புதியதோர் உலகம் செய்வோம்- விமர்சனம்

அஞ்சான் வந்த கையோடு வந்திருக்கிறது இந்த லஞ்சான்!

‘லஞ்சத்தை முதலில் வீட்டிலேயிருந்தே ஒழி…, நாடு தானாக திருந்தும்’ என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பேச்சிலிருந்து இந்த ஒரு போதனையை மட்டும் உருவி கதையாக வடித்து படமாக கொடுத்திருக்கிறார்கள். அதுதான் ‘புதியதோர் உலகம் செய்வோம்’. நிஜத்தில் பார்த்தால் புதியதோர் திரைப்படம் செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த காலத்தில் இப்படியொரு படமா?

நாலைந்து சிறுவர் சிறுமிகள்… அவர்களில் ஒரு குழந்தையின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு வைத்திருந்த பணத்தை லஞ்சமாக கொடுத்துவிட்டு சிகிச்சை அளிக்கக் கூட முடியாமல் தவிக்கிறது குடும்பம். இந்த தகவலை அந்த குழந்தை கவலையோடு பகிர்ந்து கொள்ளும் போதுதான் தெரிகிறது. அந்த பணத்தை லஞ்சமாக வாங்கியதே இன்னொரு சிறுவனின் அப்பாதான் என்று. இப்படி ஒன்றாக திரியும் நான்கைந்து குழந்தைகளுக்கு மத்தியில் பெற்றோர்களாலேயே பிரச்சனை வர, அதை முறியடித்து லஞ்சம் வாங்கும் பெற்றோரை குழந்தைகள் எல்லாம் சேர்ந்து திருத்துவதுதான் படம்.

ஒரு சின்ன ‘நாட்’டை வைத்துக் கொண்டு நாட்டை திருத்த போறாங்களாக்கும் என்று மேலோட்டமாக முகவாய் கட்டையை இடித்துவிட்டு போனாலும், அந்த சின்ன குழந்தைகள் தங்கள் அப்பா அம்மாவுக்கு எதிராக பேசும் வசனங்களை அவரவர் வீட்டில் பேச ஆரம்பித்தால் என்னாவது என்கிற அச்சமே வந்து தொலைக்கிறது சில காட்சிகளில். அதுவும் இந்த பிச்சை காசுலதான் நான் படிக்கணுமா? சோறு திங்கணுமா? டிரஸ் போடணுமா? என்று ஒரு வாண்டு கேட்கிற போது, அரசாங்க மற்றும் தனியார் கட்டிங் பார்ட்டிகள் கதி கலங்கிப் போவார்கள்.

படத்தில் நடித்திருக்கும் எல்லா சிறுவர் சிறுமியரும் விஜய் தொலைக்காட்சியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இளம் பாடகர்கள். அவர்களுக்கு நடிப்பும் ஜுஜுபி என்று பல காட்சிகளில் அநாயசமாக நிருபிக்கிறார்கள். படத்தை சுவாரஸ்யப்படுத்த வேண்டுமே? திடீரென உள்ளே வருகிறார் இமான் அண்ணாச்சி. நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா என்ன வேணா செய்யலாம் என்ற கொள்கையோடு அவர் லஞ்ச பணத்தை திருடி மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் காட்சிகள், குழந்தைகளை சிரிக்க வைக்கும். கந்தசாமி படத்தில் விக்ரம் செய்த வேலையைதான் அண்ணாச்சியும் செய்கிறார். இது அதை விட சுவாரஸ்யமாக இருக்கிறதே என்று கூட சில நேரங்களில் நினைக்க வைக்கிறது சில காட்சிகள்.

சிறுவன் ஆஜித்திற்கும் அவனது பாட்டிக்குமான அன்பை அவ்வளவு டச்சிங்காக காண்பித்திருக்கிறார் இயக்குனர் நித்தியானந்தன். அதிலும் கண் போல பாதுகாக்க வேண்டிய முதியோர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி முதியோர் இல்லத்தில் தள்ளுகிறார்கள் என்பதை நினைத்தால் பகீரென்கிறது.

எல்லாம் சரி… அந்த குண்டு பையன் அடிக்கடி கேஸ் லீக் செய்வதை போல காண்பிக்க வேண்டுமா? காமெடி என்றால் அதுதானா? குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படத்தில் இதுபோன்ற அருவறுப்பூட்டும் காட்சிகளை எப்படி சகித்துக் கொள்வது?

இசையமைப்பாளர் பிரவீண் இசையில் அடிக்கடி பாடல்கள் வந்தாலும் கேட்பதற்கு இனிமை. அவரே நடித்திருக்கிறார். இவருக்கு ஒரு ஜோடியும் கூட உண்டு.

திரைக்கதை வசனம் பாடல்களை நாகராஜன் ராஜா எழுதியிருக்கிறார். சிறுவர்களுக்கான படத்தை பெரியவர்களும் பார்க்கும் விதத்தில் உருவாக்க ட்ரை பண்ணியிருக்கிறார். அதற்காகவே பாராட்டலாம். இந்த படமும் கருத்தும் அப்துல்கலாம் நிழலில் ஒதுங்கியிருப்பதால், ஜனாதிபதி மாளிகை ஏதாவது சிறப்புகளை இவருக்கு வழங்கக் கூடும்.

அந்த குண்டு பையனின் கேஸ் கனெக்ஷனை கட் பண்ணிட்டு ஒவ்வொரு ஸ்கூலிலும் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பித்தால் புண்ணியமாக இருக்கும். மற்றபடி இந்த படக்குழுவினரின் புதிய உலக ஆசைக்கு கதவுகள் திறக்க வாழ்த்தலாம்…

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அவங்க ஐஸ் பக்கெட்னா நாங்க ரைஸ் பக்கெட்! நடிகைகளை கேலி செய்த ஆடியோ விழா

ஊரெல்லாம் ஐஸ் பக்கெட் பற்றிய பேச்சுதான். குளிர குளிர ஐஸ் தண்ணீரை பக்கெட்டில் பிடித்து தலையில் கொட்டுவதுதான் இந்த விளையாட்டு. இப்படி ஜில் ஜிலீர் நடிகைகளின் தலையில்...

Close