நயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க! இப்ப என்ன செய்வீங்க?
கமிஷனர் பிள்ளையை கடை வீதியில் மடக்கிய கான்ஸ்டபுள் போல நிலைகுலைந்து போனார் ராதாரவி. அவர் வாயில் விழுந்து வதை பட்டவர்களும், உதை பட்டவர்களும், “இந்தாள திருத்த முடியாதுய்யா…” என்று ஒதுங்கிதான் போவார்கள். ஆனால் ஒரு சினிமா மேடையில் நயன்தாரா பற்றி ராதாரவி பேசிய சில வார்த்தைகள்தான் நயன்தாரா என்பவர் யார் … அவரது பராக்கிரமம் எப்படிப்பட்டது என்பதை நாட்டுக்கு நிருபித்தது.
அவர் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்குவதற்குள் புகார் தி.மு.க தலைமையின் கதவை தட்டியது. “என்னதான் இருந்தாலும் அவர் உங்க கட்சி ஆளு… நீங்களும் கேட்டுட்டு சும்மாதான் இருப்பீங்க” என்று நயன்தாரா தரப்பில் நல்ல கண்ணீர் வடிய வடிய… எதிர்க்கட்சி தலைவருக்கு ஏறியது பிரஷ்…ஷர்!
அன்றிரவே ஆக்ஷன் த்ரில்லர் அரங்கேறியது. மருத்துவமனையில் சாகப் பிழைக்க கிடக்கும் பேராசிரியர் அன்பழகன் தன் குளுக்கோஸ் குழாயை சிரமப்பட்டு அறுத்துக் கொண்டு அந்த டிஸ்மிஸ் கடிதத்தில் கையெழுத்திட்டார். ராதாரவி தற்காலிக நீக்கம் என்பதுதான் அந்த இடி.
அரண்டு போய் காலில் விழுவார் என்று தலைமை நினைத்திருக்கும். ஆனால், “நீங்க என்ன என்னை அரைகுறையா நீக்குறது. நானே வெளியேறிக்குறேன்” என்றார் ரவி.
தி.மு.க வின் தலைமைக்கழக பேச்சாளர்கள் சிலர் பேசாத அசிங்கத்தையா ராதாரவி பேசிவிட்டார்? என்றெல்லாம் கண்டனக் கனைகள் வந்தாலும், நயன்தாராவின் நல்ல கண்ணீர் முன் அவை எடுபடவே இல்லை. போகட்டும்… டுடே நிலவரம் டூ மச் இன்ட்ஸ்ட்ரஸ்ட்!
அதிமுக வில் ஐக்கியமாகிவிட்டார் அவர். “இவ்ளோ நாளா எங்கிட்ட ஏதும் விளக்கம் கேட்பாங்கன்னு பார்த்தேன். ஒண்ணும் கேட்கல. நானும் அப்படியே சும்மா இருக்க முடியாதுல்ல? இருபது வருஷமா அதிமுகவுலதான் இருந்தேன். திரும்பவும் இங்க வந்திட்டேன்” என்கிறார் ராதாரவி.
நயன்தாரா நடித்த படத்தின் நிகழ்ச்சி ஏதாவது இருந்தா சொல்லுங்க. பல மாதங்களாக மூடி வச்ச பிரியாணியை ஒரே டேக்ல ஓப்பன் பண்ணணும்!