யேய்… யாருப்பா அது ரம்யாவுக்கு தொல்லை கொடுக்கறது?

பீட்சா வெற்றிக்கு பிறகு பீட்சா டெலிவரி பாய்கள் போல விறுவிறுவென வேகம் காட்டினார் விஜய் சேதுபதி. ஆனால், அப்படத்தின் ஹீரோயின் ரம்யா நம்பீசனுக்கு பெரிசாக வாய்ப்புகளும் வரவில்லை. வெற்றியும் நெருங்கவில்லை. ‘எந்த இடத்துல கோட்டை விட்டீங்க பொண்ணு?’ என்றால், ‘நமக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். அதை விட்டுட்டு அங்கே இங்கேன்னு ஓடி ஓடி தவிச்சாலும் பெரிசா ஒண்ணும் நடந்துடாது. பட்… நமக்குன்னு வரப்போற அந்த நல்ல நேரத்துக்காக நான் வெயிட் பண்ணிகிட்டேயிருக்கேன்’ என்றார் விரக்தியாக. ‘பீட்சா ரிலீஸ் நேரத்தில் நான் வெளிநாட்டுக்கு போயிட்டேன். ரெண்டு மாசம் அங்கேயே இருந்திட்டேனா? இங்க என்னை தேடி வந்த வாய்ப்புகள் எல்லாம் வேற ஹீரோயின்களுக்கு போயிருச்சு’ என்ற கூடுதல் விளக்கமும் கொடுத்தது கிளி.

பொதுவாக பிரமோஷன்களுக்கு வரத் தயாராக இருப்பதில்லை ஹீரோயின்கள். ஆனால் ‘டமால் டுமீல்’ பிரமோஷனுக்காக வந்திருந்த ரம்யா, மனம் விட்டு பேசிய வார்த்தைகள்தான் முந்தைய வரிகள்.

ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீ என்பவர் இயக்குகிற படம்தான் டமால் டுமீல். வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன். கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே ஆகிய இரண்டு கொடூரர்களிடம் சிக்கிக் கொண்டு ஓட்டமாக ஓடுகிற ஒரு அப்பாவி வாலிபன் கேரக்டரில் நடிக்கிறார் வைபவ். படத்துல சீரியஸ்னஸ் இருக்கும். ஆனால் பார்க்கிறவங்க விழுந்துவிழுந்து சிரிப்பாங்க என்றார் ஸ்ரீ. ‘இந்த படத்தின் கதையை எழுதிவிட்டு யாரை ஹீரோவாக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் மங்காத்தா பார்த்தாராம். அதில் வைபவ் செய்திருக்கும் பர்பாமென்ஸ் என்னை அசர அடித்துவிட்டது. உடனே அவரை தேடிப்பிடித்து புக் பண்ணிவிட்டேன்‘ என்றார்.

வைபவிடம் பேசினால், கிட்டதட்ட ரம்யா நம்பீசனின் மறு குரலாகவே இருக்கிறது அது. சார்… வெங்கட் பிரபு படங்களில் கேமியோ ரோல்ல நடிக்க கூப்பிடுவாங்க. தனி ஹீரோவா நடிக்கணும்னு ஆசை இருந்தாலும் நான் முயற்சி செஞ்சது இல்ல. ஆனால் இப்போ வாய்ப்புகள் தானாவே வருது. நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிருச்சுன்னு நினைக்கிறேன். ஏன்னா, நயன்தாராவுடன் நான் நடித்த கஹானியின் தமிழ் வெர்ஷனான நீ எங்கே என் அன்பே படமும் இந்த மாசம்தான் ரிலீஸ். டமால் டுமீலும் இந்த மாசம் ரிலீஸ். நான் கொடுத்து வச்சவன் என்கிறார்.

மீண்டும் ரம்யாவிடம் திரும்பினால், இவர் பாடிய ஃபைவ் ஃபைவ் பாடல் பற்றி பேச ஆரம்பிக்கிறார். ‘அந்த பாடலை நான் பாடும்போது இவ்வளவு பெரிய ஹிட்டாகும்னு நினைக்கவேயில்ல. நான் முறைப்படி கர்நாடிக் மியூசிக் கற்றவள். இப்போ நிறைய படங்கள்ல பாட கூப்பிடுறாங்க. மறுக்காமல் பாடி கொடுக்கிறேன். இந்த படத்தில் கூட ஒரு பாட்டு பாடியிருக்கேன். தமிழ்ல நடிக்கறதைவிட மலையாளத்தில் நடிக்கறதுதான் கம்பர்ட்டா இருக்கு. சொந்த லாங்குவேஜ் என்பதால் கூட இருக்கலாம்’.

‘தமிழ்ல நடிச்சா சம்பளம் நிறைய கிடைக்கும். பட்… கம்பர்ட் ரொம்ப முக்கியமாச்சே’ என்றார். யேய்… யாருப்பா அது, ரம்யாவுக்கு தொல்லை கொடுக்கறது?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தொலைந்துபோன கிரெடிட் கார்டுகளை அழிக்க புதிய தொழில்நுட்ப முயற்சி

கிரெடிட் கார்டுகள் போன்றவை தொலைந்துபோனால் பாதுகாப்பாக உடனே அவற்றை அழித்துவிட உதவக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் பணியாற்றி வருகின்றார். ஐயோவா...

Close