ரஜினி முருகன் விமர்சனம்

“இப்படியொரு திருவிழா யானையை இத்தனை மாத காலமாக, ஈர சாக்கு போட்டு மூடி வச்சிருந்தது ஏன்ங்க?” என்று கேட்காமல் ஒரு ரசிகனும் வெளியே வரப்போதில்லை. அப்படியொரு கலகல கமர்ஷியல் படம்! இரண்டரை மணி நேரம் சிட்டாக பறக்கிறது! போரடிக்கிறது என்ற விமர்சனம் ஒரு பிரேமில் கூட ஒருவர் வாயிலிருந்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அப்படி மெனக்கெட்டிருக்கிறார் டைரக்டர் பொன்ராம். கலகல, மொறு மொறு, விறுவிறு திரைக்கதைக்குள் பொருத்தமாக உட்கார்ந்து கொள்கிறார்கள் படத்தில் நடித்த அத்தனை பேரும்! சும்மா பாசிங்கில் கடந்து போகிற கேரக்டர் கூட, ஒரு சிரிப்பு வெடியை கொளுத்தி தியேட்டருக்குள் எறிந்துவிட்டு போகிறது அசால்ட்டாக.

வெட்டியாக திரியும் ரஜினி முருகனுக்கு, அதே ஊரிலிருக்கும் கார்த்திகாதேவி மீது காதல்! வேடிக்கை என்னவென்றால், ‘ரஜினி முருகன்’ என்று ஆசை ஆசையாக பெயர் வைத்தவரே அந்த கார்த்திகாதேவின் அப்பாதான். இரு அப்பாக்களுக்கும் நடுவில் வந்த சண்டையில் பிள்ளைகளும் பேசாமல் பிரிந்து போக, அந்த ‘காயா பழமா’ கணக்கை வாலிப வயசிலேயும் கன்ட்டினியூ பண்ணுகிறார் ரஜினிமுருகன். இவர் ஹீரோயினை விரட்டி விரட்டி காதலிக்கிற சம்பவங்கள் ஒருபுறம் நடந்து கொண்டேயிருக்க, அதே ஊரிலிருக்கும் போர் ட்வென்ட்டி ஒருவன், ரஜினி முருகனின் தாத்தா சொத்தில் பங்கு கேட்க கிளம்புகிறான். எல்லாவற்றையும் முறியடித்து சொத்தையும் காப்பாற்றி கார்த்திகாதேவியையும் ரஜினிமுருகன் கைபற்றினாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்!

மதுரை குறும்பையெல்லாம் மணக்க மணக்க சொல்லியிருக்கிறார் பொன்ராம். அவர் எதை நினைத்து எழுதினாரோ, அதை தன் அப்பாவி முகத்தாலும், அசால்ட்டான பாடி லாங்குவேஜாலும் நிஜமாக்கிக் கொடுத்திருக்கிறார் ரஜினிமுருகனான சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷை மடக்க அவர் செய்யும் அத்தனை முயற்சிகளுக்கும் விலா நோகிற அளவுக்கு சிரிப்பு நிச்சயம். அதுவும் கீர்த்தி வீட்டு முன்னாலேயே ஒரு டீக்கடையை போட்டு இவரும் சூரியும் அடிக்கிற கும்மாளத்திற்கு தியேட்டரே குதியாட்டம் போடுகிறது. ‘எவ்வளவு மூக்குடைச்சாலும், காதலுக்காக பொறுத்துக்குவோம்ல’ என்கிற அவரது மேஜிக், பெண்களுக்கு கொள்ளை கொள்ளையாய் பிடித்துப் போகும்! அவ்வளவு ஜாலியான ஹீரோவை, அந்த இமேஜ் கெடாமல் பைட் போட்டு பறக்கவிடவும் வைக்கிறார்கள். (அதுவும் வேணும்ல!)

சிவகார்த்திகேயனை பார்க்கும் போதெல்லாம் சள்ளென்று எரிந்து விழுந்தாலும், அவர் நகர்ந்ததும் சிரித்துக் கொள்ளும் கீர்த்தி, வெகு சீக்கிரம் இவரிடம் விழுந்துவிடுவார் என்பது நமக்கு தெரிந்தாலும், அந்த கோபத்தை ரசிக்க முடிகிறது. கண்டிப்பான அப்பாவுக்கே தெரியாமல் டீக்கடைக்கு வந்து இவர் ருசி காட்டிவிட்டுப் போகும் அழகே அழகு!

அதென்னவோ தெரியவில்லை, சிவகார்த்திகேயனுடன் சேரும்போதெல்லாம் சூரியின் சிரிப்புக்கு 100 சதவீத கியாரண்டி கிடைத்துவிடுகிறது. இவரும் லவ்வுக்கு அலைந்து கடைசியில் ஒரு பாரின் ஃபிகரை கரெக்ட் பண்ணுகிற காட்சி நம்ப முடியாவிட்டாலும், ரகளை சாமி!

