பேய் முழி நடிகர்கள் உடனே நாட வேண்டிய அட்ரஸ்?
அடையார் பிலிம் இன்ஸ்டியூட்டில் இப்போது நடிப்பு பயிற்சிக்கு இடமில்லை. ஏன்? நிறுத்தப்பட்டுவிட்டது! கூத்துப்பட்டைறைகள் ஓவர் டைம் போட்டு நடிகர்களை உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இன்னமும் திரையில் தோன்றி பேய் முழி முழிக்கும் நடிகர்களும் நடிகைகளும் ரசிகர்களுக்கு இம்சை கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்? நடிப்பு பயிற்சி அவசியம் தேவை என்பதையுணர்ந்து மைண்ட் ஸ்கிரின் என்ற நடிப்பு பயிற்சி கல்லூரியை துவங்கியிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளரும் மின்சார கனவு படத்தின் இயக்குனருமான ராஜீவ் மேனன். 2006 ல் துவங்கப்பட்ட இந்த மைண்ட் ஸ்கிரீன், வெறும் ஒளிப்பதிவையும், திரைக்கதை பயிற்சியையும் மட்டும் சொல்லிக் கொடுத்து வந்தது. இந்த வருடத்திலிருந்து நடிப்பு பயிற்சியையும் சொல்லித்தரப் போகிறார்களாம்.
அதுமட்டுமல்ல, கூத்து, களரி, சண்டைப்பயிற்சி எல்லாமே இங்கு சொல்லித்தரப்பட இருக்கிறது. தலைவாசல் விஜய், தேசிய விருது பெற்ற அர்ச்சனா, பிரதாப் போத்தன் போன்ற அனுபவம் மிக்க நடிகர் நடிகைகளை கொண்டு பயிற்சி வகுப்பை எடுக்கப் போகிறார்கள்.
கேமிராவுக்கு முன்னால் நின்று நடிக்கும் நடிகர்கள், அதில் பொருத்தப்பட்டுள்ள லென்ஸ் என்ன வகையானது. எவ்வளவு தொலைவில் நின்று பேச வேண்டும் என்பதையெல்லாம் கூட கற்றுக் கொள்வது முக்கியம். எங்கள் நிறுவனம் எல்லாவற்றையும் சொல்லித்தரும் என்கிறார் ராஜீவ் மேனன்.
ஸ்கிரின்ல வந்து அச்சமூட்டும் அனுபவமற்ற நடிகர் நடிகைகள் உடனே அணுக வேண்டிய முகவரி, ராஜீவ் மேனனின் மைண்ட் ஸ்கிரின்!