புலி ஆடியோ வெளியீட்டு விழா! பேசியே அசத்திய விஜய்!

இப்போதெல்லாம் நன்றாக பேசவும் கற்றுக் கொண்டார் விஜய். (அரசியல் ஆசை மனசுக்குள்ள வந்தாச்சு, அப்புறம் இது கூட இல்லேன்னா எப்படி?) நேற்று மகாபலிபுரத்தில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இந்த விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து பல கி.மீட்டர்கள் தாண்டி பயணம் செய்த ரசிகர்களும் பிரஸ்சும் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்த்த பீலிஸ்சுடன் சென்னை திரும்பியது தனி கதை. இந்த விழாவுக்கு டி.ராஜேந்தரும் வந்திருந்தார். சமீபகாலமாக விஜய்-சிம்புவுக்கு இடையிலான கப் அண்டு சாசர் நட்பு பலரது காதுகளை உறுத்தி வந்த நேரத்தில், கண்களையும் உறுத்தட்டுமே என்று வந்திருப்பார் போலிருக்கிறது சிம்புவின் அப்பா டி.ஆர்.

விஜய்யை “தமிழன்டா… ” என்று வாயார புகழ்ந்த டி.ஆர், என் மகன் இன்னொரு ஹீரோவுக்கு ரசிகராக இருந்தாலும், வாலு படம் வெளிவர உதவி செய்தவர் விஜய் என்று கண்கலங்கினார். அதற்கப்புறம் தனக்கேயுரிய அடுக்கு மொழியில் அவர் உலுக்கித் தள்ள… இனிமேலும் பொறுத்தல் ஆகாது என்று எழுந்து வந்து கட்டிக் கொண்டார் விஜய். கலை நிகழ்ச்சியை மிஞ்சும் விதத்தில் இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த விழாவில் விஜய்யின் பேச்சை கேட்க குண்டூசி போட்டால் சப்தம் வரும் அமைதியுடன் காத்திருந்தது கூட்டம்.

அங்குதான் விஜய்யின் டங்க் பயிற்சி நன்றாக வேலை செய்தது. பொதுவாழ்க்கையில் பரிட்சை எழுத நிறைய பேர் இருப்பாங்க. மார்க் போட சில பேர்தான் இருப்பாங்க. சினிமாவில் பரிட்சை எழுத சில பேர்தான் இருப்பாங்க. மார்க் போடதான் நிறைய பேர் இருப்பாங்க. நாங்க பரிட்சை எழுதியிருக்கோம். நீங்க மார்க் போடுங்க. நிறைய தோல்விகளால் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும், நிறைய அவமானங்கள் இருக்கிறது. அடுத்த நிமிஷம் என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை. எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வைத்துதான் பழக்கம். எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். ஆனால், பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது என்றார் சரவெடி போல!

வேறெந்த நிகழ்ச்சியிலும் விஜய் இவ்வளவு பேசியிருப்பாரா? டவுட்தான். ஆனால் இந்த விழா அவரை நிறைய பேச வைத்தது. படமும் இதே அளவுக்கு பேச வைத்தால் சந்தோஷம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புலி படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஸ்டில்கள்

Close