ரஜினியை கலங்கடிக்க அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை!

முன்குறிப்பு – இது ரஜினி அரசியலுக்கு வருவார் என்றோ, வரவேண்டும் என்றோ வெறும் கமர்ஷியலுக்காக எழுதப்பட்டது அல்ல. ஆனால் ரஜினியை சுற்றி நிகழும் அரசியலை பற்றியது.

ரஜினி அரசியல் இரண்டையும் சேர்த்து ஏகப்பட்ட யூகங்கள் பரவி இருந்த காலம் அது. ஒரு பத்திரிகை பேட்டியில் நிருபர் கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்க ரஜினி பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக ரஜினியை மடக்கும் விதமாக அந்த கேள்விக்கொக்கியை போட்டார் நிருபர். ‘’தமிழன் ஒருவன் தான் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வரவேண்டும் என்று சிலர் சொல்கிறார்களே?’’ இதைக் கேட்டதும் ரஜினியின் முகம் சுருங்கி போனது. இதற்கு எந்த பதில் சொன்னாலும் அது அவரை சிக்கலில் மாட்டிவிடும். சில நொடிகளில் சுதாரித்த ரஜினி அளித்த பதில் ‘’நல்லது தானே.. ஒரு முதலியாரோ,தேவரோ,நாடாரோ வரணும்னு சொல்லாம, தமிழன் வரணும்னு தானே சொல்றாங்க… கரெக்ட் தான்…’’. இந்த சமயோசித பதிலை எதிர்பார்க்காத அந்த நிருபருக்கு ரஜினி மீது வைத்திருந்த மரியாதை அப்போது உயர்ந்திருக்கும்…

ரஜினியை கலங்கடிக்க அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. அவரது இனம், மொழி, மாநிலம் பற்றி வந்த சர்ச்சைகள் தான் ரஜினியை அதிகம் கலங்கடித்தவை. மேற்கண்ட சம்பவத்தை கூட ஒருமுறை ரஜினி எதிரிலேயே வைரமுத்து ஒரு மேடையில் நினைவுபடுத்த உணர்ச்சிமயமாகி கண்கலங்கிவிட்டார். கர்நாடகாவில் ஒரு சாதாரண கண்டக்டராக இருந்த தன்னை தமிழ்நாடு தான் உயர்த்தி பார்த்தது. இதை எத்தனையோ இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால் ஒருபக்கம் தன்னை முதல்வராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் ரசிகர் கூட்டம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ரஜினி தமிழர் இல்லை என்று சொல்லி அவரை முடக்கப் பார்க்கும் கூட்டமும் இங்கே தான் இருக்கிறது. இதுதான் வைரமுத்துவின் ஆதங்கம்.

இந்த பக்கம் இப்படி இருக்க, அந்த பக்கம் அதாவது ரஜினி பிறந்த மண்ணிலும் அவருக்கு நிம்மதி இல்லை. ஒரு ஷூட்டிங்கை கூட நடத்த விடாமல் துரத்துகிறது கர்நாடக கும்பல். இந்த லிங்கா பட ஷூட்டிங்குக்கு எத்தனை பிரச்னைகள், எத்தனை இன்னல்கள்?

லிங்கா படத்தின் படப்பிடிப்பை மைசூரில் தொடங்கும்போது படப்பிடிப்புக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டன கன்னட அமைப்புகள்.ரஜினிக்கு மிகவும் பிடித்த ஊர் மைசூர். அங்கே இருக்கும் அரண்மனைகளில் தான் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை அது மட்டும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று போராடியதோடு ரஜினியின் கொடும்பாவியை எதிர்க்கும் அளவுக்கு தீவிரமானது எதிர்ப்பு..காரணம் காவிரி விஷயத்தில் ரஜினி தமிழகத்துக்கு ஆதரவாக இருப்பது தான்.

மைசூரில் எதிர்ப்பு வந்ததால் ஹைதரபாத் கிளம்பி போனது படக்குழு. அங்கேயும் பிரச்னை. அனஞ்பூர் என்னும் கிராமத்தில் படம் பிடித்தபோது அருகில் இருக்கும் நீர் நிலைகளில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்று பிரச்னை தந்தார்கள்.

