புறம்போக்கு விமர்சனம்
‘யாருக்கோ தூக்கு, யாருக்கோ ஒப்பாரி’ என்பது போலவே தூக்கு தண்டனைகளை அணுகும் தமிழ்நாட்டு குடிமகன்களை நிறுத்தி, சட்டை காலரை பிடித்து உலுக்குகிறது படம்! சட்டம், கடமை, குற்றம், நீதி, பொதுவுடமை, நக்கல், நையாண்டி என்று எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி, கடந்த பல வருஷ தமிழ்சினிமா வரிசையில் இந்த ‘புறம்போக்கு’ தரும் தாக்கம், வேறெந்த மாநில அரசியல் சினிமாவுக்கும் சளைத்ததல்ல! பொழுதுபோக்கு சினிமாவுக்குள் பொதுவுடமை சிவப்பை காட்டுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அது ஜனநாதனிடம் நிறைய்ய்ய்ய இருக்கிறது.
ஒரு தூக்கு தண்டனை கைதி, அவனை தூக்கில் போடுகிற தொழிலாளி, இந்த தண்டனையை நிறைவேற்றுகிற போலீஸ் அதிகாரி. இந்த மூவருக்கும் இடையே நடக்கும் மனப் போராட்டம்தான் கதை.
கம்யூனிஸ்ட் தீவிரவாதியான ஆர்யாவை தூக்கில் போட உத்தரவிடுகிறது நீதிமன்றம். அனுபவமுள்ள ஒருவர்தான் அவரை தூக்கில் போட வேண்டும் என்று அந்த நீதிமன்றம் உத்தரவிட, அந்த உத்தரவை நிறைவேற்றுகிற பொறுப்பு போலீஸ் உயரதிகாரி ஷாம் வசம் வருகிறது. குற்றவாளியை தூக்கில் போடுகிற அனுபவசாலி யார்? பரம்பரை பரம்பரையாக அந்த வேலையை செய்கிற குடும்பத்தின் வாரிசு விஜய் சேதுபதிதான்.
முதல் தூக்கை போட்ட சில காலம் சித்த பிரமை பிடித்து அலைகிற அளவுக்கு கொலையை வெறுக்கிறவர் விஜய் சேதுபதி. அவரிடம் இரண்டாவதாக ஒருவரை மாட்டி தொங்க விடச் சொன்னால் என்னாகும்? பதறி சிதறி ஓடுகிறார் அவர். கடமை தவறாத காவல் அதிகாரி ஷாம், அவரை பிரெய்ன்வாஷ் செய்கிறார். அதற்குள், சிறையிலிருக்கும் ஆர்யாவை காப்பாற்ற வருகிறது அவரது கொள்கை கூட்டம். அவர்களும் விஜய் சேதுபதியை ரகசியமாக பிரெய்ன்வாஷ் செய்கிறார்கள்.
இதையடுத்து, சிறையிலிருக்கும் ஆர்யாவை காப்பாற்ற துடிக்கும் விஜய்சேதுபதி செய்யும் முயற்சிகள் என்ன? ஆர்யா தப்பித்தாரா? போலீஸ் அதிகாரியான ஷாமின் கடமை வென்றதா? கனத்த கேள்வியோடு படம் ஓடுகிறது. முடிகிற நேரத்தில், இந்த படத்தினால் எழும் ஆயிரம் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஒரமாக வைத்துவிட்டு மெல்ல எழுந்து சல்யூட் அடித்துவிட்டு நடையை கட்டுகிறான் ரசிகன். தமிழ்சினிமா ரொம்பதான் மாறிவிட்டது!
பேப்பரை தராசில் அளந்து வைத்துக் கொண்டு தனித்தனியாக எழுதியிருப்பார் போலிருக்கிறது. விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் மூவரையுமே எடை தராசில் ஏற்றி வைத்த மாதிரி ஈக்குவலான கேரக்டர். தந்திருக்கிறார் ஜனநாதன், தத்தமது ஏரியாவில் ‘நான்தாண்டா கிங்’ என்று நிரூபிப்பதற்காக போராடியிருக்கிறார்கள் அவர்கள். அட… சந்தேகமில்லை. பாராட்டுகளை கூட சரி சமமாக பிரித்துக் கொள்கிற அளவுக்கு பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் மூவரும்.
தன்னை வற்புறுத்தும் ஷாமின் தொல்லை பொறுக்க முடியாமல், தானே ஒரு தூக்கு கயிறோடு கிளம்பி செல்லும் விஜய் சேதுபதி, அங்கிருக்கும் சாமி சிலையை கண்டமேனிக்கு திட்டியபடியே, அதே கோவிலில் தூக்கில் தொங்க முயல்கிறாரே, அந்த காட்சியில் கலங்கடிக்கிறார். அதற்கப்புறம் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தில் செம ஜர்க் ஆகிறது தியேட்டர். ‘முள்ளும் மலரும்’ ரஜினிக்கு பிறகு, ‘ஐ டோண்ட் கேர்’ கேரக்டரில் நின்று சதமடிப்பது விஜய் சேதுபதிதான் என்று பாராட்டினால், படம் பார்த்த யாரும் நம்மை அடிக்க வர மாட்டார்கள்!
