ஜெயராமனை வாழ்த்தினார்களா ‘ பல ’ ராமன்கள்?
ரஜினியின் நிழலாகவே இருந்தவர் ஜெயராமன். அவருடன் தொடர்பிலிருந்த அத்தனை பேருக்கும் தெரியும் ஜெயராமனின் பணியும், பணி நேரத்தில் அவருக்குள்ளிருக்கும் பணிவும். ரஜினி லெப்ட்டில் திரும்பினால் என்ன அர்த்தம்? ரைட்டில் திரும்பினால் என்ன அர்த்தம் என்பதெல்லாம் ஜெயராமனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள். இப்படி பத்து வருடங்களுக்கும் மேலாக அவருடன் டிராவல் செய்த ஜெயராமனுக்கு திடீரென அவரை விட்டு விலக வேண்டிய நிர்பந்தம். விலகினார்.
ரஜினிக்கு நிழலாக இருந்தவர் என்கிற ஒரே ஒரு சென்ட்டிமென்ட் போதாதா? பொசுக்கென அவரை தனது நிழலாக்கிக் கொண்டார் விஜய். விஜய்யை எங்கு பார்த்தாலும் அவருடன் ஜெயராமன் இருப்பார். இப்படியும் ஒரு பத்தாண்டுகள் ஓடியது அவருக்கு. இப்படி இருபெரும் சூப்பர் ஸ்டார்களுக்கு துணையாக இருந்த ஜெயராமனை இன்டஸ்ட்ரிக்கும் தெரியும். இன்டஸ்ட்ரி பற்றி ஜெயராமனுக்கும் புரியும். நிழல் எப்போது நிஜமாவது என்று நினைத்திருக்கலாம். தனக்கே தனக்கென ஒரு சினிமா கம்பெனியை திறந்திருக்கிறார் அவர்.
ரஜினியே வணங்கும் எஸ்.பி.முத்துராமன், நக்கீரன் இதழின் நிறுவனர் கோபால் ஆகியோர் இவரது புதிய முயற்சிக்கு நேரில் வந்து பாராட்டும் ஊக்கமும் அளித்துவிட்டு போயிருக்கிறார்கள். ரஜினி லிங்காவுக்காக மைசூரிலிருந்தாலும், விஜய் கத்திக்காக மும்பையில் இருந்தாலும், அவர்களின் நல்ல மனசு அங்கிருந்தே ஜெயராமனை வாழ்த்தியிருக்கும் என்று நம்புவோமாக!