புலி படத்தின் அதிகாலை ஸ்பெஷல் காட்சிகள் ரத்து?
டாப் ஹீரோக்கள் யார், யார்? இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றால் அதிக சிரமம் தேவையில்லை. யார் படத்தை காண நள்ளிரவு பனிரெண்டு மணியிலிருந்தே க்யூவில் நிற்பதற்கு ரசிகன் தயாராகிறானோ? அவர்கள்தான் டாப் ஹீரோக்கள்! ரஜினி, அஜீத், விஜய் இந்த மூவரையும் தவிர வேறு யாருக்கும் அந்த பாக்கியத்தை கொடுப்பதில்லை ரசிகர்கள். கமலுக்கு மட்டும் சில படங்கள் அவ்வாறு அமையும். ஆனால் பல படங்களுக்கு, ‘அதான் பதினொரு மணி ஷோ ஓப்பன் ஆகுதே. பார்த்துக்கலாம்’ என்கிற அலட்சிய நிலைமைதான்!
கெட்டி மேளதாளம், குதிரை வண்டியில் ஊர்வலம், யானை மீது படப்பெட்டியை வைத்து கொண்டாட்டம் என்பதெல்லாம் படப்பெட்டி ஒழிந்துவிட்ட இந்த டிஜிட்டல் காலத்திலும் தொடர்வது விந்தைதான். விஜய்யின் புலி படத்திற்கு அதிகாலை நான்கு மணி காட்சிகள் சென்னையிலும், சுற்றியுள்ள தியேட்டர்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதற்கான முன்பதிவும் துவங்கி ஒரே மணி நேரத்தில் விற்று தீர்ந்தன. இந்த நேரத்தில்தான் இன்று அதிகாலை ஆரம்பித்த இன்கம்டாக்ஸ் ரெய்டு எல்லாவற்றுக்கும் ஒரு ‘கொலாப்ஸ் மார்னிங்’ சொல்லிவிட்டது. டிக்கெட் வாங்கியவர்கள் காலையில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும் என்று போர்டு வைத்துவிட்டார்கள்.
இரவு பத்து மணியை நெருங்குகிற இந்த நேரத்திலும் கூட, விஜய் வீட்டிலிருந்தோ, அலுவலகத்திலிருந்தோ, புலி படத்தின் தயாரிப்பாளர்களின் அலுவலகம், மற்றும் வீடுகளிலிருந்தோ வருமானவரி அதிகாரிகள் வெளியேறவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க, லேப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செலுத்த வேண்டிய பண பாக்கியெல்லாம் முன் கூட்டியே செலுத்தப்பட்டுவிட்டதாம். ஒரு பட்டனை தட்டி ஓ.கே என்று கூறினால் படம் திரையிட எவ்வித குறுக்கீடும் இல்லை. ஆனால் வெளியூரிலிருந்து வந்து சேர வேண்டிய விநியோகஸ்தர்களில் பலர், கையில் பணப் பெட்டியுடன் ஆங்காங்கே தேங்கி நின்றுவிட்டதுதான் சோகம்.
அவர்களுக்கு முறையாக பதில் சொல்லி, பணத்தை வரவு வைக்கிற வேலை இன்னும் துவங்கியபாடில்லையாம். அதுமட்டுமல்ல, பணத்தை பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டால், அந்த பணம் ‘அம்போதான்’ என்பதும் திரையுலகம் ஏற்கனவே பல முறை சொல்லிக் கொடுத்த வரலாறு. இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கிறது விஜய் வட்டாரம்.
நாளைய பொழுது நல்லபடியாக விடிய காத்திருக்கிறார்கள் விஜய்யின் லட்சோப லட்சம் ரசிகர்கள்!