ரஜினியின் லிங்கா சென்ட்டிமென்ட்!
ஈயடிச்சான் காப்பி என்பதை பிலிமடிச்சான் காப்பி என்று மாற்றுகிற அளவுக்கு சென்ட்டிமென்டும், ரிப்பீட்டும் தலை விரித்தாடும் ஏரியா சினிமாவுலகம்தான். போன படத்தில் நெத்தியில விபூதி விட்ருந்தேன். படம் ஹிட். இந்த படத்தில் நாமம் போட சொல்றீங்களே, விபூதி ஓ.கே வா என்றெல்லாம் கேட்டு வியப்படைய வைப்பார்கள் ஹீரோக்கள். டைரக்டரும் வேறு வழியில்லாமல் தலையாட்டி வைப்பார். இப்படி ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால், அதே படத்தில் வரும் பல காட்சிகளை லேசாக மாற்றி எடுப்பது கோடம்பாக்கத்தின் வழக்கங்களில் ஒன்று.
தமிழ்சினிமா வியாபாரத்தை தாறுமாறாக உயர்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினியே இந்த சென்ட்டிமென்ட்டுக்கு தப்பியதில்லை. அவர் படத்தில் ரயில் சண்டைக்காட்சி ஒன்று இருந்தால் அந்த படம் சூப்பர் ஹிட் என்கிற நம்பிக்கை நிலவி வருகிறது. இதற்காகவே ஒரு ரயில் பைட்டை இணைக்க விரும்புவாராம் ரஜினியும். முரட்டுக்காளை, எந்திரன் என்று பழசிலும் புதுசுமாக சில எடுத்துக்காட்டுகளை சுட்டிக்காட்டும் கோடம்பாக்கம், இப்போது கசிய விட்டிருக்கும் தகவல்…. அதேதான்!
லிங்கா படத்திலும் ஒரு ரயில் பைட் இருக்கிறது.
பொதுவாக தென்னக ரயில்வேயாக இருந்தாலும் சரி, வடக்கத்திய ரயில்வே கோட்டமாக இருந்தாலும் சரி, ரயில் காட்சிகள் எடுப்பதில் ஓவர் கெடுபிடி காட்டுவார்கள். ஆனால் ரஜினி படம் என்பதற்காக சற்றே கெடுபிடிகளையும் தளர்த்திக் கொண்டிருக்கிறது ரயில்வே துறை. இந்த படத்தில் ரஜினி, கலெக்ட்ராக நடிக்கிறார் என்பதும் உபரி தகவல்கள். ஒரு காலத்தில் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் ரஜினிதான் நடிக்க வேண்டியது. அவர் முதல்வராகிறார் என்கிற மாதிரி கதை இருந்ததால், தேவையில்லாத சர்ச்சை எதற்கு என்று ஒதுங்கிக் கொண்டார். இந்த படத்தில் ரஜினி கலெக்டராக நடிக்கிறார் என்றாலே நாம் புரிந்து கொள்ள வேண்டியதுதான். அவர் சகாயம் ஐஏஎஸ் சின் ஜெராக்ஸ் ஆக வருவார் என்று.
பொதுவாக முதல்வர் கேரக்டர் என்றாலே ரிஸ்க்! ஆனால் கலெக்டர் கேரக்டர் ரஸ்க்!