புலி – விமர்சனம்

‘அம்புலி மாமா’வோட அத்தை புள்ளையாகவே ஆகிவிட்ட சிம்பு(லி)தேவனின் ‘யூஷுவல்’ கதைக் களம்தான் இது! இந்த சிம்புலியை ஸ்பெஷல் புலியாக்கிவிடுகிற பேரந்தஸ்துள்ள விஜய்! அரண்மனையின் சிம்மாசனத்தில் அத்தனையும் ரத்னங்கள் என்பதை போல, ஸ்ருதி… ஹன்சிகா… முன்னாள் மயிலு ஸ்ரீதேவி என்று ஜொலி ஜொலிப்பு ஆக்ட்ரஸ்! நட்டி, தேவிஸ்ரீபிரசாத், முத்துராஜ் என்று எக்ஸ்ட்ரா வித்வான்களும் சபையை அடைத்துக் கொள்ள, எல்லாரையும் வைத்துக் கொண்டு இனிக்க இனிக்க கூட்டாஞ்சோறு ஆக்க வேண்டிய சிம்பு(லி) என்ன செய்திருக்கிறார்? செவுத்துல ஓடுற பல்லிக்கு செல்ஃபி எடுக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்திருப்பாரோ? இல்லேன்னா… ஏன்யா இப்படி?

வேதாள உலகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் 59 கிராமங்களில் அதுவும் ஒன்று. அந்தரத்தில் பறப்பதும், ஆட்களை கொன்றுவிட்டு ஆஹா ஓஹோவென சிரிப்பதுமாக பொழுது போக்கும் வேதாளர்கள், விஜய் குடியிருக்கும் அந்த கிராமத்திற்குள் என்ட்ரியாகி கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அசந்த நேரம் பார்த்து அவரது லவ்ஸ் ஸ்ருதியையும் தூக்கிக் கொண்டு வேதாள உலகத்திற்கு சென்றுவிடுகிறார்கள். லவ்ஸ்சை மீட்கும் நோக்கத்தில் வேதாள உலகம் நோக்கி கிளம்பும் விஜய், வழியில் தென்படும் தவளை, குருவியிடமெல்லாம் வழிகேட்டு குறிப்பிட்ட இடத்தை சேர, அங்கு நடக்கும் பைட்டும், பரபரப்பும்தான் க்ளைமாக்ஸ்! ஸ்ருதியை காப்பாற்றினாரா, அரண்மனையிலிருக்கும் இளவரசி ஹன்சிகா விஜய்யை ரூட் விட்டாரே… அந்த காதல் என்னாச்சு? என்பதெல்லாம் அடிஷனல் ஆரஞ்சு மிட்டாய்ஸ்…

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பின் நுனியில் கொஞ்சம் நெருப்பையும் பற்ற வைத்தால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறார் விஜய். ஆக்ஷனும், ஃபைட்டுமாக பட்டைய கிளப்பும் அவருக்கு சிம்புதேவன் பின்னியிருக்கும் சீன்களில்தான் சீக்கு! அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோ, ஒரு சாதாரண அடியாள் காலில் விழுந்து கிடப்பது போல வரும் அந்த என்ட்ரி, சத்தியமாக எங்களுக்கெல்லாம் டிசென்ட்ரியை கிளப்பிவிட்டது சிம்பு! நல்லவேளை… ‘புலி பதுங்கறது பாயறதுக்குதான்’ என்றொரு வசனத்தை போட்டு பேலன்ஸ் பண்ணியிருக்கிறார் விஜய்.

படம் முழுக்க விஜய் பேசும் வசனங்கள் கதைக்கும் காட்சிக்கும் பொருத்தமாக இருந்தாலும், அதையும் மீறி வெளியே இருக்கும் அரசியலில் முடிச்சு போடுகிறது மனசு. சற்றே சந்தேகமாக, அதே நேரத்தில் முத்திரை வைத்த மாதிரி பேசும் விஜய், ஆக்ஷன், டான்ஸ் என்று இறங்கிவிட்டால் விட்டு வெளுக்கிறார். பாடல் காட்சிகள் வரும்போதேல்லாம் மனசு துள்ளுவதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

ஸ்ருதியை மேய்ந்து முடித்துவிட்டு திரும்பினால், ஹன்சிகா! படம் முழுக்க இவ்விரண்டு தோசைகளையும் திருப்பி திருப்பி போடுகிறார் விஜய். கதைக்குள் கருகல் வாசனைக்கு இடமேயில்லை.!

