கார்த்திக் சுப்புராஜுக்கு ரெட்? ஆரம்பித்தது ஆக் ஷன்
தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாக்கள் எங்கிலும் கூட உயர்ந்த ஸ்தானம் தயாரிப்பாளருக்குதான். எப்போதெல்லாம் தங்களுக்கு சேறு பூசப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவற்றை விட்டுக் கொடுப்பதேயில்லை அவர்கள். ஒருமுறை நடிகர் மாதவன் தன் படத்தின் தயாரிப்பாளர் பற்றி பேட்டி ஒன்றில் கேவலமாக விமர்சிக்க, அவரை நேரடியாக தயாரிப்பாளர் சங்கத்திற்கே வரவழைத்துவிட்டார் சங்கத்தின் அப்போதைய செயலாளர் சிவசக்தி பாண்டியன். பிற்பாடு மாதவன் பகிரங்க மன்னிப்பு கேட்ட பின்தான் பிரச்சனை முடிவுக்கு வந்தது.
வருஷங்கள் திரும்புகிறது. இந்த முறை சிக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இறைவி படத்தில் அவர் சித்தரித்திருக்கும் சினிமா தயாரிப்பாளரை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ, அவ்வளவு கேவலமாக பேசியதை அடுத்து இன்று பூதம் கிளம்பிவிட்டது. உடனடியாக சங்கத்திற்கு படம் போட்டுக்காட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டதாம். இன்று மாலை 6 மணிக்கு தேவி ஸ்ரீதேவி பிரிவியூ திரையரங்கத்தில் ஒரு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படத்தை பார்த்துவிட்டு, தயாரிப்பாளர்களின் கருத்தை அறிந்து மேல் நடவடிக்கை இருக்கும் என்று கூறுகிறார்கள். சில தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்புராஜுக்கு ரெட் போட வேண்டும் என்றும் கூறி வருகிறார்களாம்.
இதற்கிடையில் படத்திற்கு 7 கோடி பட்ஜெட் கொடுத்துவிட்டு அதை 13 கோடியாக்கிவிட்டாராம் கார்த்திக் சுப்புராஜ். அதற்காகவும் தனி கச்சேரியை கூட்டுவார்கள் போலிருக்கிறது!