இப்போது திரும்ப மைசூர் அருகே ஷிமோகா மாவட்டத்தில் லிங்கனாக்கி என்னும் அணைக்கு அருகில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த முறை கோரிக்கையை முதல்வர் வரை எடுத்து சென்றிருக்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். எடுக்கப்பட்ட பட ரீல்களையே பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்னும் அளவுக்கு முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு என்று புகார் வந்தபோதெல்லாம் ரஜினியே பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தந்து இடத்தை மாற்ற சொல்லியிருக்கிறார். இருந்தாலும் கூட படமாக்கப்பட்ட ரீல்களை பறிமுதல் செய்ய வேண்டும். அதாவது ரஜினி படத்தில் கர்நாடக பகுதிகள் இடம் பெற்றுவிடக்கூடாது என்ற ரீதியில் எதிர்க்கிறார்கள். இத்தனைக்கும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சொல்லும் இடங்களில் ஏற்கெனவே பல படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இருந்தும் இப்போது ரஜினிக்கு மட்டும் எதிர்ப்புகள் வரக் காரணம் தண்ணீர் அரசியல்.

லிங்கா படத்தின் கதை தண்ணீர் அரசியல் பற்றியது என்று அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன. கலெக்டராக வரும் ரஜினி தனது மக்களின் நலனுக்காக ஒரு அணை கட்ட முயற்சிக்கிறார். முல்லை பெரியாறு அணையை பென்னி குவிக் எப்படி கட்டினார். அதே போல ஒரு அணையை கட்டி தண்ணீர் விடுவதை சீராக்க நினைக்கிறார் ரஜினி. ஆனால் அதனை தவறாக புரிந்துகொண்ட மக்கள் தங்கள் தண்ணீரை மற்ற மாகாணங்களுக்கு அளிக்க ரஜினி திட்டமிடுகிறார் என நினைத்து அவரை பழிக்கின்றனர். ஒரு கட்டத்தில் ரஜினியின் முயற்சி கைவிடப்பட்டு, அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்படுகிறது. இந்த கவலையிலேயே ரஜினி இறந்துவிடுகிறார். அதன் பிறகு அந்த பகுதி மக்கள் அணை இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அப்போது தான் ரஜினியின் அருமை தெரிகிறது. அந்த அணையை ரஜினியின் மரபில் வந்த இப்போதைய ரஜினி மீண்டும் கட்டி முடிப்பதே மீதி கதை. ஆக, தண்ணீர் அனைவருக்கும் பொது. அதனை ஒரு மாநிலம் மட்டும் சொந்தம் கொண்டாடுவது தவறு என்ற நல்ல நோக்கத்தோடு தான் கதைக்கரு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தெரிந்துகொண்ட அந்தந்த மாநில அமைப்புகள் தான் தங்களது சுயரூபத்தை இந்த படம் படம் போட்டு காட்டிவிடும் என்பதால் படத்துக்கு கடும் எதிர்ப்புகளை தருகிறார்கள். படம் வெளியாகும் தருணத்தில் சட்ட ரீதியாக குடைச்சல் தர அவர்கள் தயாராகி வருவதாகவும் கேள்வி. லிங்காவில் இருக்கும் மெசேஜ் நிச்சயம் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் பிற மாநிலங்களுக்கு சவுக்கடியாக அமையட்டும்.

ஆனால் ரஜினி எந்த அரசியல் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று நாம் பேசுவதற்கு முன் ரஜினியை நாம் ஆதரிக்க வேண்டும்! ஏனென்றால் எத்தனையோ பிரச்னைகளில் ஒரு தமிழனாகத் தான் குரல் கொடுத்திருக்கிறார் அவர். அந்த நன்றிக்காகவாவது…

– ஷிவா

3 Comments
 1. kumar says

  Don’t try to create sympathy for Rajani, tell me what he has done for the tamilnadu people.if you say Rajani is a good person , I can show you many genuine tamil politicians in tamilnadu.again and again we don’t want other language people to rule our tamilnadu.vairamuthu may say some think for his popularity but look round other states in India and how they are electing there chief minister.

  1. mathan says

   he doesnt hurt sentiments of majority of people in tamilnadu, OBC s, dalits and Muslims

 2. ராமலிங்கம் says

  தலைவா!!! நீங்கள் ஒன்றும் கவலை பட வேண்டாம். உங்கள் மனதை நோகடித்தவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள். நாசமாகத்தான் போவார்கள். உங்கள் பக்கம் சத்தியத்தின் பக்கம் அந்த ஆண்டவனும் உண்மையான ரசிகர்களும் தமிழ் மக்களும் உள்ளனர். கவலை வேண்டாம். மேலே உள்ள ஆண்டவன் பார்த்துகொண்டு தான் இருக்கிறான். கெட்டவர்களை நிச்சயம் அழிப்பான்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சுருட்டி வச்சுட்டு சும்மாயிருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?

திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வந்தாருப்பா... அதற்கப்புறம் அவரே நடிக்கக் கிளம்பி பெரிய பெரிய ஹீரோக்களின் பொல்லாப்பை சம்பாதிச்சாருப்பா... இப்ப? படமும் இல்ல. அழைப்பும் இல்ல! யாருன்னு தெரியுதா?...

Close