ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்

விமர்சனம்

 

‘கொழுப்பு கட்டி மறையணும்னா குப்புறக் கிடந்து உருளு…’ என்று சினிமாவை போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறது விதி. தியேட்டரை திறந்தா கொரானா. தியேட்டரை திறந்தாலும் வருவேனா… என்று ஸ்டிரைக் அடிக்கிறான் ரசிகன். மீறி உள்ளே வந்தாலும், ‘கருத்தா சொல்ற?’ என்று விழிகளை உருட்டி எச்சரித்த ரசிகனுக்கு ‘கமர்ஷியல் காட்றேன்’ என்று புண்ணாக்கை அரைத்து புளியோதரை ஊட்டுகிறார்கள் பல பல இயக்குனர்கள். இவர்களுக்கு நடுவேதான் ஒரு பளிச் பளிச் பல்ப். அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி நாட்டு நடப்பை காட்சிக்கு காட்சி போட்டு பொளந்திருக்கிறார். சற்றே அறுவை ரகமாக இருந்தாலும், ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கும் கருத்தும், சாட்டை வீச்சுகளும் ‘காலத்துக்கு தேவையான கர்லா கட்டைடா’ என்று பாராட்ட வைப்பதுதான் படத்தின் ப்ளஸ்.

செல்லமாக வளர்க்கும் கருப்பன் வெள்ளையன் என்று இரண்டு காளை மாடுகளை காணவில்லை. பிள்ளை போல வளர்த்த காளைகளை தொலைத்துவிட்டு கண்ணீரும் கம்பலையுமாக தவிக்கிறது தம்பதி மனசு. தேடக் கிளம்புகிற ஹீரோவுக்கு காளைகள் கிடைத்தனவா? கடத்தியது யார்? நடுவிலே அவர் சந்திக்கும் துயரங்கள் என்னென்ன? என்பதுதான் முழு படமும்.

காளையை தொலைத்துவிட்டு தவிக்கும் அந்த அப்பாவி தம்பதி ரம்யா பாண்டியனும், மிதுன் மாணிக்கமும். அப்பாவி பேஸ்கட்டும், அலைபாயும் உடல் கட்டுமாக கொடுத்த கேரக்டரை உணர்ந்து நிரப்புகிறார் மிதுன். ஆனால் பல காட்சிகள் செயற்கையாகவும் இருக்கிறதே, என்ன செய்ய? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ‘என் புள்ளைகங்களை காணும்’ என்று புகார் கொடுப்பதெல்லாம் கொழுப்பன்றி வேறென்ன? (மாடுன்னு சொல்ல மாட்டாராம்) மாட்டுக்கு லாடம் கட்டுகிற போது அழுது புலம்பி தவிப்பதும், அதே மாடுகளை இன்னொருவன் அடிக்கும்போது பாய்ந்து குதறி மினிஸ்டரின் மேல் விழுந்து பகையை இழுத்துக் கொள்வதுமாக ஆவரேஜ் மார்க்கும் மேல் அள்ளுகிறார் மனுஷன்.

ரம்யா பாண்டியனுக்கு அளந்து தைத்த ஜாக்கெட் போல அமைந்திருக்கிறது இந்த கேரக்டர். தாய் வீட்டு சீதனமாக வரும் கன்றுக்குட்டிகளை அவர் தன் பிள்ளை போல வளர்ப்பதும், மினிஸ்டரென்றும் பாராமல் நறுக்கு தெரித்தார்போல பேசுவதும் ‘பின்னிட்டேம்மா…’

இப்படி ஒரு டாகுமென்ட்டரி படத்தை, ‘பார்க்கு’மென்ட்ரி படமாக மாற்றுவதே பிரபல யூ ட்யூபர் கோடங்கி வடிவேல்தான். மனிதர் வாயை திறந்தாலே மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பேதி மாத்திரையை பார்சேல் அடிக்கிறார். முதல் படம் இது. ஆனால் துளியளவு கூட அந்த தயக்கமோ, மயக்கமோ இல்லை. இன்னும் பல மடங்கு பாய்வார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

ஊரே ஒரு விஷயத்தில் மூழ்கிக் கிடக்கும் போது தான் மட்டும், தானுண்டு… தன் மண் வெட்டி உண்டு என்று குளம் வெட்டுகிறாரே… ஒரு பெரியவர்? அந்த கேரக்டர் மனசை நிரப்புகிறது.

இந்தப்படத்தின் ஆகப்பெரிய ஆறுதலே அவ்வப்போது வந்து போகும் கலக்கல் கேரக்டர்கள்தான். சமகால அரசியல்வாதிகளின் சாயலில் வரும் அவர்களும், அவர்கள் பேசும் டயலாக்குகளும் ஆயிரம் வடிவேல்களுக்கு சமம். நா.த.க தம்பிகளை சூடேற்றும் ஒரு காட்சி. அண்ணன் சீமானை அப்படியே உள்வாங்கிக் கொண்டு ஒருவர். அந்த பாடி லாங்குவேஜ் என்ன, டயலாக் என்ன, அப்படியே சீமானை பிரதியெடுத்திருக்கிறார். இருந்தாலும், உங்க நக்கலுக்கு ஒரு அளவில்லையா பாஸ்?

முள்ளங்கி சாம்பாரில் விழுந்த முந்திரிக்கொட்டையாக வாணி போஜன். துறுதுறு செய்தியாளர் என்பதைவிட, சொரணையற்ற மீடியா பீல்டில் ஒரு சொர்ணாக்கா என்றால் பொருத்தமாக இருக்கும்.

காளைமாடு, கிராமம், குளம், பச்சை பசேல் என்று காட்சிகள் நகர நகர எவ்வளவு நாளாச்சு இப்படியொரு படம் பார்த்து என்கிற சந்தோஷம் கொப்பளிக்கிறது. அதே நேரத்தில் மாடு சண்டை போடுகிற காட்சியெல்லாம் ராமராஜன் காலத்துக்கு கொண்டு போகிறதே தலைவா?

ஆர்.டி.ஐ யில் கேள்வி கேட்டால், ஊரை காப்பாற்றலாம் என்கிற மெசேஜ் அழுத்தமாக பதிய வைக்கப்பட்டுள்ளது. சபாஷ். பட், நடக்குமா?

காளை மாடு களவாடப்பட்டது… அதை தேடி தேடி திரிந்த ஒருவன் கடைசியில் அதை எங்கு கண்டுபிடித்தான் என்பது ஒன்லைனாக இருந்தாலும், ரொம்ப தின் லைனாக இருக்கிறது திரைக்கதை. அதை கொஞ்சம் திக் லைன் ஆக்கியிருந்தால் விழுந்து விழுந்து கைதட்டியிருக்கலாம்.

ஹ்ம்ம்… தியேட்டர்களை ஆண்டிருக்க வேண்டிய படம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரொம்ப பயந்துட்டியா கொமாரு? சைக்கிளோடு ஒரு பல்டி

Close