அப்ப எட்டு இப்ப ஆறுதான்! இறங்குகிறதா ரஜினியின் செல்வாக்கு?
ரஜினியின் லிங்கா டீசர் வெளிவந்துவிட்டது. முதல் நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்மல்ல என்று குதிக்கிறது புள்ளிவிபரம். தலைவரோட ஸ்டைலும் நடையும் ஆஹ்ஹா… என்று சந்தோஷப்படுகிறது ரஜினி ரசிகர்கள் கூட்டம். ஆனால்?
என்ன ஆனால்? இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸ் ஆறு கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறதாம். ஈராஸ் நிறுவனம்தான் இந்த ஆடியோவை வாங்கியிருக்கிறது. ரஹ்மான், ரஜினி, ரவிகுமார் என்ற மூன்று ர-க்களுக்கான மரியாதை இம்புட்டுதானா? அதுவும் ரஜினி மகள் சவுந்தர்யா தலைமை பொறுப்பில் இருக்கும் ஈராஸ் நிறுவனம் இவ்வளவு கம்மி விலைக்கா ஆடியோவை வாங்குவது? என்றெல்லாம் திரையுலம் இருமிக் கொண்டிருக்கிறது.
ஏம்ப்பா… ஆறு கோடிங்கிறது அம்புட்டு கம்மியா? இப்படி புலம்புறீங்களே என்றால், ‘எந்திரன் படத்தின் ஆடியோ உரிமை எட்டு கோடிக்கு போச்சு தெரியுமா?’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க நவம்பர் 9 ந் தேதி ஆடியோ வெளியீட்டு விழா என்கிற அரசல் புரசல் தகவல்களுக்கும் ஆப்பு. ரஹ்மான் சார் தாமதப்படுத்துவதால் விழா சொன்ன தேதியில் நடக்குமா தெரியலையே என்று கையை பிசைகிறது லிங்கா குரூப். அது ஷங்கர் படம். இது கே.எஸ்.ரவிகுமார் படம்.
சந்தையில கீரை விக்கறதுக்கும், மந்தையில எருது விக்கறதுக்குமான வித்தியாசம் இருக்குல்ல?