ரஜினி மன்றங்கள் கணக்கெடுப்பு! அரசியலில் புதுப்புது பாதைகள் புலப்படுமா?

‘அந்த ஆண்டவன்தான் தீர்மானிக்கணும்’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து இம்போசிஷன் எழுதுவது போலவே சிங்கிள் டிராக்கில் பதிலளித்து வரும் ரஜினி, இனிமேலும் அந்த ஒரே பதிலை சொல்லி ரசிகர்களை வெறுப்பேற்ற மாட்டார் என்று நம்புவோமாக!

சொத்துக்குவிப்பு வழக்கில் அம்மாவை உள்ள தள்ளியாச்சு. 2ஜி வழக்குல திமுக வையும் அப்படியே உள்ள போட்டுட்டா தமிழ்நாட்ல இருக்கிற வெற்றிடத்தை நிரப்புறது யாரு?

இப்படி அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு கூட்டலும் கழித்தலுமாக ஏகப்பட்ட கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் விஜயகாந்தின் தேமுதிகவினர். அவர்களுக்கு ‘நஷ்ட கனவு லேகியம்’ கொடுப்பதற்கென்றே கிளம்பியிருக்கிறது ஒரு தகவல். அதுதான் ரஜினி மன்றங்கள் புதுப்பிக்கப்படுகின்றன என்ற விவகாரமான செய்தி. தேர்தல் நேரத்திலேயே ‘நீங்க தமிழக பா.ஜ.கவுக்கு தலைமை வகிக்கணும்’ என்ற அசைன்மெட்டுடன் ரஜினியை சந்தித்தார் மோடி. கழுத்தை சுத்துற வலையை நறுக்குன்னு கடிச்சுட்டு எஸ்கேப் ஆகுற கலையை கடந்த பல்லாண்டு காலமாகவே அரசியலில் நடத்திக்காட்டி வரும் ரஜினி, வழக்கம் போலவே மேலே கையை காட்டி, ‘அங்க இருக்கிறவன் சொல்லணும்’ என்று பதிலளித்து அனுப்பிவிட்டார்.

அவர் சொன்ன ‘அங்க இருக்கிறவன்’, சொத்துக்குவிப்பு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி.குன்ஹாதான் போலிருக்கிறது. அரசியலில் இனி வேறு பாதைகள் புலப்படப் போகின்றன என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். எல்லாவற்றையும் உடைத்து தள்ளிவிட்டு வருகிற அளவுக்கு ஜெயலலிதாவுக்கு மனதளவில் தெம்பு இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்ன செய்யப் போகிறதோ? இந்த நேரத்தில்தான் அப்படியொரு செய்தி.

தமிழகம் முழுவதிலும் இருக்கிற ரஜினி மன்றங்கள் புதுப்பிக்கப்படுகின்றனவாம். மன்றத்திலிருக்கிற உறுப்பினர்களின் கணக்குகள் எடுக்கப்படுகின்றன. சில மாவட்டங்களில் ரசிகர் மன்ற கூட்டங்கள் ஜரூராக நடைபெற ஆரம்பித்திருக்கிறது. இந்த திடீர் எழுச்சியை சந்தேக கண்ணோடு நோக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.

ரஜினி ரசிகர்களின் இந்த திடீர் எழுச்சி லிங்கா ரிலீசை ஒட்டியா? அல்லது நிஜமாகவே வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா?

காத்திருக்கின்றன கவர் ஸ்டோரிகள்!

Read previous post:
MGR Sivaji Rajini Kamal Press Meet Stills

Close