‘என்னை மகனாக பாவித்தவர் கே.பி.சார்… ’ அஞ்சலி செலுத்தியபின் ரஜினி பேச்சு
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. அவரது படங்கள் எப்படி போற்றக் கூடியதோ, அப்படியே அவரால் படைக்கப்பட்டவர்களும் போற்றப்பட்டவர்களாக திகழ்ந்தார்கள். ரஜினி, கமல், விவேக், என்று முத்து முத்தான உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். சமூகத்தில் முற்போக்கு கருத்துக்களை துணிச்சலாக சொன்ன கே.பி யின் மறைவை தமிழ் திரையுலகம் பேரதிர்ச்சியோடு எதிர் கொண்டிருக்கிறது. இன்று ஆழ்வார்ட்பேட்டை வாரன் சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் தமிழ் திரையுலகமே குவிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரது உயிர் பிரிந்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவு செய்தியை கேள்விப்பட்டவுடன் வெளிநாட்டில் உத்தமவில்லன் பட வேலைகளில் இருந்த கமல்ஹாசன், அங்கிருந்து சென்னை விரைகிறார். பிற்பகல் 2 மணியளவில் அவரது உடல் அடக்கம் நடைபெறவுள்ளது. அதற்குள் கமல் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே ஓடோடி சென்று அவரது உடல் நலம் விசாரித்த ரஜினி, அவரது மறைவுக்கு பிறகு அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
அப்போது பேசிய ரஜினிகாந்த், “கே.பி. சாரின் மறைவு தமிழ் சினிமாவிற்கே ஈடுகட்ட முடியாத இழப்பு. கே.பி. சார் மனித ரூபத்தில் வாழ்ந்த கடவுள். என்னை ஒரு நடிகனாக அல்ல, தனது மகனாகவே பாவித்தார். கே.பி. சார் போன்று இன்னோருவரை பார்க்க இயலாது. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.