ர- விமர்சனம்

இன்னும் எத்தனையெத்தனை செம்மறியாடுகளை காண நேருமோ என்கிற அச்சத்தோடுதான் உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், பீட்சாவுக்கு பின் வந்த ஆவிப்படங்களின் லிஸ்ட் இன்னும் முடிந்தபாடில்லை. இந்த ‘ர’ அதில் எத்தனையாவது படம்? இதுவும் அப்படியொரு படம்தான் என்றால், இதில் வேறென்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்று அசிரத்தையோடு உள்ளே போனால், ‘சாரே… நாங்கள்லாம் வேற மாதிரி’ என்கிறார்கள் இப்படத்தை உருவாக்கிய யங் டீம்!

கதையை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருந்தாலும், காட்சிக்கு காட்சி மிரட்டல் என்பதால், கதையின் பின்னால் ஓடாமல் மவுன சாமியாராகவே இருந்து படத்தை ரசிக்க முடிகிறது. லவ் மேரேஜ் செய்து கொள்ளும் ஹீரோ அஷ்ரப், தன் புது மனைவி அதிதி செங்கப்பாவுடன் வீட்டுக்கு வருகிறார். புதுமண தம்பதிகளுக்கு இடைஞ்சல் கொடுப்பானேன் என்று அம்மாவும் அக்காவும் வெளியேறிவிடுகிறார்கள். கதவை சாத்திவிட்டு கட்டிப்பிடிக்க நகர்ந்தால், வாசலில் பெல். நண்பர்களாம்! ‘வா.. மச்சி சரக்கடிக்கலாம்’ என்கிறார்கள். முதலிரவுக்கே மோசம் செய்துவிட்டு சரக்கடிக்க அமர்கிறார் அஷ்ரப். (அட போப்பா… பிஸ்கோத்து) அரை போதையுடன் காலையில் எழுந்து பார்த்தால் மனைவி மர்கயா!

போலீஸ், விசாரணை என்று கதை நொண்டியடித்து கரெக்டாக ஓரிடத்தில் ஸ்டார்ட் ஆகிறது. பேய்….! அந்த மோன நிலை மூடிலியே ஹஸ்கி வாய்சில் ஹீரோவை அழைக்கிறது அது. போகிற இடத்திலெல்லாம் மனைவியின் செல்போனிலிருந்து அழைப்பு வருகிறது. பார்த்தால், மனைவியின் அந்த போனும் தற்போது உபயோகத்தில் இல்லை. பிறகெப்படி? ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி மனைவி தொடர்ந்து அழைக்கிறாளே… மீட் பண்ணிவிடுவோம் என்று நினைக்கிற அஷ்ரப், பிரபல பேய் ஆராய்ச்சியாளர் உதவியுடன் அந்த மாய உலகத்திற்கு கிளம்புகிறார். போன இடத்தில் ஒழுங்காக வந்த வேலையை பார்க்க வேண்டியதுதானே? வழக்கம்போல மனைவியை விட்டுவிட்டு அங்கு தெரியும் வேறொரு கதவை தட்டி வைக்க, அங்கிருக்கும் தீய சக்தி இவரை கவர பார்க்கிறது. அதற்கப்புறம் என்னாச்சு என்பது க்ளைமாக்ஸ்.

அஷ்ரப்புக்கு இது முதல் படம் என்பதுதான் ஆச்சர்யமோ ஆச்சர்யம். சகலவித நடிப்புக்கலையையும் கற்று வைத்திருக்கிறார் மனுஷன். குளோஸ் அப்புகளில் திணறவே தேவையில்லாத அளவுக்கு முகம் ஒத்துழைக்கிறது. ஹீரோயின் அதிதி செங்கப்பாவுக்கு அதிக வேலையில்லை. அவரது லுக்கை பார்த்தால் இனிவரும் தமிழ்சினிமாவிலும் அவருக்கு வேலை இருக்காது என்றே தோன்றுகிறது. அஷ்ரப்பின் நண்பனாகவே வரும் லாரன்ஸ் ராமுவுக்கு சந்தேகம் வரவழைக்கிற கண்கள். அவரும் அவ்வபோது நகம் கடித்து நம்மை வலுவாக சந்தேகப்பட வைக்கிறார்.

இந்த படத்தின் ஹீரோ, கதையில்லை. காட்சியமைப்புதான். காலை 7.30 மணிக்கு ஊரே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, அஷ்வினுக்கு மட்டும் அது விடியாத அரைகுறை இரவாக காட்சியளிப்பதை அவ்வளவு சுவாரஸ்யமாக பிரசண்ட் செய்திருக்கிறார் டைரக்டர் பிரபு யுவராஜ். அஷ்ரப் வேறு உலகத்திற்கு சென்று அந்த சிவப்பு கதவில் கை வைக்கும் காட்சியும் அதற்கு முந்தைய சில நிமிட திகிலும் ஒளிப்பதிவாளர் ஆர்.சரவணனின் வேலைக்கு பெருமை சேர்க்கிறது.

நிமிஷத்திற்கு நிமிஷம் பாடல்களை வைத்து நோகடிக்காமல் ஒன்றிரண்டுடன் நிறுத்திக் கொண்ட சாமர்த்தியத்திற்காகவும் மெச்சலாம். இதுபோன்ற உயிரை எடுக்கும் பேய் ஜென்ம படங்களுக்கு, பின்னணி இசை சொதப்பினால், மொத்த படமும் அவுட். அதை உணர்ந்து உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன்.

இதே கதையை எல்லாருக்கும் புரியும்படியாக எடுத்திருந்தால், ர என்ற எழுத்தின் தமிழர்த்தம் போலவே, நம்மை ‘அபகரித்தல்’ செய்திருக்கும்! இருந்தாலும் நேர அபகரித்தல் லிஸ்ட்டில் இந்த படம் இல்லை என்பதுதான் ஆகப்பெரிய அ‘ர’ம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காக்க வைக்கும் ஸ்ருதி ! கவலைப்படுத்தும் ஷுட்டிங் ஸ்பாட்

யாருக்கும் அலவ்டு இல்ல! ஈசிஆர் சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் விஜய் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில்தான் இப்படியொரு கெடுபிடி. எல்லாருக்கும் அடையாள...

Close