புலி ரிலீஸ் பிரச்சனை! விடிய விடிய லேபிலேயே கிடந்த டி.ராஜேந்தர்!
நீ வெறும் புலி இல்ல… என்று டிஆர் பேச ஆரம்பித்து அடுக்கிய புலி லிஸ்ட்தான் உலகம் முழுக்க இருக்கிற தமிழர்களை கவனிக்கவும், கலாய்க்கவும் வைத்த அடுக்குமொழி வாசகமாக இருக்கும். வாலு பட விஷயத்தில் விஜய்யே முன் வந்து உதவியதை யாரும் மறந்திருக்க முடியாது. டி.ஆர் மட்டும் மறந்துவிடுவாரா என்ன?
புலி படத்திற்கு சிக்கல் என்றதுமே பதறிவிட்டாராம். நேற்று மாலை தன் பரிவாரங்களுடன் புலி தயாரான லேபுக்கு வந்துவிட்டார். விடிய விடிய அங்கேயே இருந்து பிரச்சனைகளை பேசி பேசி சரி செய்வதற்கு தன்னால் ஆன உதவிகளை மேற்கொண்டாராம். இன்று காலை வரை பழியாகவே கிடந்த டிஆர் இந்த நிமிஷம் வரைக்கும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்.
“எல்லா தியேட்டர்களிலும் படம் ரிலீஸ்னு காதுல விழட்டும். அப்புறம் கிளம்புறேன்யா” என்றாராம். நடுவில் எத்தனை முறை உணர்ச்சிவசப்பட்டு அழுதார். எத்தனை முறை உணர்ச்சி வசப்பட்டு சேர்களை தூக்கி அடித்தார் போன்ற விபரங்கள் சரிவர தெரியவில்லை என்றாலும், அவர் உணர்ச்சி பிழம்பாக அங்கு நின்று கொண்டிருந்ததாக தெரிவிக்கிறது புலி ரிலீஸ் டென்ஷன் ஏரியா.
பொங்கி எழுந்து விஜய் பின்னாலேயே நின்று கொண்டிருக்க வேண்டிய சிம்பு மட்டும் இந்த நிமிஷம் வரைக்கும் வாயையே திறக்கவில்லை. ஒரு வாரம் கழித்து “என்ன… புலி படத்துக்கு பிரச்சனையா?” என்று கேட்காமலிருக்க பிரார்த்திப்போமாக!
பின்குறிப்பு- விஷால் லேபுக்கு வந்தார் என்று கிளப்பிவிடப்பட்ட தகவல்கள் பற்றி விசாரித்தால், அப்படி ஒரு சம்பவமும் இல்லை என்று மறுக்கிறது விஜய் தரப்பு.