மிச்ச மீதி பிரச்சனைகளும் ஓவர்! 800 தியேட்டர்களில் ரஜினி முருகன்
எல்லா பிரச்சனைகளும் முடிந்தது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து கொண்டேயிருந்தாலும், நடுவுல யாராவது குழி வெட்டி வச்சுருப்பாங்க என்கிற சந்தேகத்தோடு கவனிக்கப்பட்ட படம் ரஜினி முருகன்! பல முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட காரணத்தால், இந்த முறையும் அப்படியொரு ஆபத்தை சந்திப்பான் ரஜினி முருகன் என்று சிலர் கொளுத்திப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் ஒருபுறம் விடிய விடிய பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டேயிருந்தது.
இன்று அதிகாலை நிலவரப்படி சந்துக்குள் இருந்து மிரட்டி வந்த கோர்ட், வழக்கு, தடை, கோபதாப பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு கட்டிவிட்டார்களாம். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் பஞ்சாயத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். இவர்களை தவிர, விநியோகஸ்தர் சங்கம், திரையரங்க உரிமையாளர் சங்கம் என்று வலுவான சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் வந்து அமர்ந்து கொள்ள, ‘ஸ்பாட் ரெமெடி’ என்று முடிந்ததாம் ஒவ்வொரு பிரச்சனையும்.
இந்த முறையும் சிவகார்த்திகேயனுக்கு வழுக்கல் என்று நம்பிக் கொண்டிருந்த சிலருக்கு, மேற்படி தடைகளெல்லாம் உடைபட்டதுதான் ஒரே கவலை! சுமார் 800 தியேட்டர்களில் வெளிவரவிருக்கிறது ரஜினிமுருகன். ஆச்சர்யம் என்னவென்றால், பொங்கலுக்கு வெளிவரும் வேறு எந்த படத்திற்கும் இந்தளவுக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை என்பதுதான்!