அட… இது ஷாம்தானா? என்னவொரு கம்பீரம்! மிடுக்கு, திமிரு, அதையும் தாண்டி அந்த கட் அண்ட் ரைட் கண்களுக்குள் லேசாக எட்டிப்பார்க்கும் ஈரம் என்று பின்னி எடுத்திருக்கிறார்! எப்படியும் ஆர்யா தப்பித்துவிடுவார் என்று ரசிகர்கள் காத்திருக்க, ஷாம் வைக்கும் அந்த ட்விஸ்ட்… பேரதிர்ச்சி. ‘இப்ப கூட கெட்டுப்போகல. ஒரு கருணை மனு போடுங்களேன்’ என்று இவர் கேட்க, ‘உங்ககிட்ட உயிர் பிச்சை கேட்டு வாழணுமா?’ என்று ஆர்யா சொல்ல, ஹையோ… இது நிஜ சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதைதான் என்றால், மனசு கிடுகிடுக்கிறதே…!
‘தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’ என்று மேடையில் முழங்கும் வெற்று அரசியல்வாதிகளின் வீண் பேச்சுகளை கேட்டே பழகிய காதுகளுக்கு, படத்தில் ஆர்யாவின் அசால்ட் நடிப்பும், வசனங்களும் அந்த முழக்கத்தின் பெருமையை அப்படியே மண்டையில் ஏற்றுகிறது.
கார்த்திகாவுக்கு பெரிய வேலையில்லை. இருந்தாலும், சிறைக்குள் சென்று விஜய் சேதுபதியை சந்திக்கிற காட்சியிலும், அந்த மந்திரம் சொல்லும் காட்சியிலும் கைத்தட்டல் வாங்கிக் கொள்கிறார்.
பின்பாதியில் ஆர்யா தப்பித்துச் செல்லும் அந்த காட்சி சற்று நீளமாக இருந்தாலும் பதற வைக்கிறது. சிறைக்குள்ளிருக்கும் ஆர்யாவுக்கும் சிறைக்கு வெளியிலிருக்கும் அவரது சகாக்களுக்கும் நடக்கிற சம்பாஷணைகளை அவ்வளவு சுவாரஸ்யமாகவும், திகைக்க வைக்கும் திருப்பங்களோடும் சொல்கிறார் ஜனநாதன். ஒரு சிறைச்சாலையை விட்டு நகராத கதை. ஆனால் எந்த இடத்திலும் அலுப்பு வர வேண்டுமே, ம்ஹும்! இடைவேளைக்கு முன்பாக வரும் அந்த டூயட் பாடலுக்கு மட்டும் கூசாமல் கத்தரி வைக்கலாம்.
ஜனநாதனின் கதைக்கும் வசனத்திற்கும் பங்கு பெற்ற நடிகர் நடிகைகள் மட்டுமல்ல, ஒனிப்பதிவாளர் ஏகாம்பரமும், இசையமைப்பாளர் வர்ஷனும் கூட தங்கள் உழைப்பை அபரிமிதமாக வழங்கியிருக்கிறார்கள். ஒரு ஜெயில் தருகிற அச்சத்தை தனது லைட்டிங்கில் சொல்லி விடுகிறார் ஏகாம்பரம். படம் முழுக்க எந்த காட்சியிலும் நம்மை உறுத்தாத பின்னணி இசையில் மிரட்டுகிறார் பின்னணி இசை மட்டும் அமைத்திருக்கும் ஸ்ரீகாந்த் தேவா. குறிப்பாக தூக்கு மேடைக்கு கீழே ஆர்யா தப்பிப்பதற்காக விஜய் சேதுபதி சில ஏற்பாடுகளை செய்யும் இடத்தில் பின்னணி இசை உலுக்குகிறது.
ராஜஸ்தான் மக்களுக்கு உதவுகிற ஆர்யா, நம்ம ஊரு பக்கம் அந்த அதிரடியை செய்வதாக சம்பவங்கள் அமைக்கப்பட்டிருந்தால், ஆர்யாவின் தூக்கு இன்னும் கூட நம்மை உலுக்கியிருக்கக்கூடும். நீதிபதி தூக்கு தண்டனை மட்டும்தான் தருவாரே ஒழிய, இன்னார்தான் குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என்று சொல்வாரா? அவர் சொல்கிற மாதிரி அனுபவசாலிதான் தூக்கிலிட வேண்டும் என்றாலும், அந்த எமலிங்கம் அனுபவசாலியாகவும் இல்லையே? இப்படி நிறைய கேள்விகள். பட்….
புறம்போக்கு இன்றைய காலகட்டத்தில் எல்லா மட்டத்திலும் வீசப்பட வேண்டிய சவுக்குதான்!
-ஆர்.எஸ்.அந்தணன்