பவர் ஸ்டாரை பார்த்து ரஜினி மிரள வேண்டிய நேரம் போலிருக்கு! அடுக்குமாப்பா இதெல்லாம்?

எல்லா படத்திலும் எப்படி இளையராஜா பாடலை ஆங்காங்கே ஒலிக்க செய்து பிழைப்பு நடத்துகிறார்களோ, அப்படிதான் ஆகிவிட்டார் ரஜினியும். சந்தானம் கூட தான் ஹீரோவாக அறிமுகமான படத்தில் ரஜினி ஸ்டைலில்தான் நடிக்கிறார். நின்றால், நடந்தால் விஷ்க் விஷ்க் என்று ஒலியெழுப்பி ஸ்டைலாக விரல் சுழற்றி அவராகவே மாறிவிடும் இவர் போன்ற ஹீரோக்களுக்கு சம்பந்தப்பட்ட ரஜினி எவ்வித கட்டுப்பாடோ, கன்னா பின்னா ‘திட்டு’ப்பாடோ செய்வதில்லை.

போகட்டும்… இப்போது பவர் ஸ்டார் சீனிவாசனும் ரஜினியை காப்பியடிக்கிறார் என்பதுதான் அலேக் அதிர்ச்சி. அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் ஜெ இயக்கும் ‘கிடா பூசாரி மகுடி’ படத்தில்தான் ஜானி படத்தில் வரும் ரஜினியை போல இமிடேட் செய்து நடிக்கிறாராம் பவர் ஸ்டார். ‘இதுக்கு ரஜினி எதிர்ப்பு தெரிவிச்சா என்னா பண்ணுவீங்க?’ என்று ஜெயக்குமாரை கேட்டால், ‘ரஜினி சார் மாதிரி நடிக்கிறாரே ஒழிய, ரஜினி சாருக்கு அவமரியாதை ஏற்படுத்துற மாதிரி நடிக்கல சார் அவர். இந்த படத்தில் பவர் ஸ்டார் நடிச்சிருக்கிற அழகை பார்த்தால், ரஜினி சாரே சந்தோஷப்பட்டு கைதட்டுவார்’ என்றார் தீர்மானமாக.

முறை பெண்ணை காதலிக்கிற ஹீரோ, அவளை விட்டுக் கொடுத்துவிட்டு பூசாரியாகிவிடுவதுதான் கதையாம். காவல் தெய்வங்களுக்கே பல கோவில்களில் காவலாக இருக்கிற சாமிக்குதான் மகுடி என்று பெயர். அது போல இந்த படத்தின் ஹீரோவுக்கும் ஒரு குணம் இருக்கிறது. அதனால்தான் கிடா பூசாரி மகுடி என்று இந்த படத்திற்கு பெயர் வைத்தோம் என்றார் ஜெயக்குமார்.

எண்பது சதவீத படத்தை முடித்துவிட்டு இசைஞானி இளையராஜாவிடம் கொண்டு போய் காட்டினாராம். ‘இளைஞர்களே… உங்களுக்கு நான் இருக்கேன். வாருங்கள்’ என்று இளையராஜா ஒரு முறை கூறியிருந்தாரல்லவா? அதை ஞாபகப்படுத்திவிட்டு தன் படத்தையும் போட்டுக் காட்ட அனுமதி கேட்டாராம் ஜெயக்குமார். அதற்கப்புறம் படத்தை பார்த்த இளையராஜா இசையமைக்க சம்மதித்தாராம். படத்தில் எங்கெங்கே பாடல்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் அவரே சொல்லி, அந்தந்த இடங்களுக்கு பொருத்தமான பாடல்களையும் உருவாக்கி கொடுத்திருக்கிறார் . ‘அவர் கை வச்சதும் படத்தின் பெருமையே இன்னும் கூடிப் போச்சு’ என்கிறார் ஜெயக்குமார்.

ஒரு காதல் படத்திற்கு இப்படியொரு தலைப்பு? ரொம்ப வெவகாரமான டைரக்டரா இருப்பாரோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலை வணங்கிட வைத்துவிடும்!

ஒரே நாள் ஓப்பனிங் ஷோவில் தலையெழுத்தையே மாற்றிவிடும் சக்தி சினிமாவுக்கு மட்டும்தான் உண்டு. நேற்று வரை நீ யாரோ, இன்று முதல் நீ வேறொ என்று ரசிகர்கள்...

Close