ஐயா… அந்தாள நம்பாதீங்க! காலி பண்ணிருவான்… பணமுதலையை காப்பாற்றிய சிறு முதலை!
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தமிழில் கோடிகளை கொட்டி படமெடுக்க வந்தது. அது அண்டை நாட்டு அதிபர் பணம் என்றெல்லாம் கூட கிலி கிளப்பினார்கள் இங்கே. போராட்டம்… ஆர்ப்பாட்டம் என்று தொடர்ந்த அத்தனை எதிர்ப்பும் கடுகு பொறிந்து கார சட்டிக்குள் விழுந்த மாதிரி அமைதியாகிவிட்டது. மீண்டும் அதே வேகத்தோடு படமெடுக்க வந்த அந்நிறுவனம், புத்தர் பெயருள்ள ஒரு இயக்குனரை நம்பி வரிசையாக ஆறேழு படங்களை முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க முன்வந்ததாம். எல்லா படங்களுக்கும் இவர்தான் பொறுப்பு.
தயாரிப்பு நிறுவன பொறுப்பாளரும், இயக்குனரும் பலமுறை சந்தித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பில்டிங் கட்டினார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இடித்துத்தள்ள ஒருவர் கடப்பாரையோடு வருவார் என்பதே தெரியாமல்!
இதே புத்தரை வைத்து படம் எடுத்த அந்த தயாரிப்பாளர்தான் அந்த கடப்பாரை பார்ட்டி. அந்தப் படத்தை எடுக்கும் போது கடைசிவரைக்கும் அந்த கதை என்ன என்றும் தெரியாமல், தலைப்பு என்னவென்றும் புரியாமல் தவித்த தவிப்பெல்லாம் அவர் ஞாபகத்திற்கு வர, ‘இந்த மாதிரி ஆளுங்களை எங்க போனாலும் விடக் கூடாது’ என்று கிளம்பிவிட்டார்.
நேரடியாக அந்த பண முதலையையே சந்தித்துவிட்டாராம். “நான் அந்தாளை வச்சு ஒரு படம் எடுத்து படாத பாடு பட்டுட்டேன். உங்க பணத்துக்கு கியாரண்டி வேணும்னா, இவரை நம்பாதீங்க” என்றாராம். இந்த முறை சொல்பேச்சு கேட்க ஆரம்பித்த நிறுவனம், புத்தருக்கு குட்பை சொல்லிவிட்டதாம்.
ரத்னம் கூட மங்கும். ஆனால் அடுத்தவர் வம்புக்கு போகாத தங்கமான தயாரிப்பாளராச்சே அவர்? அவரையே இப்படி உசுப்பிவிட்டுட்டாரேய்யா இந்தாளு? என்றுதான் இந்த விஷயத்தை மெல்லுகிறது கோலிவுட்.