அஜீத் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் புகழ் படமா?
சமீபகால விஜய் படங்களில் எல்லாம் லேசாக அரசியல் எட்டிப் பார்க்கும். ஆனால் அதற்கான அவஸ்தையை அந்தந்த படங்களின் ரிலீசின்போதே பார்த்துவிடுவார் அவர். திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி. விஜய்க்கு ஏழரையை கூட்டாமல் படத்தை ரிலீஸ் செய்யவிட்டதில்லை அவர்கள். இன்று நேற்றல்ல, எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் தொடங்கி, தேசிய கீதம் எடுத்த சேரன் வரைக்கும் இப்படியெல்லாம் தொல்லை வந்து சேர்ந்தது. ஆனால் அதையெல்லாம் கடந்துதான் அரசியல் நையாண்டி படங்கள் வந்திருக்கின்றன. இனிமேலும் வரும். தேர்தலுக்கு முன் திரைக்கு வரப்போகும் தனுஷின் கொடி கூட அனல் தெறிக்கும் அரசியல் படம்தான்.
அந்த வகையில் ஜெய் நடித்த ‘புகழ்’ அரசியல் கட்சிகளின் அடாவடி, சூது, ஆர்ப்பாட்டங்களை கிழித்துத் தொங்கப் போடுகிற பட லிஸ்ட்டில் இடம் பெறும் என்கிறார்கள். இளைஞர்களின் சக்தி எவ்வளவு பவர்புல்லானது என்பதுதான் இப்படம் சொல்ல வரும் கருத்து.
படத்தின் இயக்குனர் மணிகண்டன் என்ன சொல்கிறார்?
ஒரு இளைஞன் பற்றிய கற்பனை கதையே புகழ், அவன் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள விளையாட்டு மைதானமும் அவனது வாழ்க்கையும் மையப்படுத்தி கதை நகரும். அரசியல் ரீதியான அச்சுறுத்தல் இளைஞர்களின் மகிழ்ச்சியை எவ்வாறு கெடுக்கும் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறேன். இந்த கார சாரமான அரசியல் பின் புலம் கொண்ட படத்தை ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக எடுத்துள்ளேன் என்றார்.
நிஜத்தில் இந்த விளையாட்டு மைதான எபிசோட் அஜீத் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் என்றால் அது கற்பனையில்லை. அஜீத்தின் அலுவலகம் முன்பு இயங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு சில கி.மீ தள்ளி ஒரு விளையாட்டு மைதானம் இருந்தது. அந்த மைதானத்தின் அருகில்தான் பிரபல அமைச்சர் ஒருவரின் வீடும் இருந்தது. இந்த மைதானத்திற்கு தினந்தோறும் சென்று பேட்மிட்டன் விளையாடுவது திருமதி ஷாலியின் விருப்பம். சமயங்களில் அஜீத்தும் அங்கு மனைவியுடன் விளையாடி வந்தார். இந்த ஜோடியை காணவே அங்கு மாலை நேரத்தில் கூட ஆரம்பித்தார்கள் மக்கள்.
இது பொறுக்காத அமைச்சர், ஒரு நாள் அந்த விளையாட்டு மைதானத்தையே பூட்டி சீல் வைத்துவிட்டார்.
ஒருவேளை இதைதான் மணிகண்டன் தன் கதையின் பின்புலமாக வைத்திருக்கிறாரோ என்னவோ? ஏனென்றால் ஜெய்யும் அஜீத்தை தினந்தோறும் சந்தித்து உரையாடி வரும் இளம் நடிகர்களில் ஒருவர்தானே?