அப்பா, அம்மா, மனைவி சகிதம் வாக்களிக்க வந்த அஜீத்
ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுங்கள் என்று மக்களுக்கும் ரசிகர்களுக்கும் சொல்லி வந்த அத்தனை நட்சத்திரங்களும் இன்று வாக்கு சாவடிக்கு அதிகாலையிலேயே வந்து வாக்களித்தார்கள். ரஜினி, கமல், அஜீத், விஜய், என்று நீண்ட இந்த பட்டியலில் ரஜினி முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டதுதான் கவனிக்க வேண்டிய செய்தி.
‘நான் இந்த கட்சிக்குதான் ஓட்டு போட்டேன்’ என்று கடந்த முறை கூறியது போல கூறாமல், வேறொரு பதிலை கூறி ஆச்சர்யமூட்டினார் ரஜினி. தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என்றார்கள் நிருபர்கள். அதற்கு பதிலளித்த ரஜினி, ‘நான் யாரையும் ஆதரிக்கவில்லை’ என்றார். அவரது இந்த பதில் மோடி கட்சிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இருந்தாலும், ரஜினியின் இந்த பதிலை இன்னும் ஒரு வாரத்திற்காவது அலசி ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் அரசியல் விமர்சகர்கள்.
கடந்த முறை வரிசையில் நின்று வாக்களித்தது போலவே இந்த முறையும் வரிசையில் நின்று வாக்களித்தார் அஜீத். அவருடன் அவரது மனைவி ஷாலினியும் அஜீத்தின் தாய் தந்தையரும் வந்திருந்தார்கள். விஷால், ஜீவா ஆகியோர் இன்று பிற்பகல் வாக்களிக்க வருவதாக நிருபர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.