கண் தொறந்தாரு ஏழுமலையான்! காலை வாரிடுச்சே விதி? ரஜினியால் திகைத்த தயாரிப்பாளர்!

சினிமாவில் தொழிலை தொழிலாக நினைத்து தெய்வ பக்தியுடன் செய்தாலும், நஷ்டம் கதவை தட்டி ‘நல்லாயிருக்கியா?’ என்று நக்கலடிக்காமல் போகாது. ஒரு காலத்தில் குடும்ப படங்களாக எடுத்து பெயரையும் பொருளையும் சம்பாதித்த அந்த தயாரிப்பாளருக்கு அதற்கப்புறம் தொழிலில் பயங்கர நஷ்டம். எப்படியோ நம்பிக்கையோடு காலத்தை நகர்த்தி வந்தவருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஒரு மொழி மாற்று பட உரிமை மூலமாக கிடைத்தது. மலையாளத்தில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம் ஒன்றின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்தாராம் அவர். சமீபத்தில் அந்த படத்தை பார்த்திருக்கிறார் ரஜினி.

‘அட… இதை நாம ரீமேக் பண்ணலாமே? பொருத்தமா இருக்குமே, உடனே வாங்குங்க’ என்று தனது தளபதிகளிடம் கூற, அவர்களும் சம்பந்தப்பட்ட ஏரியாவில் விசாரித்திருக்கிறார்கள். பார்த்தால்..? படம் நம்ம சொந்த தோட்டத்துக்கு பக்கத்து தோட்டத்துலேயே பழமா கிடக்குது! அப்புறமென்ன? நம்ம தயாரிப்பாளரை அழைத்து, இந்த ‘படத்தின் ரீமேக் உரிமையை தர்றீங்களா?’ என்றார்களாம். ‘இல்லயில்ல. இதுல ரஜினி சார் நடிச்சா நானே தயாரிக்கிறேனே’ என்றாராம் அவர். ஒருவழியாக பேச்சு வார்த்தை முடிந்து ரஜினியும் தன் திருவாயால் ‘உங்களுக்கு கால்ஷீட் தர்றேன். வேலைய ஆரம்பிங்க’ என்று கூறியிருந்தாராம். ஸ்பாட்டிலேயே ரஜினிக்கு இவ்வளவு சம்பளம் என்று பேசி முடித்துவிட்டார்கள்.

ஏற்கனவே தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு கவலையிலிருந்தவருக்கு, அந்த ஏழுமலையானே கண் திறந்த சந்தோஷம். உடனடியாக களத்தில் இறங்கிவிட்டார். பரபரவென வேலைகள் ஓடின. இதற்கிடையில் தொடர்ந்து ரஜினியை சந்தித்தும் வந்தாராம். திடீரென இவரை அழைத்த ரஜினி, ‘நம்ம படத்தை அப்புறம் வச்சுக்கலாம். இப்போதைக்கு வேற படத்தை பண்ணிக்கிறேன்’ என்று கூறிவிட, இப்படி பாதிக்கிணறு தாண்டிய மாதிரியாகிருச்சே நிலைமை என்று அதிர்ந்தே போனார் இந்த தயாரிப்பாளர். நடுவில் புகுந்து குழப்பியது யாராக இருக்கும் என்றும் விசாரித்திருக்கிறார்.

இருந்தாலும் ரஜினியை நேரில் சந்தித்து தனது மனக்குறையை சொல்லி, இந்த புது முயற்சிக்கு எங்கெல்லாம் ஆதரவு இருந்தது. எப்படியெல்லாம் பண பரிமாற்றம் நிகழவிருந்தது என்பதை விளக்கப் போகிறாராம். அதற்கு வாய்ப்புகள் இல்லை என்றால் கண்ணீர் மல்க ஒரு கடிதத்தையாவது கொடுத்துவிட வேண்டும் என்று துடிக்கிறாராம்.

பொக்கிஷ அறையின் கதவை திறந்து காட்டிவிட்டு இப்படி ஒரேயடியாக சாத்தி விடுவாரா ரஜினி? அவர் சொன்னால் சொன்னதை செய்பவராயிற்றே? பார்க்கலாம்… அடுத்தடுத்த நிகழ்வுகளை!

Read previous post:
மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு கால்ஷீட்! நயன்தாரா முடிவால் முன்னணி ஹீரோக்கள் ஷாக்?

நயன்தாரா போல ஒரு விஷயத்தை மேஜிக் பண்ணுகிறவர்கள் யாரும் இல்லை. அதனால்தான் இத்தனை வருட காலம் அவரால் திரையுலகத்தில் நிலைத்து நிற்க முடிகிறது. ஒரே குட்டையில் மட்டையாக...

Close