவிருந்த தியேட்டர்களுக்கு போன் போட்டு, படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். ‘தயாரிப்பாளர் முக்கியமா, மீடியேட்டர் முக்கியமா? அல்லது இந்த படம் வராமல் போவதுதான் அதையெல்லாம்விட முக்கியமா என்று மண்டையை குழப்பிய தியேட்டர் வட்டாரம், கடைசியாக ‘மிஸ்டர் காதலுக்கு கண்ணில்லை, உங்களுக்கு தியேட்டர் இல்லை’ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

காமுகனின் இந்த செயலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார் தயாரிப்பாளர் இந்து. உடனடியாக தமிழ்சினிமாவின் முக்கிய சங்கங்களுக்கு இதை புகாராக தட்டிவிட்டிருக்கிறார். மேற்படி காமுகர் சிவா, தற்போது தலைமறைவாகிவிட்டாராம்.

தம்பி சிவா… திரும்ப வரும்போது கண்ணாடியோடதான் வரணும். புரிஞ்சுதா!

Read previous post:
ஒரே ஒரு ஐ? பல ஐ களில் கண்ணீர்!

உலகத்தையே கவனிக்க வைக்கிறது ஐ. ஆனால் ‘முதல்ல என்னை கவனிங்கய்யா...’ என்று கதறுகிறது ஐ யில் பணியாற்றிய பெரும் கூட்டம் ஒன்று. சுமார் 150 கோடி ரூபாய்...

Close