படத்தின் முதுகெலும்பே சமுத்திரக்கனிதான். எத்தனையோ வில்லன்களை பார்த்த தமிழ்சினிமாவுக்கு இந்த வில்லத்தனம் சற்றே புதுசு. மிக அசால்ட்டாக அந்த கேரக்டரை சுமக்கிறார் கனி. ஒரு சின்ன டவலை தோளில் போட்டுக் கொண்டு அவர் காரிலிருந்து இறங்குகிற அழகென்ன? “25 ஆயிரம் ரூபா கம்மியா கொடுத்துருக்கான். அந்த பைக்கை கொளுத்திவிட்ரு” என்று கட்டளை போட்டுக் கடந்து போகும் திமிரென்ன? படுதோல்விக்கு பிறகும், அந்த கெத்தை விட்டுக் கொடுக்காமல் அவர் நடக்கும் அந்த பைனல் நடை என்ன? டிக்கெட் காசுல பாதி உங்களுக்குதான் சமுத்திரக்கனி!

ராஜ்கிரண் செத்துப் போகிற காட்சியில், ஐயோ… ரொம்ப சின்னக் கேரக்டரா இருக்கு. இதுக்கா நடிக்க ஒப்புக் கொண்டார் அவர் சந்தேகம் எழ, சில நிமிஷ நேரத்தில் அந்த சந்தேகத்தில் சந்தோஷம் தடவுகிறார் பொன்ராம். சாவு கெட்டப்பிலிருந்து அவர் எழுந்து உட்காருகிற அந்த காட்சி செம செம்ம!

படத்தில் நம்மால் மறக்க முடியாத அந்த நபர், ஒரு வாழைப்பழம் வாங்குவதற்காக சிவகார்த்திகேயன் டீக்கடைக்கு வரும் அந்த ஆள்தான். என்னவொரு கெத்து? என்னவொரு பேச்சு. “இப்பதான்யா கரக்காட்டக்காரன் படத்துல ரூவாய்க்கு ரெண்டு பழம் கொடுத்தாங்க. அதுக்குள்ள நீ விலையேத்திட்டியா?” என்கிற நக்கலும், “இந்த பழத்தை பிய்க்க கேரளாவுலேர்ந்து ரெண்டு யானையவா பிடிச்சுட்டு வரமுடியும்” என்கிற அசால்ட்டும், அதை உச்சரிக்கும் மாடுலேஷனும் சும்மா தெறிக்க விட்டிருக்கிறார் மனுஷன்.

“அதென்னய்யா தோத்தாத்ரின்னு பேரு வச்சுருக்க, ஜெயிச்சா த்ரின்னு வை. இல்லேன்னா ரவி சாஸ்திரின்னு வை” என்று படம் முழுக்க சொல்லி சொல்லி அடிக்கும் அந்த காமெடி பேனாவுக்கு யார் சொந்தக்காரரோ? நிக்க வச்சு சுத்திப் போடுங்கப்பா…

மதுரையில் நாட்டாமைகள் எந்த ரேஞ்சுக்கு கிடைக்கிறார்கள் என்கிற விஷயம், புனைவோ, நிஜமோ… ஆனால் கலக்கிட்டாய்ங்க! அதுவும் பஞ்சாயத்தை கலைத்துவிட அந்த மூன்று நாட்டாமைகளும் செய்யும் அந்த யுக்தி, கத்தியை விட கூர்மையா இருக்கே?

டி.இமான் இசை, மயங்க வைக்கும் மெலடிகளாலும், அதிர வைக்கும் துள்ளல்களாலும் மனசுக்குள் வழிய வழிய நிறைந்திருக்கிறது. பாலசுப்ரமணியத்தின் கேமிராவுக்கும் ஒரு சூடம் கொளுத்தலாம்.

ரஜினியின் பெயரை படத்தில் சேர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அவருக்கும் நல்ல மரியாதை செய்திருக்கிறார்கள்.

ரஜினி முருகன்- ரகளை முருகன்!

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. dinesh says

    padam super..siva kalakittaru…pongal winner rajini murugan…

  2. ஷீலா says

    ரஜினி முருகன் வசூலில் சாதனை முருகன்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஸ்ருதிஹாசனை அரை டவுசரோடு பார்க்கணுமா? யோசிக்காம உள்ள வாங்க!

அதென்னவோ தெரியவில்லை, பக்கத்து ஸ்டேட்டில் ‘காத்தாட’ திரியும் நடிகைகள் பலர், நம்ம ஊர் ஏர்போர்ட்டில் இறங்கிய நிமிஷம் தொட்டே இழுத்துப் போர்த்திக் கொள்கிற கெட்ட வழக்கம் எல்லா...

Close