கொடி செஞ்ச குமரியாக இருக்கிறார் ஸ்ருதி. கொடியிடை, கொடிதேகம், கொடி மூக்கு, என்று ரசிகர்களை கொடிபிடிக்க வைக்கிறார். ‘மந்தகாசமான மைதானத்தில் மறைக்க என்ன இருக்கு?’ என்கிற அவரது பாலிசிக்கு எவ்வளவு பிரிமியம் கட்டினாலும் தகும்! கோதுமை மாவை குரல்ல தடவி வச்ச ஆண்டவனுக்கு நாலு வாரம் மாவிளக்கு படைச்சாலும் பிரமிப்பு போகாது போலிருக்கே? செகன்ட் ஆஃபில் இவரை மயக்கம் போட வைத்துவிட்டு, ரெண்டு டூயட்டை ஹன்சிகாவுக்கு தாரை வார்க்கிறார் சிம்புதேவன்.

முக்கியமான ரோலில் வரும் மயிலு ஸ்ரீதேவி, குளோஸ் அப்புகளில் மட்டும் குந்தாங் குறையாக அலற வைக்கிறார். மேக்கப் முக்கியம்தான். அதுவே ஸ்கின்னுக்கு ‘மேல் கப்’ ஆகியிருப்பதுதான் ஹைய்யோ! இதற்கப்புறமாவது மும்பைக்கும் சென்னைக்கும் பாஸ்போர்ட், விசா சட்டதிட்டங்களை அமல் படுத்தும்படி கனம் கோர்ட்டார் அவர்களுக்கு விண்ணப்பம் வைக்கப்படுகிறது.

வீணடிக்கப்பட்டிருக்கிறார் காஸ்ட்லி வில்லன் சுதீப்.

தானும் வேதாள உலக ஆசாமிதான் என்பதை விஜய் உணர்கிற கட்டங்கள் சற்றே விறுவிறுப்பை கூட்டுகிறது. அதிலும், ஒரு நெருப்பு குழாய் வழியே விஜய் சேதாரமில்லாமல் வெளியேறுகிற காட்சி ஸ்பெஷல் திருப்பம்! ஒரு கிராமத்திலிருந்து வேதாள உலகம் நோக்கி, விஜய்யும் தம்பி ராமய்யாவும், சத்யனும் கிளம்பி போவதும், வழியில் நடக்கும் அற்புதங்களும் குழந்தைகள் கண்களை விரித்துக் கொண்டு ரசிக்கிற ஏரியா. வேதாள உலகத்தில் வரும் அந்த ஒற்றைக்கண்ணன், மாட மாளிகைகள் எல்லாம் குழந்தைகளின் உலகத்தில் கலர் போட்டோக்களாக வெகு காலத்திற்கு படிந்திருக்கும். வெல்டன் சிஜி டிபார்ட்மென்ட், அண்டு ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்.

நட்ராஜின் ஒளிப்பதிவு வழக்கம் போல பிரமிப்பு. இருந்தாலும், மேக்கப் மேன்களின் கை சுதந்திரத்தை தாராளமாக அனுமதித்த ஒரு காரணத்திற்காகவே கொடுக்கப்பட்ட ஸ்டார்களில் இருந்து ஒரு ஸ்டார் உருவப்படுகிறது.

தேவி ஸ்ரீ பிரசாந்த்தின் பாடல்களில் சில அதிரடி. சில அட்டகாச மெலடி! ஸ்பெஷலான பின்னணி இசையும் ஜோர்.

ஒரு கரும்புலியை வெறும் ‘கட் அவுட்’ புலியாக்கிட்டாரே கார்டூனிஸ்ட் சிம்புதேவன்?

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. Jayam Balaji says

    படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. பாகுபலியின் பிரமாண்டம், கதை அமைப்பு, காட்சி அமைப்பு, நடிகர், நடிகைகளின் ஒப்பற்ற நடிப்பு என அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு மாபெரும் வெற்றி படைப்பு. புலி அவற்றில் கால் துசி கூட வரவில்லை. இது படம் பார்த்த ஒவ்வொரு ரசிகனின் கருத்து.

  2. John Rufus says

    புலியின் கொட்டை எடுக்கப்பட்டு விட்டது. குப்புறப்படுத்து விட்டது இந்த வரி கட்டாமல் ஏமாற்றிய புலி !!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புலி ரிலீஸ் பிரச்சனை! விடிய விடிய லேபிலேயே கிடந்த டி.ராஜேந்தர்!

நீ வெறும் புலி இல்ல... என்று டிஆர் பேச ஆரம்பித்து அடுக்கிய புலி லிஸ்ட்தான் உலகம் முழுக்க இருக்கிற தமிழர்களை கவனிக்கவும், கலாய்க்கவும் வைத்த அடுக்குமொழி வாசகமாக...

Close