தாத்தாவுக்கு எம்.ஜி.ஆர் பேரனுக்கு விஜய்! தொட்டு தொடரும் சினிமா
தாத்தாவின் பெயரை சொன்னால் போதும், பேரனின் பின்புலத்தை விளக்கத் தேவையில்லை. அந்த தாத்தா… புலவர் புலமைப்பித்தன்! அரசவைப் புலவராகவும், மேல்சபை துணைத்தலைவராகவும், எல்லாவற்றுக்கும் மேல், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இதயத்திலும் குடியிருந்தவர். போதும்… இப்போது பேரனுக்கு வருவோம். திலீபன் புகழேந்தி! லண்டனில் திரைப்பட தயாரிப்பு பயிற்சி படிப்பை முடித்தவர்.
சினிமா குடும்பத்திலிருந்து வந்தவருக்கு சினிமா மீது காதலில்லாமல் இருக்குமா? தானே விதையாக விழுந்து மரமாக கிளை விரிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் ‘பள்ளிக்கூடம் போகாமலே’ படத்தில் திலீபன்தான் வில்லன். இந்த படம் வெளிவருவதற்குள்ளாகவே ‘எவன்’ என்கிற இன்னொரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து முடித்துவிட்டார். ‘எவன்’ அடுத்த மாத வெளியீடு.
“ஆரம்பத்தில் நான் பைக் ரேசராகதான் என் கேரியரை துவங்கினேன். வெறும் பின் வீலில் மட்டுமே பத்து கிலோ மீட்டர் தூரம் சென்று போட்டியில் வென்றிருக்கிறேன். மெடல்களை குவித்திருக்கிறேன். ஆனால் அந்த முரட்டு விளையாட்டில் தொடர்ந்து நீடிக்க என் தாத்தாவும் பாட்டியும் விடவில்லை. அவர்கள் கேட்டுக் கொண்டதால் அதிலிருந்து விலகி அதற்கப்புறம் சினிமாவுக்கு வந்தேன். நடிகர் ஜெயராம் அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு முறையாக சினிமாவுக்கு வந்துவிட்டேன்” என்றார் திலீபன்.
சினிமாவுக்குள் வந்தாலும், கொள்கை கோட்பாடு என்று புரட்சித்தலைவர் வழியை இந்த பேரனும் மறக்கவில்லை. “நான் சிகரெட் பிடிக்கக் கூடாது. பிடிப்பது போல நடிக்கவும் கூடாதுங்கிற கொள்கையில் இருக்கிறவன். எவன் படத்தில் நான் சிகரெட் குடிப்பதை போல காட்சி இருந்தது. டைரக்டரிடம் பிடிவாதமாக மறுத்துவிட்டேன். இதில் அவருக்கும் வருத்தம். இருந்தாலும் என்ன செய்வது?” என்கிறார்.
“விஜய் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியவர் எங்க தாத்தா. எனக்கும் விஜய்யை ரொம்ப பிடிக்கும். அவரை நேரில் சந்தித்து ஆசி வாங்கணும். இன்னும் இரண்டொரு தினங்களில் அது நடந்துவிடும்” என்கிற திலீபன் புகழேந்திக்கு, தன் பெயருக்கான வரலாறு தெரிந்திருக்கிறது. அந்த திலீபனின் மன உறுதியும் இருக்கிறது. வெல்க… என்று நாம் வாழ்த்துவதற்குள் வெல்கிற அளவுக்கு வேகமும் இருக்கிறது.
நாளைய தீர்ப்பு நன்றாகவே இருக்கும்!